|
|
||||
|
சந்தசுவாமிகள் (James Ramsbotham) |
||||
|
கஸ்தூரிமான் இனிய வாசனையால் கவரப்பட்டுக் கால்விசைத்தோடும். ஓடிக்களைத்து ஓரிடத்தின் படுத்துக்கிடக்கும். அப்போது அவ்வினியவாசனை தன்னிடத்தேயேயுள்ளதை அறிந்து அமைதியுறும். சந்தசுவாமிகள் பரலோகராச்சியக் கவர்ச்சியால் பூலோகமெங்கும் ஓடியலைந்தார். ஈற்றில் கொழும்புத்துறைக் கொட்டலிலே யோகசுவாமிகளது காலடிக்கீழ் ஆறுதலாக அமர்ந்திருந்தார். சுவாமிகள் பரலோகராச்சியம் உன்னுள்ளே உள்ளதே எனக் காட்டி வைத்தார். அக்கண்டறியாதகாட்சியைக்கண்டு சந்தசுவாமிகள் உளங்குளிர்ந்து உபசாந்தராயினார். |
||||
|
அவர் இங்கிலாந்து நாட்டுக் கண்ணியமான பிரபுக்குடும்பத்தில் பிறந்து வளர்ந்தார். இளமையில் நல்லொழுக்கசீலமுடைய வைதிகக் கிறித்தவனாக வளர்ந்தார். மெய்ப்பொருள் காண்டற்குரிய கல்வியை விழைந்த அவர் ஒக்ஸ்போட் பல்கலைக்கழகத்தில் தத்துவஞானத்துறையில் சேர்ந்து சிரத்தையுடன் படித்தார். அப்படிப்பு பட்டத்தை அளித்ததேயன்றி சத்தியதாகத்தைத் தணிக்கவில்லை. அவர் அத்தாகத்தோடு அந்நாளில் உண்மைத்தேட்டத்தில் உழைப்பவர்கள் என ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும் பிரபலம் பெற்றிருந்த குறுட்ஜீவ் குழுவினருடன் சேர்ந்துபாடுபட்டார். அக்குழுவில் அதேதாகத்துடன் அங்கத்துவம் வகித்த மங்கைநல்லாள் ஒருவரை அவர் வாழ்க்கைத்துணையாகக் கொண்டதும் தெய்வசித்தம் போலும். |
||||
|
||||
|
கொழும்புத்துறைக் கொட்டிலிலும், சிவதொண்டன் நிலையத்திலும், மார்க்கண்டு சுவாமிகள் உறைந்த கைதடி ஆசிரமத்திலும் வைத்து அவரைப் படிப்படியாக வளர்த்தெடுத்தார். அவருக்குச் சுவாமிகள் கூறிய முதன் மொழி ஆதியில் அச்சொல் இருந்தது . எனத் தொடங்கும் பைபிள் வாசகமே. தான் ஆயிரக்கணக்கான முறை செபித்ததும், பாதிரிமார் வாயிலாகக் கேட்டதுமான அவ்வாசகம் சுவாமிகளது வாய்மொழியாக மலர்ந்த அப்பொழுதே அதன் மெய்ப்பொருளுடன் பொலிந்ததை அவர் அனுபவித்து மகிழ்ந்தார். சுவாமிகள் பைபிள் வாசகங்களின் அடிப்படையிலே அவருக்கு உபதேசம் செய்ததுடன் அவ்வுபதேசங்களை அவருக்குப்பழக்கமான மொழி மரபிலும் கூறினார். கயிற்றைக் கைவிடு காண்டாமிருகம் போன்றிரு என்றவண்ணம் அவர்மொழிகள் அமைந்தன. தத்துவப்படிப்பும், குறுட்ஜீவ் சிந்தனைகளும், சூபிவாசகங்களும், பிடக மொழிகளும் மண்டிக்கிடந்த அவர் மூளையைச் சுவாமிகள் குளப்பு குளப்பெனக் குளப்பிக் கலக்கித் தெளியவைத்தார். அவர் அகத்தே ஆழப்பதிந்திருந்த அகந்தை முள்ளைச் சுவாமிகள் இன்னோர் கூரிய முள்ளினாலேயே எடுத்தெறிந்தார். அதன் பொருட்டுச் செல்லப்பர் தமக்குச்செய்த ஞானவைத்திய முறையினையே சுவாமிகள் கையாண்டனர். ஒரு சந்தர்ப்பத்திலே காலனெனக் கறுத்துச் சீறிய சுவாமிகளது குத்துமொழியைப் பெற்றுக்கொணாத அவர் கொட்டிலைவிட்டு வெளியேறிச்சென்றார். வீதியில் விரைந்து செல்லும் அவரை மதில் மேல் தலையை நீட்டி எட்டிப்பார்த்த சுவாமிகள் மாயக்கிருஸ்ணனின் கள்ளச்சிரிப்புடன் எங்கே போகிறாய்? எனக் கேட்டார். எங்கேனும் போகிறேன் எனக் கூறிச் சென்ற அவரால் எங்கு போக முடியும். அகந்தைமுள்ளை எங்கோ போகவிட்டு முள் எடுபட்ட சுகத்துடன் ஆறுதலாக மீண்டும் வந்து சுவாமிகளது காலடியில் சாந்தமாக அமர்ந்தார். அவரிடம் சுவாமிகள் அறிய வேண்டும் என்ற எண்ணமும் ஒப்படைக்கவேண்டும். அப்பொழுதுதான் வாலறிவனின் அறிவு வெளிப்படும் பரமபிதாவின் சித்தமே நிகழ்வதைத் தெளிய முடியும். பரலோகராச்சியம் உள்ளேயேயிருக்கும் மருமம் வெளியாகும் என்றருளினார். |
||||
|
||||
|