|
|
||
|
மார்க்கண்டுசுவாமிகள் |
||
|
“பூவில் வண்டு தேனைக் குடிக்கும் போது ஒரு சத்தமும் போடமாட்டாது. சில முத்தர்கள் புத்திமதிகளைக் சொல்லுவார்கள், வேறு சிலர் மௌனமாக இருந்து விடுவார்கள்.” மார்க்கண்டுசுவாமிகள் “வண்டுகள் பூவைக்கிண்டித் தேனை உண்டு ஒன்றுமறியாது கிடப்பதுபோல் சித்தமாகிய பூவைச் சிவத்தியானத்தினால் கிண்டி ஆங்குவரும் ஆனந்தத்தேனையுண்டு ஒன்று இரண்டு நன்று தீதென்றறியாமல் (மௌனத்தில்) தேக்கிக் கிடந்த” சீவன் முத்தராவார்.
சிவயோகசுவாமிகள் இம்மோன முனிவரைத் தேடியாண்டனர் என்பதே பொருத்தமானது. பிரமச்சரியவிரதம், திருமுறைப்பற்று, ஆசையாம்பேயால் அலைக்கழிக்கப்படாமை, சிவனடியாரைச் சிவனென வணங்கும் சீலம் ஆதியவற்றால் அவரடைந்திருந்த தீவிரபக்குவம் சுவாமிகள் அவரைத் தேடி ஆள்வதற்குக் காரணமாயிற்று. |
||
|
||
|
கருணைக்கடலான சுவாமிகளது அகத்திலிருந்து பெருகிய அருள்மொழிகள் மந்திரசத்தியுடன் மார்க்கண்டு முனிவருக்கு நேரிய- கிட்டிய வழியைக்காட்டின. பக்தி (நித்திய வஸ்துவில் நிலைக்கும் தீவிரதாகம்) நிர்வாணம் (ஆசை அனைத்தையும் அடியோடு அகற்றிய வைராக்கியம்) இரண்டும் போதும் எனச் சுவாமிகள் அவருக்குச் சொன்னார். இந்தப் பக்தி, நிர்வாணம் இரண்டினாலும் பரிசுத்தமான மனம் ஒன்றே திருவடி சேர்வதற்குப் போதுமானதென இன்னொருபோது சொன்னார். |
||
|
||
|
சுவாமிகள் தமது குருவின் அக்கினிப்பிரவேச வேளையில் நடந்துகொண்டது போலவே மார்க்கண்டு சுவாமிகளும் சுவாமிகளது திருவடிக்கலப்பு நிகழ்வுகளில் கலந்து கொள்ளாதவண்ணம் இரண்டு மூன்று நாட்கள் எங்கோ மாயமாய் மறைந்திருந்தார். சுவாமிகளது திருவடிக்கலப்பின் பின்னர் சுவாமிகளது அன்பர் பலர் மார்க்கண்டுசுவாமிகளது திருவடிகளில் வீழ்ந்து கும்பிடலாயினர். அவர்களுக்குத் தமது நெஞ்சப் புத்தகத்தில் இருந்த நற்சிந்தனைப் பாக்களைக் கூறியதன்றித் தம் வாக்காக அவர் ஏதும் கூறியதில்லை. அவர் சுவாமிகள் என்னும் பேராது நிற்கும் பெருங்கருணைப் பேராற்றில் மூழ்கித் தனது சுயத்தை முற்றாக இழந்திருந்தார். அவர் சிவயோக சோதியொன்றையே தரிசித்திருந்ததுபோல் சுவாமிகளின் அடியவர்கள் அச்சோதியைத் தரிசிப்பதற்கான திசைகாட்டியாகவும் அமைந்தார். செங்கலடி சிவதொண்டன் நிலையத்தில் சுறுசுறுப்பாய்ச் சிவதொண்டு புரிந்த சந்தசுவாமிகள் நன்மோன நிறைவை நாடியபோது கைதடி ஆச்சிரமத்துக்கு வந்து அவரோடு கூடி உறைந்தது இதற்குத் தக்க சான்றாயமைந்தது.
மார்க்கண்டுசுவாமிகள் இரத்தாட்சி வருடம் வைகாசித்திங்கள் கார்த்திகை நாள் (29-05-1984) சமாதியுற்றனர். கைதடி ஆச்சிரமத்தில் அவர் புரிந்த திருவடி வழிபாடு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. |
||
|