|
சுவாமிகளது திருவாயினின்றும் மலர்ந்த ஒரு நவமொழி அநுபவசித்தாந்தம்.
இச்சித்தாந்தம் இடமகன்ற ஞாலத்தே காலங்காலமாகத் தோன்றிய மகான்கள்
யாவரும் தங்கள் அநுபவத்திற் கண்ட ஏக உண்மையை எடுத்துரைப்பது. இது
நூதனவிவேகியர் நூலறிவினாற் கட்டுரைத்த தத்துவம் யாவற்றையும் தன்னுள்
அடக்கியிருப்பதுடன் அத்தத்துவங்களுக்கு எட்டாததாயுமிருப்பது.
போதனையிலும் சாதனைக்கு முதன்மை கொடுப்பது; உண்மையைப் போன்று
எளிமையானது; ஆதலால் உண்மையையறியச் சாதனை புரியும் சத்துக்களுக்கு இதுவே
உகந்த தத்துவமாம்.
நற்சிந்தனைத் திருநூலின் முகப்பிலே நிழற்பட உருவில்
பொறிக்கப்பெற்றிருக்கும் சுவாமிகளது திருமுகம் அநுபவசித்தாந்தம்
என்னும் இந்நவமொழியைக் கொண்டிருப்பதுடன் அநுபவசித்தாந்த சாரமாகவும்
உள்ளது. ஆதலால் அத்திருமுகம் இங்கு அவ்வாறே எடுத்தாளப்பட்டுள்ளது.

(நீ
உடம்பன்று,
மனமன்று,
புத்தியன்று,
சித்தமன்று,
நீ ஆத்மா. ஆத்மா ஒரு நாளும் அழியாது. இது மகான்களுடைய
அநுபவசித்தாந்தம். இந்த உண்மை உனது உள்ளத்தில் நன்றாய்ப் பதியக் கடவது.
ஆனால் நீ கவனிக்க வேண்டியது ஒன்றுண்டு,
அதாவது தருமநெறியிற் பிசகாதே. எவ்வுயிரும் பெருமான் திருமுன்னிலை என்று
சாதனை செய்,
கடவுள் உள்ளும் புறம்பும் உள்ளவர். இப்படிக்கு அவனே நானே.)
இத்திருமுகம் பொய்யாயினவற்றையெல்லாம் இதுவன்று இதுவன்று என்று
‘நேதி’
நியாயத்தால் போக்குகின்றது. உண்மையைத் தொட்டுக்காட்டி அதனை நன்றாக
நெஞ்சிற் பதிக்கிறது. தருமநெறி பிசகாமையை வற்புறுத்துகிறது. சாதனையின்
அந்தரங்கத்தைச் சுட்டிக்காட்டி நிற்கும் இத்திருமுகவாசகம்
‘சாதனையியல்’
என்னும் ஓர் இயலை விரித்து உரைத்தற்கு இடந்தந்து நிற்பது. கடவுளைப்
பற்றிக்கூறும் முடிப்புமொழியோ எனின்
“முன்னிலையில்
இன்றித் தன்னிலையில் யாவும்;
அதுதான் சுற்றிச் சுற்றிச் சுப்பருடைய கொல்லை”
என்ற வண்ணம் கடவுட் தத்துவத்தின் முடிந்த முடிபான உண்மையைக் குறிகாட்டி
நிற்பது.
சுவாமிகளது அநுபவசித்தாந்தத்தில் மூடத்தனத்துக்கு இடமில்லை. இது சுருதி,
யுக்தி,
அனுமானம் ஆதிய இன்னோரன்ன நியாயங்களை அனுசரித்துச் செல்வது. சுவாநுபூதி
பெற்ற தத்துவக்கணக்கரால் மாத்திரம் செம்மையாகக் கட்டுரைத்தற்கு
இயல்வது.
சுவாமிகளது அநுபவசித்தாந்தத்ததை ஒருவாறு விளங்கிக் கொள்ளும் பொருட்டுச்
சுவாமிகளது மொழிகள் சிலவற்றிற்கு குறிப்புரைகளை இங்கே தருகின்றோம்.
|