முகப்பு

ஆயிலியப் பிரசாதம்

       (ஆயிலியம் - புதன்- 08-02-2012)

செல்வக் குருநாதா!

 

செல்வக் குருநாதா! செல்வக் குருநாதா!

சிந்தைதடு மாறுதெடா! திருவருளைத் தந்திடெடா        

 

அல்லலெல்லாம் நீக்கி யாளாக்க வேண்டுமெடா

எல்லையில்லா வின்பத்திலே யெனையிருத்தி வைத்திடெடா

 

கல்லை நிகர்த்தமனங் கரையவரந் தந்திடெடா

தொல்லைவினை நீக்கிச் சுகமெனக்கே யீந்திடெடா     

 

நீயேநா னென்னும் நிச்சயத்தைக் காட்டிடெடா

பேயேபோல் நானிருந்து பிரமைகொள்ள வைத்திடெடா      

 

அங்குமிங்கு மோடி யலைந்து திரிகிறேன்டா

எங்குமுனைக் காண வெனக்குவரந் தந்திடெடா             

 

வலைப்பட்ட மான்போல் மயக்கமிக வாகுதெடா

சிலைப்பட்ட பாண்டம்போற் சித்தஞ் சிதறுதெடா         

 

எனக்குள்ளே நீயிருக்கும் எழிலைத்தான் காட்டிடெடா

உனக்குள்ளே நானிருக்கு முண்மையிலே மாட்டிடெடா       

 

பேசாத மந்திரத்தின் பெருமைநீ தந்திடெடா

ஆசா பிசாசை யகற்றவழி காட்டிடெடா                                    

 

என்னோ டுடன்பிறந்தா ரெல்லோரும் மாண்டார்கள்

உன்னுறவே யல்லாம லோருறவு மில்லையெடா          

சுவாமி! மாறி நின்று எம்மை மயக்கிடும் சிந்தை வழியே சென்று எம் நிச சொரூபத்தை அறியாமல் அங்குமிங்கு மோடி யலைந்து திரிகிறோம். கொம்பரில்லாக் கொடிபோல அலமந்து திரிகின்ற எம்மைத் தடுத்து எம்முள்ளே நீங்களிருக்கும் எழிலைக் காட்டி, எல்லையில்லா இன்பத்திலே எமையிருத்தி வைப்பதற்குத் தயைபுரிக.


உரிமை பதிவு © 2010-2011 சிவதொண்டன் சபை