யாக நாள்

சிவதொண்டன் நிலையத்திற் சேர்ந்து தன்னையறிய முயல்வார்க்ககெனச் சுவாமிகள் ஏற்பாடு செய்த ஒரு தவகாரியம் யாகம். யாகம் என்பதற்குப் பொதுவாகக்கொள்ளும் பொருள் அக்கினி காரியம் என்பது. சுவாமிகள் கொள்ளும் பொருளோவெனின் ’மனத்தைச் சுடலையாக்கி எழுகின்ற எண்ணங்களை அச்சுடலையிலே எரித்து சோதிசொரூபமாயிருக்கும் நம் உண்மை நிலையை உணர்தற்கான அகவேள்வி’ என்பதேயாம். இந்த அந்தர் யாகத்துக்கெனச் சுவாமிகள் திங்கள்தோறும் முதல் ஞாயிறை நியமஞ் செய்தார் (இவ்வாறு நியமஞ்செய்ததற்கான காரணம் அது விடுமுறை நாள் என்பதேயாம்).

ஒரு யாகநாள் நடைமுறை மேல்வருமாறு அமைந்திருக்கும். காலைப்பொழுதில் விரதியராய் வந்து சிவதொண்டன் நிலையத்திற் கூடிய அடியவர்கள் 8.00 மணியளவில் புராணமண்டபத்தில் அமர்ந்து விநாயகரகவல் ஆதிய பாரயணப்பாடல்களைப் பாடிச் சிறிதுநேரம் வழிபாடு செய்வர். பின்னர் நற்சிந்தனையிலுள்ள உரைநடைப்பகுதி படிக்கப்பெறும். அடுத்துப் படியேறிச் சென்று தியான மண்டபத்தில் இருந்து தியானஞ் செய்வர். தியானத்தமர்ந்த பின் மீண்டும் புராணமண்டபத்திற்கு வந்து நற்சிந்தனைப் பாடல்களைப் பாடுவர். உச்சிப்பொழுதில் திருவடிக்கும் சுவாமிக்கும் திவ்வியமான பூசை நிகழும். பூசை முடிவில் மாகேசுர பூசை நடைபெறும். இதுவே இன்றுள்ள யாகநாள் நடைமுறை.

இந்த யாகநாளின் நடுநாயகமான பாகம் ‘தியானமே’யாம். நற்சிந்தனையின் உரைநடைப் பகுதியைப் படித்தல் தியானப்பள்ளியறையில் நுழைதற்கான திறவுகோலைப் பெற்றுக் கொள்தலைப் போன்றதேயாம். இவ்வுரைப்பகுதி நமது உண்மைச் சுபாவத்தை இடித்திடித்து உரைக்கின்றது. நாம் உண்மைப்பொருள்; கேடும் ஆக்கமும் கெட்ட திருவினர்; சித்துப்பொருள்; சிவபெருமான் என்ற நூலிற் கோக்கப்பட்ட பலநிறமணிகளை ஒப்பவர்; சிவனடியார், சிவத்திலும் வேறலாதவர்; என்றெல்லாம் எடுத்தெடுத்து உரைக்கின்றது. அடிவாரத்தில் அல்லாமல் உச்சியில் நின்று உண்மையைத்  தொட்டு நிற்கிறது. நன்மோன நிறைவில் நிலைத்தற்குரிய உபாயத்தைச் சுற்றிவளையாது நேர்நேராய்ச் சொல்லுகிறது.இவ்வுரைப் பகுதியிலுள்ள ஒரு சொல்லே பக்குவர் ஒருவரை நிட்டையில் நிலைக்கச் செய்யும் மந்திரமாயமையும். பலபடக் கூறுவானேன்! தென்முகக் கடவுள் எந்த ஞானத்தைச் சின்முத்திரையாற் காட்டியிருக்கின்றனரோ, அதனையே யோககுரு பயிலும் மொழியில் கூறியிருக்கின்றார். இவ்வுரைமொழி குறிக்கும் மெய்ப்பொருளை உணர்ந்து கொள்ளவல்ல பக்குவர் திருவடியின் முன்சென்று தியானத்திருக்கும் பொழுது அவர்கள் சனகர் சனந்தனர் ஆதியாம் தவத்தினர் இனமேயாம்.