யாகநாட் சிந்தனை 07-08-2016

இன்று சிவதொண்டர்க்கெல்லாம் யாகநாள். இந்த யாகநாளில் நற்சிந்தனை உரைநடைப் பகுதியில் சன்மார்க்கம் தலைப்பிலுள்ள இறுதிப்பகுதி தியான மந்திரமாகத் தரப்படுகின்றது.

சன்மார்க்கம்

வண்டுகள் பூவைக்கிண்டித் தேனை உண்டு ஒன்றுமறியாது கிடப்பதுபோல் பக்தனும் சித்தமாகிய பூவைச் சிவத்தியானத்தினால் கிண்டி ஆங்குவரு மானந்தத் தேனையூண்டு, ஒன்று இரண்டு, நன்று தீதென்றறியாமற் தேக்கிக் கிடக்கிறான்.

ஒரு கமக்காரன் தன்னுடைய நிலத்திலே நல்லவித்தையிட்டு அதிலுண்டாகுங் களையைக் களைந்து, விளையூந் தானியத்தை யொன்று சேர்க்கிறான்.

அதேபோலப் பக்தனும் சிவமாகிய நிலத்திலே பக்தியென்னும் வித்தை வித்திக் காமக் குரோத மோக மத மாச்சரிய மென்னுங் களையைக் களைந்து சிவபோகமென்னுந் தானியத்தைச் சேர்த்து வைத்துப் புசிக்கிறான்.

பூலோகமாகிய நந்தன வனத்திலே சீவர்களாகிய மலர்கள் மலர்ந்து கிடக்கின்றன. சிவன் அதைக் கண்டு மகிழ்கிறான்.

பொற்கொல்லன் பொன்னை யெடுத்துப் பல பூண்களைப் படைக்கிறான்.

சிவனாகிய பெரிய பொற்கொல்லன் ஆன்மாவாகிய பொன்னையெடுத்துச் சீவர்களாகிய பலபணிகளையூமாக்குகிறான்.

வைத்தியன் பல மூலிகைகளையூ மெடுத்து ஒன்றாக்கி நோய்க்கு மருந்து கொடுத்து அதன் நோயை மாற்றுகிறான்.

பெரிய ஞான வைத்தியனும் தனு கரண புவன போகங்களை ஆன்மாவுக்குக் கொடுத்து அதன் நோயை மாற்றி இன்பவீட்டில் வைக்கிறான்.

தாய் தனது குழந்தைகளுக்கு விளையாட்டுச் சாமான்களைக் கொடுத்து மகிழ்விக்கிறாள்.

சிவபெருமானும் தன் குழந்தைகளாகிய எங்களுக்குப் பலவிதமான இன்பங்களையூந் தந்து மகிழ்விக்கிறான்.

பொறிவழியே போந்து, மனம் அலைய அறிஞர் இடங்கொடார்; ஏனெனில் ஆத்மாவே தானென அறிந்தவர்கள் ஆசை நோய்க்கு இடங்கொடுப்பாரா? அன்று.

அவர்தம் பெருமையை வேத சிவாகமங்களும் புகழ்கின்றன. இவர்களைக் கண்டால் கல்லுங் கரையும்.

அனைத்தினும் வெற்றியூண்டு.

-நற்சிந்தனை