யாகநாட் சிந்தனை 01-05-2016

இன்று சிவதொண்டர்க்கெல்லாம் யாகநாள். இந்த யாகநாளில் நற்சிந்தனை உரைநடைப் பகுதியில் ஒழுக்கமுடைமையை அடுத்துச் சன்மார்க்கம் தலைப்பிலுள்ள ஒரு பகுதி தியான மந்திரமாகத் தரப்படுகின்றன.

சன்மார்க்கம்

குரங்குபோல் மனங் கூத்தாடுகின்றதே.

இதன் கூத்தை எப்படி அடக்குவதென்று தெரியவில்லையே. நன்று சொன்னாய். இதற்கு நல்ல மருந்துன்னிடமுண்டு. நீ அதை மறந்து போனாய் சொல்லுகிறேன் கேள்.

சிவத்தியானம் என்னும் மருந்தைத் தினந்தோறும் சாப்பிட்டுவா. மனக்குரங்கின் பிணி மாறும்.

அதைச் சாப்பிடும் போது அனுபானத்தைக் கூட்டிச் சாப்பிடு. அதுவுமுன்னிடமுண்டு.

அது என்னவென்றால் நாவடக்கம் இச்சையடக்கம் என்னும் சரக்கோடு சேர்த்துச் சாப்பிடு.

இதுவும் போதாது பத்திய பாகத்திலே தான் முற்றும் தங்கியிருக்கிறது. அதுவுமுன்னிடமுண்டு.

அது என்னவெண்றால் மிதமான ஊண், மிதமான நித்திரை, மிதமான தேக அப்பியாசம் என்பவையே. வெற்றி நிச்சயம். ஆன்ம இலாபத்தின் பொருட்டு இதைச் செய்.

மனத்தை ஒருவன் அடக்கி வெற்றி கொள்ள முழுமனத்தோடு விரும்புவானானால் சிவத்தியானத்தைத் தினந்தோறுஞ் செய்துவரக் கடவன்.

படிப்படியாக அவன் மனமொடுங்கி வருவதை அவன் கண்கூடாகக் காணுவான்.

சாந்தம், பொறுமை, அடக்கம், முதலிய நற்குணங்கள் அவனிடத் துதிக்கும்.

அவன் மனம் எந்தநேரமும் மகிழ்ச்சியுடையதாகவே இருக்கும். இகழ் புகழ் இரண்டினாலும் இழிவடையான். அந்தராத்மாவிலே சுகிப்பான். பிறர் சுகம் தன் சுகமென்ற எண்ணம் பெருகும்.

கைவிளக்கை ஒருவன் கொண்டு செல்வானானால் இராக்காலத்தில் அவன் மனங்கலங்குவானா? கலங்கான். அப்படியே சிவத்தியானத்தைச் செய்து வருவானானால் மாயவிருள் அவனை அடையுமா? அடையா.

போதனையிலுஞ் சாதனை சிறந்தது. ஒரு பொல்லாப்பமில்லை.

நற்சிந்தனை