மாட்சிமைசேர் நல்லைத் தேர் மாணடி

‘ காட்டிலே காளியுடன் கூத்தாடும் கண்ணுதலோன்
நாட்டிலே ஞானகுருவாய் நயந்து வந்து
மீட்டான் அவன்றன் விரையார் மலரடியை
மாட்சிமைசேர் நல்லைத்தேர் மாணடியிற் கண்டேன்.’
– நற்சிந்தனை –

மாட்சிமைசேர் நல்லை

  • காலன் வலிதொலையக் காலெடுத்தான் பாலன் நம்மவர்க்கெல்லாம் காவலாய் நின்று காத்து, வேண்டுபவற்றை அருளும் வள்ளலாய் வாழ்வது நல்லைத் திருத்தலத்தின் ஒரு மாட்சிமை.
  • வீதியில் வந்தொருக்கால் விழுந்து கும்பிடுவோர்க்கும் வில்லங்க மெல்லாம் தீர்ப்பது இத்திருத்தலத்தின் இன்னுமோர் மாட்சிமை.

தேர் மாணடி

  • சிவபெருமான் நமது தீதெல்லாம் நீக்க நம்போல உருத்தாங்கி வீற்றிருந்த மாண்புடையது தேர்முட்டிப்படி.
  • எங்கள் குருநாதன் செல்லப்பன் எனும் நாமம் பூண்ட சிவகுருவிடம் ஞானவித்தையின் நுட்பமெல்லாம் பயின்ற வித்தியாபீடமாயமைவது தேரடியின் மாண்பு.
  • குருநாதன் ஒருநாள் உற்று நோக்கி ஒருபொல்லாப்புமில்லை என்று அருவமும் காட்டி உருவமும் காட்டி அப்பாற்கப்பாலாம் அருள்நிலை காட்டிக் காட்டி காட்டி அந்தமாதியில்லாச் சொரூபமும் காட்டி சும்மா இருக்கும் சூட்சத்தில் மாட்டி வைத்தது தேரடியின் சொல்லற்கரிய மாண்பு.
  • இத்தனையும் இன்றும் அப்படியேயுள்ளமையை அநுபவிக்க நாடுவோமாக.

‘ தேரடியிற் சென்று தெரிசித்தாற் போதும் ‘