மகாவாக்கியங்கள்

வேதம் நான்கினுமுள்ள நான்கு பெருத்த வசனங்களை மகாவாக்கியங்கள் என்பர். அகம்பிரமாஸ்மி ஆதிய அம்மகாவாக்கியங்களை அந்நாளில் வாழ்ந்த மகரிஷிகள் கண்டறிந்தனர். அவர்கள் தம்மை அண்டிவாழ்ந்த பக்குவரான பிரமச்சாரிகளுக்கு அவற்றை உபதேசித்து உண்மையுணரச் செய்தனர்.

அண்மைக் காலத்திலே நல்லைத்தேரடியில் வாழ்ந்த செல்லப்பதேசிகர் பயிலுந்தமிழிலமைந்த நான்கு பெருத்த வசனங்களைக் கண்டறிந்தார். அவற்றை அவர் தன்னை அண்டி வாழ்ந்த அருந்தவயோகருக்கு உபதேசித்துத் தானாகச் செய்தார். யோகசுவாமிகள் அவற்றின் மகத்துவத்தை உணர்ந்து தமது அணுக்கத் தொண்டர்களுக்கு அடிக்கடி கூறினார். தமது திருவாய் மொழிகளிலே அவற்றை நூற்றுக்கணக்காகப் பதித்து வைத்தார். சுவாமிகள் இவ்வாறெல்லாம் கொண்டாடுவதைக் கண்ட சுவாமிகளது அணுக்கத்தொண்டர்கள் அவற்றை மகாவாக்கியங்களெனப் போற்றலாயினர். அவ்வாறு போற்றப்படும் ‘ஒரு பொல்லாப்பும் இல்லை’, ‘எப்பவோ முடித்த காரியம்’, ‘நாமறியோம்’, ‘முழுதுமுண்மை’, என்னும் நான்கு மகாவாக்கியங்களும் இன்று நன்கு பிரபலமாயுள்ளன.

யோகசுவாமிகள் இம்மகாவாக்கியங்களை ‘ஒப்பற்ற வாக்கு’ எனவும் இவற்றின் மகத்துவத்தைச் ‘செப்பமுடியாது’ ‘எழுதிக்காட்டிட என்னாலிசையுமோ’ எனவும் கூறியிருக்கிறார். இவற்றின் அறிதற்கரிய அருமைப்பாட்டை மேல்வரும் விடயம் வற்புறுத்துகிறது.

செல்லப்பர் ஒரு “தீர்ககமான குரு”. யோகசுவாமிகள் சத்தியதாகத்தோடு மற்றனைத்தையும் துச்சமாகத் துறந்து அவரை அண்டி வாழ்ந்த பக்குவர். ஆண்டுக்கணக்காக செல்லப்பரோடு கூடிவாழ்ந்த யோகசுவாமிகள் அவர் அடிக்கடி கூறுவதை -ஓயாது ஓதுவதை- அந்தரங்கமாகச் செப்பிக் கொண்டிருப்பதைக் ஆயிரக்கணக்காகக் கேட்டிருக்கிறார். ஆயினும் பல்லாண்டுகளாக அவை மருமமாகவே இருந்தன. இதனை ‘மருமந்தேராது மலைத்து நின்ற’தாக அவர் கூறியிருக்கிறார். பின்னொருநாள் செல்லப்பதேசிகர் உவகையுடன் உற்று நோக்கித் தன்கரத்தால் தொட்டு தலைத்தலத்தைக் காட்டி திருவடித் தீக்கை செய்தபோதே இவை சும்மா இருக்கும் சூட்சத்தைத் தொட்டு நிற்கும் பெரும் பெயர்கள் என்பதைத் தெளிந்து கொண்டார். இவ்விடயத்தை ஆறுதலாக் யோசித்துப் பார்த்தால் இம்மகாவாக்கியங்களை நாம் மிகச் சாமானியமாக எண்ணிவிட்டோமே என்ற அச்சமே மேலிடும். ‘மழக்கை இலங்கு பொற்கிண்ணம்’ போன்று நாப்பழக்கமான இந்நான்கு மகாவாக்கியங்களையும் அரியன என்று கருதாதிருந்து விட்டோம். ஞானதேசிகரொருவரோடு கூடிவாழ்ந்து ஆண்டுக்கணக்காகச் சிந்தித்துச் சிந்தித்து ஈற்றில் அவரருளாலே அறிதற்குரியனவே இவ்வரிய மந்திரங்கள்.

இம்மகாவாக்கியங்கள் மாபாடியமாக எழுதிக் குவித்தற்குரியனவல்ல. செல்லப்பர் இவற்றைத் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்ததைத் தவிர விளக்கம் கூறிச் சொல்லாடியதில்லை. சுவாமிகளும் தமது திருவாய் மொழிகளிலே இவற்றை அடுத்தடுத்துக் கூறியிருந்தபோதும், அப்படியே கூறினாரன்றி வியாக்கியானம் செய்யவில்லை. செல்லப்பதேசிகர் இவற்றை ஓதி ஓவியம் போலிருப்பாரெனவும், ஊமைபோலிருப்பாரெனவும் சுவாமிகள் கூறிய குறிப்புகள் இவற்றை ஓதுவதன் பலன் மோனத்தில் நிலைத்தலே என்பதை உணர்த்துவன. சுவாமிகளும் “முழுதுமுண்மை யாச்சுதெடி மூச்சுப் பேச்சுப் போச்சுதடி” என்று பாடுமிடத்து முழுதுமுண்மை எனும் மகாவாக்கியப் பொருள் கைவல்யமாகுமிடத்து பேச்சிறந்த மோனமே எஞ்சும் என்பது தெளிவாகிறது. இந்நிலையில் எழுதிக்குவிப்பதற்கு என்ன இருக்கிறது! உணர்ந்துணர்ந்து இன்பத்தில் தேக்குதற்குரியனவே இம் மகாவாக்கியங்கள்.

ஆயினும் “சொல்லற்கரியானைச் சொல்லி” “பேச்சுக்கிலக்கிதமாம் பேச்சிறந்த மாசின்மணியின் மணிவார்த்தை பேசி” என்ற வண்ணமான மணிவாசகங்களும் உள்ளனவன்றோ! மோனத்தேன் பொதிந்திருக்கும் இந்த ஞானமலர்கள் நாம் சுற்றிச் சுற்றி வட்டமிட்டு ரீங்காரம் செய்து மொய்த்தற்குரியன. மோனநிறைவைக் குறிகாட்டும் இப்பெருத்தவசனங்களைக் கிட்டி நின்று சில சின்மொழிகளைச் செப்புதல் தக்கதேயாம்.

மகாவாக்கியங்கள் ஞானவரம்பாயமைவன. நன் மோனநிறைவைச் சுட்டும் ‘கைகாட்டு’ப் போன்றன. ஆதலால் அதிகப் பேச்சில்லாது இம்மகாவாக்கியங்களை ஒட்டி நிற்கும் பிறவிமயக்கம் போக்குவதும் சிந்தை தெளிவிப்பதும் மோகம் தீர்ப்பதும் சிந்தை படியச் செய்வதும் மோனம் தருவதுமான குறிப்புக்களைக் காட்டும் ஆசான்வாசகங்களை இசைப்தோடமைவோம்.

“உண்மை முழுதமென்றால் ஓ கெடுவாய் நெஞ்சமே பின்னைப் பிறப்புண்டோ பேசு.(1)

உண்மை முழுதுமென ஓதும் ஒருமொழியால் என்னை மறந்தேன் இடரகன்றேன் – பின்னையிங்கு ஆச்சரியங் காணேன் அண்டபிண்டமெல்லாமே போச்சுதொன்றாகப் புகல்.(2)

முழுதுமுண்மை யாச்சுதெடி மூச்சுப்பேச்சுப் போச்சுதடி(3)

முழுதுமுண்மையென முனிமுன் சென்னமொழி மோகம் தீர்க்கும்.(4)

எல்லாம் சிவன் செயல் எல்லாம் சிவன்வடிவு எல்லாம் அவனன்றோ அன்னே என்னும் எல்லாம் அவன்வடிவு எல்லாம் அவனென்றால் பொல்லாப்பிற்கேதெடி அன்னே என்னும்;.(5)

முழுதுமுண்மையென்று மோன முனிசொன்னானன்று பழுதொன்று மில்லையென்று பண்ணுவாய் சிவதொண்டு(6)

ஒருபொல்லாப்புமில்லை என்றென உள்ளம் குளிரவைத்த குருநாதன். (7)

எப்பவோ முடிந்ததெனச் செப்புவாரவர் சிந்தைதெளிந்திட(8)

முடிந்த முடிபென்று முன்னின்று சொல்லப் படிந்த தென் நெஞ்சம் பதியில்.(9)

முடிந்த முடிபென்னும் முனிவன் வாக்குப் படிந்த மனதில் பரகதி காட்டும்.(10)

அதுஎன்ன உபாயத்தாலும் அடையப்படுவதொன்றன்று அப்படியுள்ள காரியம் மற்றனைத்தும் செப்படிவித்தை(11)

நாமறியோம் எனும் நல்ல மந்திரம் சேமமுண்டாகச் செப்பும் திறத்தோன் (12)

நாமறியோம் எனும் நல்லறிவு. (13)

ஒருவருமறியாரென்றான் எங்கள் குரநாதர் ஓங்காரவழி (14)

ஆரறிவாரெனும் ஆசான்வாசகம் பேரறிவைத்தரும். (15)


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home/sivathon/public_html/wp-includes/functions.php on line 4556