நியமங்கள்

சிவதொண்டன் நிலையத்து பூசை விழாக்களெல்லாம் தியானமண்டபத்திலே திருவடி முன்னிருந்து மேற்கொள்ளும் தியான சாதனைக்கு ஆயத்தப் படுத்தும் அளவினதே. இவை சிவதொண்டன் நிலையத்துக் குறிக்கோளுக்கு இயைந்த வண்ணம் எளிமையாவும், புனிதமாகவும், பூரணமாகவும் நிகழும்.

பூசைகள்

  1. நித்தியபூசை
    நித்திய பூசை காலை, மாலை ஆகிய வேளைகளில் நிகழும். மாலைப் பூசையின் போது தேர்ந்தெடுத்த தோத்திரப் பாரயணமும் புராணபடனமும் நிகழும்.
  2. யாகநாள்
    மாதத்தின் முதல் ஞாயிற்றுக் கிழமை எண்ணங்களைக் கொளுத்தியெரித்து உண்மை உணருதற்காகச் சாதித்திருக்கும் நாளாக அநுட்டிக்கப்படும். (மேலும்…)

உபவாசமிருந்து, தியானஞ் செய்து நாள் முழுவதும் தவஞ்செய்து அல்லவா யாகஞ் செய்ய வேண்டும். -அருள்மொழி-

  1. ஆயிலியநாள்
    திங்கள் தோறும் வரும் சுவாமிகள் திருவடிக்கலப்புற்ற ஆயிலிய நாள் தன்னை அறிதற்பொருட்டு சற்குரு தாள்களைச் சிந்தித்திருக்கும் குருபூசை நாளாக அநுட்டிக்கப்படும்.

விழாக்கள்

1. மகாசிவராத்திரி

இதுவே சிவதொண்டன் நிலையத்து விழாக்களுள் நடுநாயகமான விழா. இரவு முழுவதும் ஆன்ம விழிப்பில் கருத்தாயிருப்பதற்கு அநுசரணையான பூசை, படிப்பு, தியானம் என்பன நிகழும்.

2. திருவடிபூசைத் தினம்

பங்குனி மாதத்து இரண்டாம் திங்கட்கிழமை திருவடி பூசைத்தினமாகும். தன்னைத் தன்னால் அறிந்து தானே தானாயிரு; அதுவே திருவடி எனச் சுவாமிகள் கூறுவார். அந்த அநுபூதியை அடைதற்பொருட்டுச் சாதித்து இருக்கும் நாளே திருவடிபூசை நாளாகும்.

தன்னைத் தன்னாலறிந்து தானே தானாயிரு அதுவே திருவடி. -அருள்மொழி-

3. ஆருத்திரா அபிடேகம் 

மார்கழித் திருவாதிரை நாள் வைகறைப் போதிலே ஆட்கொண்டருளும் பொற்பாதத்திற்கு அபிடேக மாட்டிப் போற்றும் திருநாளாக அநுட்டிக்கப்படும்.

போற்றி அருளுக நின் ஆதியாம் பாதமலர்

4. ஆண்டு விழா

நவம்பர் மாதம் நான்காம் நாள் யாழ் சிவதொண்டன் நிலைய ஆண்டு விழாவும் பங்குனித் திங்கள் முதலாம் நாள் செங்கலடி சிவதொண்டன் நிலையக் கால்கோள் விழாவும் நிகழும்.

ஊழ்வினை போக உள்ளொளி ஓங்க உயர்க சிவதொண்டன். -நற்சிந்தனை-

இந்நான்கு விழாக்களையும் யோகசுவாமிகளே நியமஞ் செய்து, இவற்றிற்கு மேலதிகமாக யாதொரு விழாவையும் கொள்ளலாகாது எனக் கண்டிப்பான உத்தரவும் பிறப்பித்தார். சுவாமிகளது திருவடிக்கலப்பின் பின் குருபீடமொன்றிலே குருமுதல்வரைப்  போற்றுதல் இன்றியமையதலால் அன்பர்களும், சிவதொண்டன் சபையும் குருபூசையை நிகழ்த்துவதற்கு ஏகமனதாக தீர்மானம் செய்து கொண்டனர்.

5.குருபூசை

பங்குனித் திங்கள் ஆயிலிய நாள் யோகசுவாமிகளது குருபூசை நாள். குருபூசை என்பது தன்னையறிதல் எனச் சுவாமிகள் அறிவுறுத்தினார். ஆகவே தன்னையறிந்து சாந்தம் பெருக இருத்தலே சற்குருபூசை. தன்னையறியும் வழி நற்சிந்தனைத் திருநூலில் தெளிவாக உள்ளதால் குருபூசைக்கு முந்திய மூன்று நாட்களும் நற்சிந்தனை முற்றோதல் நிகழும். இம்மூன்று நாள்களும் ஆச்சிரம வாழ்வு நாளென வழங்குகிறது. குருபூசை நாள் தங்கப்பொம்மை போன்றிருக்கும் சுவாமிகள் சாந்தம் எனும் அபிடேகமாட்டி அன்பரை உளம் குளிரச் செய்யும் நாள்.

குரு பூசை என்றால் தன்னை அறிதல், மற்றையவெல்லாம் உண்டாட்டம். -அருள்மொழி-