திருவாய்மொழிகள்

சுவாமிகள் செல்லப்பதேசிகரை “நால்வேதம் நவில் வாயான்” எனப்போற்றுவார். செல்லப்பரால் தானாகச் செய்யப்பெற்றபின் யோகசுவாமிகளும் நால்வேதம் நவில் நாவினரே. நால் வேதத்தைக் குறிக்கும் சான்றோர் வழங்கிய ஒரு மொழி வாய்மொழி என்பது. அவ்வழக்குப்பற்றி சுவாமிகள் ஈந்த வாக்கியப் பிரசாதத்தையும் திருவாய்மொழி என வழங்குகின்றோம். சுவாமிகள் அவ்வப்போது தன்னை அண்டிவந்த அடியவரது பக்குவத்திற்கேற்ப ஈந்த திருவாய்மொழிகளை சுவாமிகளது அணுக்கத்தொண்டர்கள் நற்சிந்தனை, எங்கள் ஆசான் அருள்மொழிகள் என்னும் இரு நூல்களாக வெளியிட்டனர்.

நற்சிந்தனை

அருள்மேனி தாங்கி அவனியில் உலவிய எங்கள் குருநாதன், வாங்காதே குடம் நிறைக்கும் வள்ளற் பெரும் பசுக்கள் போலவும் கடுப்பினாலே பால்பீற்றும் தாய்மார் போலவும் மங்களகரமான வாக்கியப் பிரசாதங்களைச் சுரந்து திரிந்தனர். இவ்வாக்கியப் பிரசாதங்கள் சத்திநிபாத உத்தமர்களான அன்பர்கள் முன்னிலையிலே உரையினாலும் பாவினாலும் இயன்ற திருமந்திரங்களாக உகுத்தன. பிறவிப் பிணி போக்கும் நன்மருந்தான இத்திருமந்திரங்கள் ஆர்வமாய்ப் பருகி வாய்மடுத்து சிந்தையிற் பதித்தற்கு வாய்ப்பாகச் சொற்சுவை, பொருட்சுவை தோய்ந்த அமுத வாசகங்களாய் அமைந்தன. இத்திருமந்திரங்களைப் பெற்ற புண்ணிய சீலர்களும் இவற்றைப் பெற்றமை பெறலரிய பேறென்றெண்ணிப் பக்குவமாகப் பேணி மனனஞ் செய்து, அந்தியும் நண்பகலும் மற்றும் பொருந்திய எந்தவேளையும் சிந்தித்துச் சிந்தித்து சீவலாபம் பெற்றனர். தமையுணர் அறிவு தலைப்பட்ட இப்பாக்கியவான்களே, எங்கள் குருபரனது திருவாய் மொழிகளின் அருள்மாட்சிக்குத் தக்க சாட்சியாளர் ஆவர். இவ்வண்ணம் சாதித்துச் சரிகண்ட நல்லமுதப் பாக்களதும் உரைநடைகளதும் தொகுப்பே நற்சிந்தனை என்னும் இத்திரு நூலாம்.

எங்கள் ஆசான் அருள்மொழிகள்

எங்கள் குருநாதராகிய யாழ்ப்பாணத்துச் சிவயோகசுவாமிகள் தம்மிடம் வந்தோருக்கு உபதேசித்த அருள்மொழிகளின் தொகுப்பே இச்சிறு நூலாகும். அருள்மொழிகளுள் ஒவ்வொன்றும் அரும்பெறல் மாணிக்கம் போன்றது. அவற்றைச் சிந்தித்துச் சிந்தித்து எவரும் ஆன்மலாபம் பெறலாம்; அவற்றுள், மனத்துன்பங்கள் வருங்கால் எம்மை வழுக்கி விழாமற் பாதுகாக்கும் ஊன்றுகோல் போன்றமைவன சில; பேரின்பப் பேற்றினை அடைவிப்பதற்குரிய தியான சாதனைகளிற் பழக்குவன பல.

நோயாளர்க்குத் தக எவ்வாறு வைத்தியர் சொல்லும் மருந்து வகை வெவ்வேறாக விருக்குமோ அவ்வாறே அவரவர் மனபரிபாக நிலைக்குத் தக்கவாறே அவ்வப்பொழுது அந்த அந்த அடியார் தெளிவுபெறத் தக்கதாக இவை உபதேசிக்கப்பட்டுள்ளன. ஒருவரைக் கோயில் வழிபாடு செய் என்றும், வேறொருவரைக் கோயில் வழிபாட்டினை விட்டு மேலே செல் என்றும் அருளப்பட்டன போல, மேல் நிலையில் நிற்பார்க்கு முரணாகாமலும், அதே நேரத்தில் கீழ் நிலையிலுள்ளார்க்கு முரண்படுவது போலத் தோன்றவும், அருளிச்செய்த உபதேச மொழிகள் சில இந்நூலிலேயிருக்கின்றன. இவற்றை நூலறிவாளர் நுணுகியுமறியார். ஆனால் சாதனை செய்யுஞ் சத்துக்கள் அறிவார்.

வீடுபேற்றினைக் காதலித்து வாழ்க்கை முழுவதும் சாதனை செய்வார்க்கு இந்நூல் ஒரு ஞானக் களஞ்சியமாகும். எளிய இனிய சிவாநுபவ வாக்குகள் ஆதலின் இவற்றிற்கு விளக்கம் வேண்டியதில்லை. சத்தியத்தைக் காணும் அவாவுடன் ஒழுக்க நெறியில் நின்று பலகால் இவற்றைத் திரும்பத் திரும்பப் படித்துச் சிந்தித்தால் அநுபூதி கிட்டும்.