திருவடித்தத்துவம்

சிவதொண்டன் நிலையத்தில் புதிதாகச் சேர்வோர் கோலமலருள் மூழ்கியிருக்கும் திருவடியை யோகசுவாமிகளின் பாதணியோ என ஐயுறுதல் உண்டு. ஸ்ரீ இராமபிரானின் பாதுகைக்குப் பட்டாபிசேகம் செய்த செய்தியொன்று உண்டல்லவா! இது போன்ற செய்திகளின் அடிப்படையிலே யோகசுவாமிகளின் பாதணியை வைத்து வழிபடுகின்றனர் எனப் புத்தடியார்கள் எண்ணுகின்றனர் போலும். ஆனால் சுவாமிகள் ஒருபோதும் பாதணிகள் அணிந்ததில்லை.

“இறைவன் அடி” என்னும் பிரபலமான வழக்கொன்றும் உளது. ‘இறைவனடி வாழ்க’, ‘வழுத்தொணாமலரடி’ இறைவனடி சேர்ந்தார் போன்ற வாசகங்கள் திருநூல்களில் நிறைந்துள்ளன. இவற்றால் இறைவனது திருவுருவத்தின் ஓரங்கமான திருவடி இங்கு பிரதிட்டை செய்யப்பெற்றிருக்கிறது எனக் கருதுவர். ‘ஆண்டவன் திருவடி’ ஆகிய வாசகங்களை சுவாமிகளும் கூறியுள்ளார். ஆயினும்,

“ஆதாரம் ஆதேயம் முழுதுமான அப்பனுக்குப்

பாதார விந்தமெங்கே பார்த்துப் பணிவதெங்கே”

எனவும் பாடியிருக்கின்றார். இப்பாடலினாலே இறைவனை முழுமுதற் பொருளாக உணர்கின்றார். இம்முழுமுதற் பொருளுள் பார்த்துப் பணிபவனும் ஒடுங்கிக் கரைந்துள்ளான். இம்முழுமுதற் பொருள் ஒரு நாமம் ஓருருவமில்லாத பூரணப்பொருள். பார்க்கும் இடமெங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் இப்பரமவஸ்துவுக்குப் பாதார விந்தம் என்பதொன்று உண்டோ!

மேலும்,

“ஆதாரத்தாலே நிராதாரம் சென்றபின்

பாதாரவிந்தமென்று உந்தீபற

பலித்தது பூசை யென்றுந்தீபற”

என்றோர் நற்சிந்தனையும் உளது. இந்நற்சிந்தையினாலே அனைத்திற்கும் ஆதாரமானதும் தனக்கென ஓர் ஆதாரம் வேண்டாததுமான நிராதர வஸ்துவே பாதாரவிந்தமென்பது சுவாமிகளது உள்ளக்கிடக்கை என்பது தெளிவு. இந்த நிராதர வஸ்துவான பாதாரவிந்தம் இறைவனின் ஓர் அங்கமன்று. அது பரம வஸ்துவேயாம். நாம் ஏகனாயும், அநேகனாயும் உருவம் ஆகவும், அருவுருவமாகவும், அருவமாகவும், சொரூபமாகவும் எந்த முழுமுதற் பொருளை எடுத்துச் சொல்கிறோமோ அந்த முழுமுதற் பொருளே ‘திருவடி’ என்பதாம். இவ்விடத்தில் திருவாதவூரடிகள் புராணத்திலே திருவடி வழிபாடுபற்றி விளக்குமொரு சம்பவத்தையும் இணைத்து நோக்குதல் நன்று. திருப்பெருந்துறையிலே பரமாசாரியராக வந்த கயிலை நாதர் திருவாதவூரடிகளைத் தீக்கை வைத்தாளும் தம் கருமம் நிறைவேறியதும் கயிலை செல்ல நாடுகிறார். அப்பொழுது அவரைப் பிரிந்திருக்க ஆற்றாத அடியரெல்லாம் ‘ஐயா தரிப்பரிது’ என வருந்துகின்றனர். வருந்தும் அவர்களைப் பரிந்து நோக்கிய பெருமான்

‘வருந்துவதொழிமின், இந்த மணமலி குருந்தின் நீழல்

பொருந்திய தெய்வபீடம் பொலிவொடு குயிற்றிமீதே

திருந்திய மறையும்தேடும் நம்பதமாகச் செய்து

தாங்கரும் அரந்தை நீங்கி யாம் என்னும் தன்மை கண்டு

நீங்கரும் அன்பினாலே நித்தலும் நயந்திறைஞ்சி.’

இருங்கள் எனக் கூறுகிறார். பெருமான் ‘திருவடியாவது யாமே’ எனக் கூறிய இந்த வாக்கே நாம் இங்கு நன்கு மனத்திற் பதிக்கவேண்டியதாம். அதாவது “திருவடியாவது சிவமே” என்பது. அனைத்தையும் ஆளும் நாதன், இமைப்பொழுதும் எம்நெஞ்சில் நீங்காதவன், குருமணியாய் வந்தவன், ஆகமங்கள் கூறும் அத்தனை மூர்த்திபேதமாகவும் நிற்பவன், இப்படி அநேக கோலங்களைக் கொள்ளும் ஏகனே திருவடி எனத் திருவாதவூரடிகள் உணர்ந்து பாடியது பரமாசாரியராக வந்த பெருமான் உணர்த்திய இவ்வுண்மையையேயாம், சிவபுராண வாழ்த்திலுள்ள இறைவன் அடி என்பதன் பொருள் இறைவனின் ஓரங்கமான அடியன்று. அது இறைவனேயாம், திருவடியுண்மையைத் தேர்ந்து தெளிந்த திருமூல நாயனாரும் ‘திருவடியே சிவம்’ எனக் கூறியிருப்பதும் மனங் கொள்ளத்தக்கது.

திருவடியே சிவம் எனும் இத்தெளிவுடன், செல்லப்பதேசிகர் யோகசுவாமிகளுக்குத் திருவடித்தீக்கைவைத்தாண்ட வேளையிலே யோகசுவாமிகள் அடைந்த திருவடி ஞானத்தை அறிந்து கொள்வது நன்று. அது சுவாமிகள் காட்டிய வழியிலே திருவடி வழிபாட்டினைப் புரிந்து வரும் எங்களுக்கெல்லாம் ஓர் உறுதியான அறிவுரையாக அமையும். சுவாமிகள் தமக்குச் செல்லப்பர் அளித்த திருவடித்தீக்கை பற்றிக் குறிப்பாகவும், சில இடங்களில் சற்றுவிரிவாகவும் பாடி வைத்திருக்கிறார். அவற்றுட் சில மேல்வருவன:

“ஒரு பொல்லாப்புமில்லை எனும் ஓசையொடுவந்து நோக்கித்

திருவடித் தீக்கை செய்த செல்வன் சீரடிகள் காப்பு.”

“…………. மனமகிழ நோக்கி

அலைத்து நின்ற மாயை அகலத் – தலைத்தலத்தில்

கைகாட்டிச் சொல்லலுற்றான்……….”

 

(தலைத்தலம் – தலையாய இடமான திருவடி; கைகாட்டி – திருவடியைக் குறியாமற் குறிகாட்டி).

“ஒருநாள் என்றனை உற்றுநோக்கி ஒரு பொல்லாப்புமில்லை என்று

அருவமும் காட்டி உருவமும் காட்டி அப்பாற்கப்பாலாம்

அருள் நிலை காட்டிக் காட்டிக் காட்டி அந்தமாதியில்லாச்

சொரூபமும் காட்டிச் சும்மா இருக்கும் சூட்சத்தில் மாட்டிவிட்டான்.”

“மாயவுடல் உண்மையென மதித்து வாடி மயங்காமல் அடியேனை நல்லூர் தன்னில்

தோயும் அருட் குருவாகிச் சொரூபம் காட்டிச் சுகம் பெறவே நிறுத்தி வைத்தாய்.”

இத்தீக்கையிலே செல்லப்பதேசிகர் முதலில் அருவம், உருவம் எனக் காண்பனவெல்லாம் மாயையின் அலைக்கழிப்பில் தோன்றும் வீண்பாவனைகள் எனக்காட்டியருளினார். மூடிய மாயவிருளில் தோன்றும் வீண்பாவனைகளையெல்லாம் விட்டொழியுமாறு செய்த பின்னர் எல்லாம் சிவன்வடிவு எல்லாஞ் சிவன் செயல் என்னும் அருள் நிலையைக் காட்டினார். இவ்வருள் நிலையைக் காட்டிக் காட்டி காட்டி என நீட்டிச் சொல்வதால் இந்நிலைகளிலே சிவமூர்த்தங்கள், குருமூர்த்தம், அம்மையப்ப மூர்த்தம் ஆதிய அருள்வடிவங்கள் பலவற்றையும் காட்டியருளினார். இறுதியாக அந்தமாதியில்லாத சொரூபத்தைக் காட்டியருளினர். இந்தச் சொரூபமே ‘திருவடி’ என்பதாம். அந்தச் சொரூபகாட்சியில் மாயாவிகாரரூபங்களைக்காணும் ஆவி உடல் என்பனவும் அத்திருவடிவசமாச்சுது. சோதி சோதி என்று சும்மா இருக்கும் சூட்சத்தில் மாட்டுப்பட்டிருக்கும் சுகநிலை யொன்றே மிச்சமாச்சுது. சுவாமிகள் ஆங்கொன்றும் ஈங்கொன்றுமாகக் கூறியிருப்பவற்றை ஒருங்கு நோக்கிக்கண்ட இத் திருவடித் தீக்கை அனுபவத்தினின்றும் தெளிந்து கொண்ட உண்மையை நாம் மேல்வருமாறு கூறலாம்.

1. திருவடியாவது தலையாய இடமான சொரூபசிவம்.

2. சொரூபசிவத்தில் ஒன்றிச் சும்மா இருக்கும் சூட்சமாயிருக்கும் அனுபவஞானமே திருவடிஞானம்.

திருவடிஞானத்தை உய்த்துணருமிடத்து மேல்வரும் திருவடி வாழ்த்துப்பகுதியின் மெய்ப்பொருள் ஆழம் அடிநிலையைத் தொட்டு நிற்பதை அறிந்து வியந்து நிற்கும் உணர்வு வாய்க்கும்.

பொற்றாளிணைகள் பொலிந்து வாழ்க

கற்றோர் ஏத்தும் கழலடி வாழ்க

மற்றோர் அறியா மலர்ப்பதம் வாழ்க

அற்றோர்க் குதவும் அருட்பதம் வாழ்க

தன்னேரில்லாத தாணிணை வாழ்க

என்போல் வந்த இணையடி வாழ்க

கண் போற் காக்கும் கழலடி வாழ்க

விண்போ லிலங்கும் மெய்யடி வாழ்க.

இப்பகுதியில் பொற்றாளிணை எனப் போற்றப்படுவது போக்குவரவற்ற பொன்னடியையேயாம். அற்றோர்க்கு உதவும் அருட்பதம் என்பது மாயையின் அலைக்கழிப்பில் தோற்றும் விசித்திரங்கள் ஒன்றினும் பற்றற்ற அடியவர்க்குத் தன்னையே அருளும் தலையளியுடைய திருவடி என்பதாம். இத்தலையளிக்குப் பாத்திரமான அடியவர் தலைத்தலமான திருவடியைச் சேர்ந்து தற்சுட்டு இறந்தவராய் இருப்பர். அவர்கள் திருவடிமயமாய் இருப்பர். அத்திருவடிமயமாய் இருக்கும் நிலையையே சுவாமிகள் ‘தன்னைத் தன்னாலறிந்து தானேதானாயிரு அதுவே திருவடி” என்றருளினர்.

ஆகவே திருவடி என்பது தலைத்தலமான முழுமுதற்பொருள் எனும் தத்துவமாயும், அத்திருவடியைச் சேர்ந்து தானே தானாம் தத்துவமாயிருக்கும் அனுபவமாயும் உள்ள பெரும்பதம் என்பது உறுதி.

இத்திருவடியுண்மையிலே மாயவுடல் உண்மையென மதித்து வாடும் மயக்கமிராது என்பது தெளிவு. இத்தெளிவு வாய்த்தமையினாலே செல்லப்பா சுவாமிகள் யாராவது கும்பிடும் எண்ணத்தோடு வந்தால் எழுந்து சென்று சலம்கழிக்கும் இடங்களில் நிற்பார்.


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home/sivathon/public_html/wp-includes/functions.php on line 4556