ஞானதேசிகன்

3.1. உன்மத்தன் யோகன்

“மரநிழலும், அன்பருள்ளமுமே எமக்கு உகப்பான உறைவிடங்கள்” எனச் சிவயோகசுவாமிகள் ஒரு சமயம் குறிப்பிட்டார். அவர் அன்பரின் இதயமாமலரில் வீற்றிருக்கும் தமது உண்மையை உணர்த்துவதன் முன்னர். சிறிது காலம் இலுப்பைமர நிழலில் அமர்ந்திருந்தார். அவ்விலுப்பை மரம் ஏறக்குறைய நாற்பது ஆண்டுகாலமாக அவர் வாழ்ந்த அவரது சொந்த ஊரில், புகழ் பெற்ற சந்தியொன்றில் இருந்தது. பலரும் வந்து கூடும் நல்லூர்த் தேர்முட்டிப் படியிலே செல்லப்பன் என்னும் சீமான் அமர்ந்தது போலவே, பலரும் போக்கு வரவு புரியும் தெருச்சந்தியில் சிவயோகச் செல்வர் அமர்ந்திருந்தார். வீதியிற் செல்லும் வீணர்களைத் தன்னை நெருங்கவிடாது தடுத்தற்பொருட்டு அவருடைய கையிலே எப்பொழுதும் கற்கள் இருந்தன. பலரும் செல்லப்பரை விசரரென நம்பியது போலவே சிவயோகரையும் உன்மத்தர் என எண்ணினர்.

3.2. கொழும்புத்துறைக் கொட்டில்

சிவயோகர் வீற்றிருந்த இலுப்பைமரத்தின் தென்கீழ்பாலுள்ள வளவிலே, வீதியோரமாக ஒரு கொட்டில் இருந்தது. அக்கொட்டிலிலே முன்னர் நன்னியர் என்பார் கடை வைத்திருந்தார். நன்னியர் செல்லப்ப சுவாமிகளது ஒரு முரட்டுப் பத்தர். அவர் ஒரு நாள் ஒருவருக்கும் பிடிகொடாது திரிந்த செல்லப்ப சுவாமியைத் தனது கொட்டிலின் முன்னாலிருந்த ஒரு தறியிற் கட்டிவைத்துவிட்டார். பின்னர் முன்னரே ஆயத்தம் செய்து வைத்திருந்த பால், பழம், பஞ்சாமிர்தம் என்பவற்றால் அவருக்கு அபிடேகம் செய்தார். இவ்வாறு செல்லப்ப தேசிகர் திருமுழுக்காடிய திருவுடை நிலமாக அவ்விடம் அமைந்திருந்தது. மேலும் திறவோர் காட்சியிலே அது ஒரு பாலைவனப்பசுந்தரையாகத் தோன்றிய புண்ணிய பூமியாகவும் இருந்தது. ஒருநாள் அந்தக் கொட்டிலின் சொந்தக்காரரான கொழும்புத்துறை திருநாவுக்கரசுவின் தாயார், இலுப்பைவேரிலிருந்த சிவயோகச் செல்வரின் முன்வந்து “நீ எவ்வளவு காலத்துக்கென்று இச் சந்தியில் இருக்கப் போகிறாய்?” என்று கேட்டார். பின்னர் கொட்டிலைச் சுட்டிக் காட்டி “இந்தக் கொட்டில் சும்மாதானே இருக்கிறது. இதில் வேண்டிய காலத்திற்கு ஆறுதலாக இருக்கலாமே” என வெள்ளையுள்ளத்துடன் வேண்டுதல் செய்தார். சிவயோகசுவாமி அவ்வம்மையாரின் தாராளமான மனத்தினை நன்கு அறிவார். பின்னாளில் எத்தனையோ பிரமுகர்கள் வந்து சாட்டாங்கமாக வீழ்ந்து கிடத்தற்கேற்ற அத்திருவுடை நிலத்திற்கு அவர் எழுந்தருளத் திருவுளம் பற்றினார். அது தன் குரவன் காட்டிவைத்த வளநாட்டுப் பெருமாளிகை போலும்!

3.3. கொழும்புத்துறை ஆச்சிரமத்தின் ஆரம்பகாலக் கோலம்

அப்பழங்குடில் ஓலை வேய்ந்த ஒரு மண் குடிசை. நடுவே எழுந்த ஒரு சுவர் அதனை இரு அறைகளாகப் பிரித்திருந்தது. அவ்வறைகளுள் தென்பாலுள்ள அறையில் சுவாமி உறைந்தார். வடபாலிருந்த அறை வெறுமனே கிடந்தது. சுவாமி அக்கொட்டிலுக்கு ஓலை வேய ஒருவரையும் அனுமதிக்கவில்லை. அவரை நன்கு அறிந்த சிலர் அவர் வெளியூர் சென்றிருக்கும் தருணமறிந்து திரும்பிவருவதற்கிடையில் ஓலைவேய்ந்து சென்றனர். அவர் சிறிது காலத்திற்குக் கொட்டிலில் விளக்கேற்றவும் விடவில்லை. அவர் உறைந்த அறை மூலையில் சிறிய பாம்புப்புற்று இருந்தது. கொட்டில் முற்றத்திலும் ஆங்காங்கே புற்றுகள் இருந்தன. மூவர்களும் ஏவல் செய்யும் தேவதேவன் சிவயோகசுவாமிகளாக வந்து குடி புகுந்த திருமாளிகையின் வண்ணம் இவ்வண்ணமாகத்தான் இருந்தது! கொட்டிலின் முன்புறமாக வீதியின் மறுகரையில் கோயில் பூந்தோட்டம் ஒன்றிருந்தது. அப்பூந்தோட்ட மதிற்சுவரிலே பொருத்தமாயமைந்த ஓரிடத்தில் திருவடி வைத்து வணங்கி வந்தார். கொழும்புத் துறையிலிருந்து, செல்லப்பாச் சுவாமிகளிடம் சென்று வந்த அடியார் சிலர் அப்பொழுதும் அங்கே இருந்தனர். அவ்வடியார்கள் செல்லப்பா சுவாமிகள் சிவயோக சுவாமிகளுக்குச் சகல சம்பத்துக்களையும் வழங்கியுள்ளார் என்பதற்கான தெளிவான குறிப்புக்களை அறிந்திருந்தனர். கொழும்புத்துறைக் கொட்டிலின் ஆரம்பத்தோற்றம் ஆதலால் அவர்கள் சிவயோகசுவாமிகளுடன் வெளிப்பார்வைக்கு ‘ஒருசாலை மாணாக்கர்’ போன்று பழகிய போதும் உள்ளார்ந்த பக்தியுடையவராயிருந்தனர். அவர்கள் செல்லப்பா சுவாமிகளிடம் கொண்டிருந்தது போன்ற ஆர்வத்தை உள்ளே வைத்து புறத்தே சுவாமிகளிடம் நண்பர்போல் பழகிவந்தார்கள். அவர்களுள் துரையப்பா எனும் அன்பர் அவ்வார்வத்தை உள்ளத்தளவில் வைத்திருக்க இயலாதவரானார். அவர் நல்லூர்க் கோவிலிலும், தேர்முட்டிப்படியிலும் இருந்து பஜனை செய்தது போல கொழும்புத்துறைக் கொட்டிலில் அமர்ந்தும் சிவயோகசுவாமிகளின் திருமுன்னிலையில் அருட்பாக்களை இசைக்கலாயினர். இது ஒன்றே அக் கொட்டில் ஓர் நடமாடும் நம்பன் கோயில் என்பதற்கான ஆரம்பகால அடையாளமாக இருந்தது. ஏனையோரெல்லாம் இலுப்பை மரவேரிலிருந்து தெருவாலே வருவார் போவாரைக் கல்லெறிந்து கலைத்துக்கொண்டிருந்த விசரர், இப்பொழுது கொட்டிலில் போயமர்ந்திருக்கிறார் என்றே எண்ணினர்.

3.4. சிவயோகசுவாமியின் பரமாசாரியத் திருக்கோலம்

சிறிது காலத்தில் சிவயோகசுவாமிகளின் போக்கில் முழுமாற்றந் தெரியலாயிற்று. வைகறைப் பொழுதில் கொட்டில் முற்றத்தினின்றும் கூட்டிப் பெருக்கும் ஓசை எழுந்தது. கொட்டில் பூசிமெழுகித் தூய்மையாய் இருந்தது. பாம்பு குடியிருக்கும் பாழ்மனை என்பதற்கான அடையாளம் எதுவும் அதில் தெரியவில்லை. கொட்டிலின் வடபக்க அறையில் கோலமலர் சாத்தப் பெற்ற திருவடி எழுந்தருளியிருந்தது. சிவயோகசுவாமிகள் வீதியில் தோன்றும் போது அவரது வெண்ணரைமுடி நேர்த்தியாக முடிக்கப் பெற்றிருந்தது. அவரது நெற்றியிலே மிதமாகச் சாத்தப்பட்ட திருநீற்றுப் பூச்சு ஒளிர்ந்தது. தோளில் தரித்திருந்த சால்வை ஒப்பனையானதொரு கோலத்தில் கிடந்தது. அவருடைய கையிலே எல்லோரதும் பாதுகாவலன் என்பதற்கு அடையாளமான குடையொன்று இருந்தது. அவர் அந் நாட்களில் பிரபலமாயிருந்த சண்முகநாதன் புத்தகசாலையிலே அடிக்கடி தோன்றினார். அங்குவரும் அறிவுப்பசியுடையோர் அறிவனாய் வீற்றிருந்த சுவாமிகளால் ஆகர்ச்சிக்கப்பட்டனர். அவர்களுள் பக்குவமானோரை நோக்கிச் சாத்திரக் குப்பையையே கிளறிக் கொண்டிராமல் நெஞ்சப் புத்தகத்தைத் திறந்து படிக்குமாறு கூறினர். சிவயோகசுவாமிகள் சில வேளைகளில் கஸ்தூரிமுத்துக்குமார் வைத்தியரின் இல்லத்துக்குச் சென்று வந்தார். கஸ்தூரிமுத்துக்குமார் வைத்தியர் அவர்கள் தன்னிடம் வரும் ஏழை எளியவரான நோயாளிகளிடம் பணம் வாங்காதிருந்ததுடன் தூர இடங்களிலிருந்து வருவோர்க்குப் பிரயாணச் செலவையும் கொடுக்கும் வழக்கமுடையவர். அங்கு செல்வோர் யாழ்ப்பாணத்துப் பிரபலம் பெற்ற வைத்தியரொருவரின் நல்லமருந்தையும், அருளாளர் ஒருவரின் அருளமுதையும் பெற்றுச் சென்றனர். யோகசுவாமி சிவயோகசுவாமிகள் செல்லாச்சியம்மையார் எனும் தவமூதாட்டியாரின் இல்லத்திற்கும் இடையிடையே சென்று வந்தார். அம்மையாருடைய உறவினர்கள் சிலர் துறைபோகக் கற்ற நூலறிவாளராயிருந்தனர். அந்நூலறிவாளர்கள் அம்மையாரைத் தமது குடிமுழுதும் விளக்கம் செய்யும் மலர்ச்சுடராக மதித்துப் பெருமை கொண்டனர். தாமே அவ்வம்மையாரின் அடியருமாயினர். அவ்வடியருள் வித்தியாலய அதிபராயிருந்த மல்லாகம் திரு.S.அம்பிகைபாகன் அவர்களும் ஒருவராவர். அவர்கள் அம்மையாரின் அருமை பெருமைகளைத் தமது நண்பர்களான கலைப்புலவர் க.நவரத்தினம் முதலானோருக்கு எடுத்துரைத்தனர். அந்நண்பர்களும் அடிக்கடி வந்து செல்லாச்சி அம்மையாரைத் தரிசிக்கும் நியமம் பூண்டவராயினர். இவ்வாறான கலைஞானியர் கூடும் சமூகத்திலே சிவயோகசுவாமிகள் சில நாட்களில் பிரசன்னமாவார். செல்லாச்சி அம்மையார் பெரும்பாலும் வெளிச்சமாயில்லாத இருள் பரவிய மூலையிலேயே அமர்ந்திருக்கும் வழக்கம் உடையவர். சிவயோகசுவாமி வெளியான ஓரிடத்தில் வீரசாந்தம் விளங்க அமர்ந்திருப்பார். அவர் இடையிடையே மொழியும் மறை போலும் வாசகங்கள் அங்கு சமுகமாயிருக்கும் நூலறிவாளர்களைத் தம்முள்ளே ஆழ்ந்து சிந்தித்துக் களிகொள்ளச் செய்தன. அந்த நுண்மாண்நுழை புலத்தினர்கள் தாம் நுணுகியும் அறியாத நூற்பொருள் யாவும், சிவயோகசுவாமிகளின் சில சொற்களில் விளக்கமாவதைக் கண்டு வியந்து நின்றனர். தாம் கற்ற வித்தை எனப்பெருமைப்பட்டிருந்த வித்துவம் யாவும் சிவயோகசுவாமிகளின் உயிர்ப்புள்ள உண்மை வாசகங்களின் முன் வெறும் உள்ளீடற்ற பதராய்க் கிடப்பதைக் கண்டனர். அவர்கள் தம் முன்னே வீற்றிருக்கும் அறிவனின் முன் மண்டியிட்டுக் கிடக்கும் உணர்வில் பொருந்தினர். இவ்வன்பரெல்லாம் செல்லாச்சியம்மையார் இயற்கையெய்திய பின்னர் திரளாகச் சென்று சிவயோக சுவாமிகளின் திருவடிகளே சரண் எனக் கிடந்தனர். இவ்வாறு தமது அன்பர்களைச் சிவயோக சுவாமிகளிடம் ஆற்றுப்படுத்திய செல்லாச்சி அம்மையார், பரமசிவத்துடன் சேர்த்துவைக்கும் திருவருட் சக்தியைப் போன்று அமைந்தார். சிவயோகசுவாமி தாமாக வரமுடியாத அடியார்களை அரவணைத்துக் கொள்ளும் பொருட்டே இவ்வண்ணம் ஊர்கள் தோறும் உலவி அழகிய ஆடலளித்தனர். தாமாக வரக்கூடிய பக்குவர்களை இருந்த இடத்திலிருந்து கொண்டே ஈர்த்தெடுத்தனர். அன்பர் சிலர் சிவயோகசுவாமிகளை நேரிற் காண்பதற்கு முன்னரே கனவிற் கண்டு புளகங் கொண்டனர். அவர்கள் முதன் முதலிற் சிவயோகசுவாமிகளைத் தரிசித்த போது தாம் கனவிற்கண்ட உருவமும் தம்முன்னே நிற்கும் திருமேனியும் ஒன்றாயிருக்கும் அதிசயத்தைக் கண்டு ஐம்புலன் அடங்கி நின்றனர். இத்தகைய அன்பர்கள் நுணுக்கமான ஒரு முறையால் சிவயோகசுவாமிகளின் அருள் ஒளிக்குள் ஆட்பட்டனர். செல்வச் சிவயோகரால் ஊர் தோறும் திரிந்து அரவணைக்கப்பட்ட அடியவர்களும், இருந்த இடத்திலிருந்தே ஈர்த்தெடுக்கப்பட்ட அன்நபர்களும் சுவாமிகளிடம் அமைந்திருந்த சகல கல்யாண குணங்களிலும் ஒன்றிலோ, சிலவற்றிலோ பெரிதும் ஈடுபடலாயினர். சிவயோகசுவாமிகள் அகத்தளவில் ஆச்சிரமச்செயல் அனைத்தையும் கடந்த அதி ஆச்சிரமவாசியாக இருந்தார். அவரது பலரும் அறிந்த ஒழுக்கமோ நால்வர் காட்டிய நன்னெறியில் ஒழுகும் சைவ ஒழுக்கமாக இருந்தது. அவர் பொருந்திய இடங்களிலே எந்நாளும் நல்லூரை வலம் வந்து வணங்குமாறு கூறினார். அங்கு அன்பர்களைத் தூண்டி அபிடேகம் செய்வித்தனர். செல்வச்சந்நிதியிலே நிலத்தின்கீழ் கால்வைக்க முடியாதபடி சிவலிங்கங்கள் நிரம்பியுள்ளன எனவும், தீபங்கள் எரிகின்றன எனவும் கூறினர். சுருங்கக்கூறின் அவர் மோனமுடிதரித்து இராசாங்கத்திருக்கும் வைதீக சைவத்தின் சின்னமாகத் தோன்றினார். வாமாசார வழியில் வெறுப்புற்று, ஆற்றல் வாய்ந்த சைவப்பிரசாரகரான ஆறுமுகநாவலர் அவர்கள் மறுமலர்ச்சியடையச் செய்த சைவாசாரவழி ஒழுகிய அன்பர்கள், தமக்கு வாய்த்த தக்கதோர் உபதேசமூர்த்தமாகச் சிவயோகசுவாமிகளைக் கொண்டனர். சிவயோகசுவாமிகளிடம் பொருந்தியிருந்த சைவாசாரம் வெறும் வேடத்தளவினதன்று. அது அகத்திற் பொருந்தியிருந்த ஆகம விதிமுறையினின்றும் எழுந்த எளிமையும் உயிர்ப்பும் உள்ள ஒழுக்கமாகும். இந்தத் தாளமேளமில்லாத எளிமையான ஆசாரசீலத்தினாலே பலர் ஈர்க்கப்பட்டனர். ஞானநூல்களிலே ஞானியரை யாழுக்கு ஒப்பிட்டுக்கூறும் ஒரு மரபு உண்டு. யாழ், மீட்டுவோனின் கைவண்ணத்துக்கேற்ப இசை எழுப்புதல் போல ஞானியரும் தம் முன்னேயுள்ளவர்களின் தகவுக்கேற்ப நடந்து கொள்வர். வந்தது போனது மனத்துவையாத சிவயோகசுவாமிகளும் தம்முன்னிலையில் உள்ளாரோடு சங்கற்பவிகற்பம் ஏதுமில்லாமல் பழகினர். எண்ணமெலாம் விட்டிருக்கும் இவ்வேகாந்தநிலையால் பலர் ஈர்க்கப்பட்டனர். ஞானநூற்பயிற்சியுடையோர் ஞானத்தின் திருவுருவாய் நடமாடிய அவரது நல்லறிவிலே ஈடுபட்டனர். அவரிடத்து ஓரிரு தெய்வீக அனுபவங்களைப் பெற்ற அன்பர்கள் தம்சிந்தனையில் தேனூறிநின்ற அவ்வனுபவங்கள் போன்றவற்றை மேலும்மேலும் பெற அவரை நாடினர். வேறுசில அன்பர்கள் சிவயோகசுவாமிகளின் திருமுன்னிலையிலே அமர்ந்திருக்கும் போது கிடைக்கும் உபசாந்தத்திற்காக அவரைச் சூழலாயினர். அவரது அநுபூதி பக்குவர் அனைவரையும் ஈர்த்தது.

3.5. கொழும்புத்துறைக் கொட்டிலுக்கு அடியவர் வருகை

சிவயோகசுவாமிகள் வீற்றிருந்த அந்தத் திவ்வியமான கொட்டிலிலே, சாத்திரஞானமும், சைவாசார சீலமும், சாதனை நாட்டமமுடைய சைவப்பெரியார் மு.திருவிளங்கம் முதலாய திருவாளர் பலர்வந்து அமைதியாயிருக்கலாயினர். சேர்.பொன்.இராமநாதன் முதலிய நாட்டுத்தலைவர்கள் ஆச்சிரம முற்றத்தில் திருக்கதவம் திறக்கும் தருணத்தை எதிர்பார்த்துக் கிடுகிடெனும் நடுக்கத்துடன் நின்றனர். கலைப்புலவர் க.நவரத்தினம் உள்ளிட்ட கல்விமான்கள் சிவயோகசுவாமிகளை முன்னும் பின்னும் தொடர்ந்து திரியலாயினர். வித்துவான் கணேசையர், சோமசுந்தரப்புலவர் முதலாய செந்தமிழ்ப்புலவோர் சுவாமிகளின் திருமுன்னிலையில் பணிந்து நின்றனர். யாழ்ப்பாணத்திலே அக்காலத்தில் வாழ்ந்த கசடறக்கற்ற பலரும், மற்றும் கல்வியறிவில்லாத தோட்டத்தில் வேலைசெய்யும் ஆச்சிமாரும், வண்டியிழுப்போரும் சுவாமியைச் சூழலாயினர். நாத்திகரும், குடிப்பழக்கம் முதலியவற்றை விடமுடியாதோருங்கூடச் சுவாமிகளின் திருவடிகளில் மண்டியிட்டுக் கிடந்தனர். கிறித்தவரும், பௌத்தரும், இஸ்லாமியரும் அவரை அண்டிவரலாயினர். அத்திவ்வியமான ஆச்சிரமத்தில் அடியவர் வருவதும் போவதுமாயிருந்தனர். காலை மாலை வேளைகளிலே ஆச்சிரமத்தின் முன்பாக இருந்த வீதியில் மோட்டார் வண்டியும், மாட்டுவண்டியும், இழுவை வண்டியும் நிரையாய் நின்றன. துரையப்பா அவர்களது பண்ணிசை ஒன்றே கொழும்புத்துறைக் கொட்டிலினின்றும் எழுந்த ஆரம்பகால அருச்சனை என்பது முன்னர் கூறப்பட்டது. அக்காலத்திலே கதிர்காமத்துக்குப் பாதயாத்திரை செய்த அருணாசலம் சீமாட்டியாரவர்கள் (சேர் மகாதேவா அவர்களின் அன்னையார்) ஆச்சிரமத்தில் திருவிளக்குப்பணி செய்தார். மற்றோர் அதிபத்தர் சுவாமியின் திருமுன்னிலையிலே கர்ப்பூரம் கொளுத்திக் கும்பிடும் துணிவினரானார். ஆச்சிரமத்தினின்றும் தேவாரப் பண்ணிசையும், இனிய கீர்த்தனங்களும் ஒலித்தன. பூசனைப் பொருட்களின் திவ்வியமான வாசனை வீசலாயிற்று. சுவாமிகள் தம்முன்னிலையில் இருப்பாரோடு இயல்பாகப் பேசினார். அவ்வியல்பான மொழியிலும் உயர் ஞானம் தெரியலாயிற்று. சுவாமிகள் ஒரு சமயம் அன்பரொருவரிடம் “என்ன புதினம்” என விசாரித்தார். அன்பரும் “ஒரு புதினமுமில்லை சுவாமி” எனும் வழமையான பதிலைச் சொன்னார். அப்பொழுது “ஓம்! ஒரு புதினமுமில்லை; எல்லாம் இருந்தபடியே இருக்கின்றன.” எனும் உயர்ஞானத்தைச் சுவாமிகள் அருளினர். சில வேளைகளில் தமது திருமுன்னிலையிலே அமர்ந்திருக்கும் அன்பரின் நாட்டத்தைப் பொறுத்து விவேகசூடாமணி, பகவற்கீதை முதலாய நூல்களிலிருந்து சில பகுதிகள் வாசிக்கப்பட்டன. இப்பகுதிகளின் மெய்ப்பொருளை அறிய உதவும் திறவுகோல் போன்ற வாசகங்களைச் சுவாமிகள் இடையிடையே மொழிந்தார். நாடோறும் மாலை வேளையில் சிவபுராணம் ஓதப்பட்டது. சிவபுராணத்தின் பொருளான சிவபெருமானே போன்று அமர்ந்திருக்கும் சிவயோகசுவாமிகளின் திருமுன்னிலையில் சிவபுராணத்தை ஓதிமகிழும் பாக்கியத்திற்காக அன்பர் திரளாய்க் கூடினர். ஒரு சமயம் சுவாமிகள் சிவபுராணம் பாடி முடிந்ததும், வீடு செல்வதற்காக விடைபெற நின்ற அடியவர்களுக்குத் திருவருட் பிரசாதம் ஈந்து “போய் வாருங்கள்” எனச் சொல்லும் போது “நாங்கள் போவதும் வருவதுமில்லை” என அருளினார். அவ்வடியவர்கள் வீதியிற் செல்லும் போது விம்மிதமுற்றவராய் “இவர் போக்கும் வரவும் இலாப்புண்ணியன்” என நாக்குழறக் கூறிக் கொண்டு சென்றனர். இவ்வாறாய் அவ்வாச்சிரமம் நடமாடும் நம்பன் உறையும் திருக்கோவிலுக்குரிய பொலிவினைப் பெறலாயிற்று.

3.6. நாடெங்கும் சென்று அன்பரை வளர்த்தல்

சிவயோகசுவாமிகளது அடியவர் சிலர் அரசாங்க சேவையில் பணி புரிபவராயிருந்தனர். நாடெங்கும் பணி புரிந்த அவர்கள் அடிக்கடி கொழும்புத்துறை ஆச்சிரமத்துக்கு வந்து செல்ல இயலாதவராயிருந்தனர். அத்தகைய அன்பர்களின் இருப்பிடங்களைத் தேடிச் சுவாமிகள் தாமே சென்றார். முக்கியமாக அவ்வடியவர்கள் ஏதேனும் வில்லங்கத்துள் அகப்பட்டு நொந்த உள்ளத்தினராய்ச் சுவாமிகளை வேண்டுதல் செய்த வேளைகளில் சுவாமி அங்கு எழுந்தருளி அருள்பாலித்தனர். மாத்தளையில் தபாலதியராகப் பணிபுரிந்த திரு.கந்தசாமி அவர்களது இல்லத்துக்கும், பேராதனையிலே தேயிலைத் தொழிற்சாலையில் பணிபுரிந்த திரு.வேலுப்பிள்ளை அவர்களது குடிமனைக்கும், கம்பளை முதலாய இடங்களில் வைத்திய அதிகாரியாகப் பணிபுரிந்த வைத்திய கலாநிதி இராமநாதன் அவர்களது இல்லத்துக்கும், நாவலப்பிட்டி தில்லையம்பலம் அவர்களது இல்லத்துக்கும், அங்கு அரசபணிபுரிந்த அன்பர்கள் பலரது இருப்பிடங்களுக்கும் அடிக்கடி சென்று வந்தனர். இவ்வாறே இலங்கையின் பல பாகங்களிலும் வாழ்ந்த அன்பரானோரது இருப்பிடங்களுக்கெல்லாம் சுவாமி எழுந்தருளினர். அவ்வன்பர்களும் தமது இல்லங்களில் அமைத்த பூசை அறையைச் சுவாமிக்கெனப் பக்குவமாகப் பேணி வைத்திருந்தனர். சுவாமி அடியவர் ஒருவரின் இல்லத்தில் எழுந்தருளியுள்ளார் என்பதை மோப்பம் பிடித்து அறிந்து கொள்ளும் அன்பர் பலரும் அவ்விடம் சென்று சுவாமியைத் தரிசித்து வரலாயினர். இவ்வாறாய்ச் சுவாமி சென்று தங்கும் இல்லம் எல்லாம் திருக்கோயில் போலப் பொலிவு பெறலாயின. சுவாமிகள் 1942 ஆம் ஆண்டில் “இனி வெளியூர்களுக்குச் செல்வதில்லை: விரும்பியவர்கள் இங்கு வரட்டும்” எனக் கூறிக் கொழும்புத்துறை ஆச்சிரமத்தில் உறைந்தது வரை ஏறக்குறைய இருபத்தைந்து ஆண்டுகள் மாதம் ஒரு முறையாதல் மலை நாட்டுப் பகுதிகள், கொழும்பு, திருகோணமலை, மட்டக்களப்பு ஆகிய இடங்களுக்குப் பிரயாணம் செய்து அடியவர்களை வளர்த்து வந்தனர்.

3.7. சுவாமியைச் சுழ்ந்த திருக்கூட்டம்

கொழும்புத்துறை ஆச்சிரமத்துறைந்தும், அடியவர் இருப்பிடந்தேடி நாடெங்கும் சென்றும் நிகழ்த்திய அருளாடலாலே சிவயோகசுவாமிகளிடத்துப் பற்றுதல் பூண்ட பெரியதொரு திருக்கூட்டம் உருவாயிற்று. அத்திருக்கூட்டத்திலே சிலர் கொண்டும் கொடுத்தும் குடி குடி ஆட்செய்யும் தொண்டுள்ளம் படைத்தோராய்ப் பரிணமித்தனர். மேலும் சிலர் “எவரேனும் ஈசனை இடைவிடா தெண்ணில் அவரே நமக்குநல் லன்பராங் கண்டீர்” என்றவாறு சிவயோகசுவாமிகளை இடைவிடாது நினையும் பக்தர்களாக மலர்ந்தனர். கணவன், மனைவி, பெற்றார், பிள்ளைகள், அண்ணா, தம்பி, சிற்றன்னை, சிற்றப்பா என்றவாறு குடும்பத்தவர் அனைவருமாகச் சேர்ந்து கொத்தடிமை பூண்ட ‘சுவாமிகுடும்பங்கள்’ சிலவும் உருவாயின. இத்தகைய சுவாமிகுடும்பத்தினர் ஊரவர் தம்மைப்பித்தர் என்று இகழ்வதையும் பொருட்படுத்தாது, சிவயோகசுவாமியைச் சிந்தை செய்வதற்கு வாய்ப்பாகத் தமது குழந்தைகளுக்குச் சிவன்செயல், சிவதொண்டன், யோகரானந்தன், யோகரன்பன் என்பன போன்ற திருநாமங்களைச் சூட்டி மகிழ்ந்தனர். மற்றும் சிலர் தருமநெறி பிசகாத கருமயோகிகளாக ஒழுகினர். வேறு சிலர் சுவாமியை அண்டிவாழும் துறவியர் ஆயினர். இவ்வண்ணம் இங்கிலாந்துப் பிரபுக் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரும் தமது சுகபோகமனைத்தையும் துறந்து சுவாமியின் அடியவராயினர். மார்க்கண்டு சுவாமி முதலாய பிரமச்சாரிகள் சுவாமி பயிற்றிய தன்னையறியும் ஞானத்தில் முதிர்ந்து சிவதொண்டர்க்கெல்லாம திசைகாட்டியாய் ஒளிர்ந்தனர். ஞானநூற்பயிற்சியும், ஆச்சிரம நடைமுறை பற்றிய அறிவும், ஒழுக்கத்தால் வைரித்த வாழ்வும், பிரமச்சரிய விரதமுமுடைய சுவாமியின் ஞானப்புதல்வர் சுவாமிகளின் அடிச்சுவடுகளைப் பின்பற்றினர்.

3.8. சிவதொண்டு

சுவாமியைச் சூழ்ந்த திருக்கூட்டமானது “தொண்டர்காள் தூசிசெல்லீர் பத்தர்காள் சூழப்போகீர் ஒண்டிறல் யோகிகளே பேரணி உந்தீர்கள் திண்டிறற் சித்தர்களே கடைக்கூழை சென்மின்கள் அண்டர்நா டாள்வோ நாம் அல்லற்படை வாராமே” -திருவாசகம்- என்றாங்கு ஒரு திருப்படையெழுச்சிக்கேற்ற தொண்டர்களையும், பக்தர்களையும், யோகியரையும், சித்தர்களையும் இன்னும் ஞானவாள் ஏந்தும் ஐயர்களையும் கொண்டதாய் இருந்தது. இத்திருக்கூட்டத்தைக் கொண்டு, சிவன்செயலான இவ்வுலகை மண்ணுலகமாகத் தோற்றச் செய்யும் மாயப்படைகளை வென்று, சிவலோகமாகக் காணச்செய்யும் ஞான ஒளிபரப்பும் சிவதொண்டிலே சுவாமிகள் சுறுசுறுப்பாக ஈடுபடலாயினர். சுவாமிகளின் சித்தத்துள் முழு உலகுக்கும் ஞான சோதியைப் பரப்பும் நவீன சூழலில் அமைந்த ‘பரத்துவாச ஆச்சிரமம்’ ஒன்று குடிகொண்டிருந்தது. அவர் உலகிலே தருமநெறி என்றும் நின்று நிலவும் வண்ணம் நிரந்தரமான பணிகள் சிலவற்றைச் செய்தனர். அன்பர்களுக்கு ஞானவித்தை பயிற்றும் சிவதொண்டன் ஏட்டைத் தொடங்கினர். நித்தியாநித்தியந் தெரிந்த நிபுணனான அச்சிவதொண்டனைத் தமது நிழலுருப்போல் திகழச்செய்தனர். வாழையடி வாழையாகவரும் திருக்கூட்டம் ஞானசாதனை பயில்வதற்கு வாய்ப்பாகச் சிவதொண்டன் நிலையத்தை நிறுவினர். அத்திருக்கோயிலைத் தமது சாந்நித்தியம் நிலவும் ஞானப்பண்ணையாக்கினர். அவரது திருவாய்மொழி ‘நற்சிந்தனை’ எனும் நூலுருப் பெற்றது. அது சிவயோகசுவாமிகளது மந்திரரூபமாயிற்று. ஞானநாட்டமுடையார்க்கு உகந்த சாதனைமுறைகளான திருவடிவழிபாடு, பாதயாத்திரை முதலியவற்றில் தொண்டர்கள் சாதனை பயில்வதற்கான ஏற்பாடுகள் யாவற்றையும் செய்தனர். அவர் “இங்கு நான் ஒருகுறையும் வைக்கவில்லை” என்று கூறியபடி தம் சிவதொண்டை நிறைவுறச் செய்தனர். மெய்ப்பொருள் தான் அருள்மேனி தாங்கி வந்த கருமத்தை நிறைவுறச் செய்தது.


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home/sivathon/public_html/wp-includes/functions.php on line 4556