செங்கலடி நிலையம்

யோகசுவாமிகளுடைய சிந்தையிலே நல்லூர்த்தலம் போன்று சித்தாண்டித்திருத்தலம் நன்றாகப் பதிந்திருந்தது. அவ்விடத்திலே ஒரு சிவதொண்டன் நிலையம் அமையவேண்டுமெனச் சுவாமிகள் திருவுளம் பற்றினார். அவரது திருவுளப்பாங்கின் வண்ணம் சித்தாண்டி-செங்கலடியில் ஒரு மௌனமாயிருந்து இளைப்பாறும் இச்சிவதொண்டன் நிலையம் சுவாமிகள் திருவடிக்கலப்புற்ற ஆண்டு (1964) பங்குனி மாதத்தில் காலூன்றியது.

chenka3செங்கலடி சிவதொண்டன் நிலையத்தின் முகப்புத்தோற்றம்

chenkaladi thiruvadiதியானமண்டபத்திருக்கும் திருவடி

ஓர் ஆரணியச் சூழலில் அமைந்த பண்டைய ஆச்சிரமத்தின் தோற்றத்தினைப் போன்றதான இந்நிலையம் நியமங்களில் யாழ் சிவதொண்டன் நிலையத்தை ஒப்பதாகும். யாழ் சிவதொண்டன் நிலையத்து முதன்மையான சாதனை சிவத்தியானமெனின் இடமகன்ற ஆச்சிரம வளவினையும், வள வயல்களையும் கொண்ட செங்கலடி சிவதொண்டன் நிலையத்தின் முதன்மையான சாதனை சிவதொண்டு ஆகும்.

chenka1புராண மண்டபத்தில் பிரதிட்டை செய்யப்பட்டுள்ள சுவாமிகளின் திருவுருவம்

இச்சிவதொண்டன் நிலையம் யோகசுவாமிகளின் உத்தமத்துறவியரிருவர் சிவதொண்டு புரிந்த இடமாகும். இந்நிலையம் கால்கொண்ட நாள்முதலாய் பதின் மூன்று வருடங்கள் சுவாமிகளின் மேனாட்டுத் துறவியான சந்தசுவாமிகள் சிவதொண்டாற்றினார். இதன் பின் செல்லத்துரை சுவாமிகள் கால் நூற்றாண்டுகாலம் அரும்பணியாற்றினார்.

இந்நிலையத்தில் திங்கள் தோறும் யாக நாளுக்குப் பதிலாக மாதந்தோறும் இரு ஞாயிறு தினங்களில் இருள் விலக்கும் ஆச்சிரம வாழ்வு நாள் நடைபெறும். கனிதரும் மரங்களும், நிழல்தரும் மரங்களும் நிறைந்த இவ்வாரணியச் சூழலில் அன்பர்கள் தம் இயல்பு வாழ்க்கையை மறந்து ஆச்சிரம வாசியாகவே மாறிவிடுவர்.

chenka2மாணிக்கவாசக சுவாமிகளை நினைவூட்டும் வண்ணம் நிலையத்துள் அமைந்துள்ள நிறைமலர்க் குருந்தமரம்

மட்டக்களப்பு சிவதொண்டன் நிலையம் ஆண்டுதோறும் தனது கால்கோள் விழாவினை பங்குனி முதலில் மிகவும் எளிமையாகக் கொண்டாடுகிறது.செங்கலடி சிவதொண்டன் நிலைய கால்கோள் விழாவினை ஒட்டி வருடந்தோறும் மட்டக்களப்புப் பாடசலை மாணவரிடையே சமய அறிவினை வளர்க்கும் வகையில் சைவத்திருமுறைப் போட்டியும் நாயன்மாரது சீர்மைகளை புலப்படுத்தும் வகையில் எழுது சித்திரப்போட்டிகளும் நடத்தப்பெறுகின்றன.