Deprecated: __autoload() is deprecated, use spl_autoload_register() instead in /home/sivathon/public_html/wp-includes/compat.php on line 502

Deprecated: Function create_function() is deprecated in /home/sivathon/public_html/wp-content/plugins/list-category-posts/include/lcp-widget.php on line 121
சற்குரு தரிசனத்துக்குப் பக்குவராதல் | சிவதொண்டன்

சற்குரு தரிசனத்துக்குப் பக்குவராதல்

1.1. இளமை

யோகசுவாமிகள் தமது குருநாதரைத் தரிசித்து ஞானமுதிர்ச்சி பெறுவதன் முன்னர் எங்கே வளர்ந்தார்? எப்படி வாழ்ந்தார்? என்பன போன்ற விடயங்களை நிரல்பட எழுதக்கூடிய ஆற்றல் எவரிடத்திலும் இல்லை. சுவாமிகளிடம் இவ்விடயங்களை நேர்முகமாகக் கேட்கக்கூடியதாகவும் இருக்கவில்லை. ஏனெனில் அவர்களோ பெருந்துறவிகளாவர். அநுபூதி பெறாத துறவிகளிடத்தும் அவர்கள் பூர்வாச்சிரம விடயங்களைக் கேட்பது சைவர்களாகிய எமக்குப் பண்பாகாமை யாவரும் அறிவர். இஃது இவ்வாறாயின் உண்மை ஞானமே வடிவாக விளங்கிய மெய்ஞ்ஞானத் துறவிகளாகிய சுவாமிகளிடம் அவர் பூர்வாச்சிரம வரலாற்றினை யார்தான் விபரமாகக் கேட்க முடியும்!

நேரே தரிசனத்துக்குச் செல்பவர்களெல்லாரும் சுவாமிகளைச் சிவமாகவே பாவித்தும் பரவியும் பணிந்தும் வந்தார்கள். அப்படியாயிருக்கையில் அவர்கள் சுவாமிகளைச் சாதாரண மனிதனாக நினைக்கமாட்டார்கள். சாதாரண மனிதனாக நினைப்பவர்கள் சுவாமிகளின் தரிசனத்திற்குச் செல்லவும் மாட்டார்கள். சுவாமிகளின் சன்னிதானத்தில் இவ்வகையான வினாக்கள் எவருக்கும் எழுந்ததில்லை. சுவாமிகளின் சமாதியின் பின்பே அவர்கள் வரலாற்றை வரைய முற்படும் யாவரும் இவற்றை ஆராய்கின்றனர். அவ்வாராய்ச்சிகளெல்லாம் இங்கும் அங்குமாகச் சேர்த்துப் பொருத்திய தொடர்பேயன்றி எதுவும் உண்மைத் தொடர்பாய் இருக்க முடியாது.

ஒருவர் சுவாமிகளின் பிள்ளைத்திருநாமம் சதாசிவம் என்பர். இன்னொருவர் யோகநாதன் என்பர். வேறொருவர் தம்பிஐயா என்பர். இவ்வாறு ஒவ்வொருவரும் தாம்தாம் கேள்விப்பட்டதற்குத் தகக் கூறினாரே அன்றி எவராவது சுவாமிகளிடமிருந்து நேர்முகமாகக் கேட்டறிந்ததை நாம் அறியோம். வளர்த்த மாமியார் இப்படிக் கூறினார்; கூடித்திரிந்த விதானையார் இப்படிக் கூறினார்; என்றறிகிறோமேயன்றி உண்மையைத் திட்டவட்டமாய்க் கூறுவார் எவருமிலர். இந் நிலையில் சுவாமிகளின் சிறுவயதுக்கால வரலாறு இருள்சூழ்ந்த ஒன்றாகவே என்றும் இருக்கும். எனினும் சுவாமிகள் கூறியதாக நிலவும் சில கதைகளிலிருந்து அவர்கள் பூர்வாச்சிரமத்தை மேல்வருமாறு திரட்டிக் கூறலாம்.

வளம் நிறைந்த ஈழத்திருநாட்டின் வடபகுதியில் யாழ்ப்பாணம் எனும் சிறப்புடையதொரு நகரம் உளது. இந்நகரின் எல்லைக்குட்பட்டதாகக் கொழும்புத்துறை என்னும் ஓர் ஊர் உள்ளது. இவ்வூரின் பழங்குடிமக்கள் சைவப் பண்பில் சாலச்சிறந்து விளங்கினர். இவ்வூரே பல்லாண்டுகளாக எங்கள் குருநாதனின் வசிப்பிடமாகப் பொலிந்து விளங்கியது. தொன்மைமிக்க கந்தகோட்டம் விளங்கும் மாவிட்டபுரத்தில் தவத்திரு சின்னாச்சிப்பிள்ளை என்ற திருப்பெயரையுடைய இவரது அன்னையார் பிறந்தார். அவர்களின் சந்ததி உறவினர் இன்றும் அக்கிராமத்திலுள்ளனர். அவர்களுள் அண்மையிற் காலஞ்சென்ற யமன் அப்புக்குட்டி என்பவரைத் தமது மாமனார் என்று சுவாமிகள் கூறியது எமக்குத் தெரியும். தாயாரின் பிறப்பிடமாகிய மாவிட்டபுரமே சுவாமிகளினதும் பிறப்பிடமாகும். இவர்களது தந்தையார் பெயர் அம்பலவாணர் என்பதாகும். தந்தையார் பிறப்பிடமும் மாவிட்டபுரத்துக்கு அண்மையிலுளதாகும் என்பர் சிலர். உண்மை யாதென இற்றைவரை அறிகிலோம். என்றாவது அறிய வருமோ என்பதும் ஐயத்துக்கிடமேயாம். இஃது அத்தியாவசியமுமாகாது. இவர்களுடைய வாழ்க்கையைப்பற்றி விரிவாக அறிகிலோம். இவர்கள் மஸ்கேலியாப் பகுதியில் வியாபாரம் செய்து வாழ்ந்தமையால் கொழும்புத்துறையிலுள்ளார்க்கும் ஏனையோருக்கும் இவர்களைப்பற்றி ஏதும் விரிவாக அறிந்திருக்க முடியவில்லை போலும். சுவாமிகளின் சிறிய தகப்பனார் பெயர் சின்னையா. இவர் பிற்காலத்தில் கத்தோலிக்க கிறித்தவ மதத்தைத் தழுவியிருந்தார். அம்பலவாணர் சகோதரியாகிய முத்துப்பிள்ளை அம்மையாரிடமே சுவாமிகள் தமது சிறு பிராயத்தில் வளர்ந்து வந்தார். தகப்பனார் முதுசொமாகத் தமக்குச் சுன்னாகம் பூதவராயர் கோவிலடியில் ஒரு பனை வளவு இருப்பதாகச் சுவாமிகள் ஒரு முறை எமக்குக் கூறியுள்ளார். பெற்றாருடன் இவர் சிறுவயதில் கொழும்புத்துறையிலேயே வசித்து வந்தார். கொழும்புத்துறையிலுள்ள துண்டி என்று அழைக்கப்படும் பகுதியில் வாழ்ந்து வந்தார். அவர்கள் வளவில் குலதெய்வமாக ஒரு வைரவமூர்த்தியை வைத்து வணங்கி வந்தனர். பின் சுவாமிகளின் உறவினர் துண்டியை விட்டுக் கச்சேரியடிக்கு மாறிவிட்டார்கள். காரணம் யாதென அறிகிலோம். அப்படி மாறிய காலத்தில் அந்த வைரவ மூர்த்தியையும் எடுத்து வந்து விட்டார்கள். துண்டியில் சுவாமிகளின் யௌவனகாலம் கழிந்தது. அக்காலத்தில் தாங்கள் துண்டிவெளியில் விளையாடியதாகக் கூறினார்கள். ஒருமுறை சுவாமிகள் மற்றுஞ் சிறுவருடன் விளையாடிக் கொண்டிருக்கையில் யாரோ ஒரு கரையூர்வாசி இவர்களை அதட்டிப் பயமுறுத்தினாராம். அப்போது சுவாமிகள் பக்கத்தே நின்றவோர் பூவரசமரத்தில் கம்பு பிடுங்கி அவரைத் துரத்திக் கொண்டு போய் வெகு தூரத்தில் விட்டுவந்ததாகக் கூறினார்கள். அக்காலத்தில் சுவாமிகளை அம்பலவாணர்மகனெனவே அறிமுகம் செய்வார்களாம்.

மிகச் சிறுவயதிலேயே அன்னையார் சிவபதம் அடைந்து விட்டார் என்பர். ஆயினும் சுவாமிகள் எமக்கும் வேறு பலஅன்பர்க்கும் அடிக்கடி கூறிய மேல்வரும் சம்பவங்களிலிருந்து ஏறத்தாழ இவரது பத்தாவது வயதுவரையாவது அன்னையார் சீவித்திருக்கின்றார் என ஊகிக்க இடமுண்டு. ஒரு நாள் தாம் சாப்பிட்ட சட்டுவத்துடன் சோற்றினைக் கொண்டுபோய் வெளியில் வீசியபோது தம் அன்னை “நீ பிச்சையெடுத்துத் தான் சீவிப்பாய்” என்று கூறியபடி என்றும் ஒரு பிச்சைக்காரனாகவே தாம் வாழ்ந்து வருவதை மிகவும் இறும்பூது கொண்டு சொல்லி மகிழ்வார். “தாய் சொல்லைத் தட்டாதே” எனும் ஓளவை மொழியை அடிக்கடி உணர்த்தவும் இச்சம்பவத்தைக் கூறுவார். அன்றியும் மாவிட்டபுரம் கந்தசுவாமிகோயில் தேர்த் திருவிழாவுக்குத் தமது அன்னையார், கையிற் பிடித்துக் கூட்டிச் சென்றதாகவும், ஒரு முறை நல்லூர் முருகன் கோயிற்றிருவிழாவுக்குத் தாயாருடன் செல்லும் பொழுது இருபகுதி மக்கள் கலகம் செய்து கல்லெறிபட்டதாகவும், தமது காலொன்றில் ஒரு கல்பட்டுத் தாம் வருந்தியதாகவும் கூறியுள்ளார்.

தமது அன்பர்களுக்குக் கதையோடு கதையாகக் கூறியவற்றிலிருந்து இவர் பிறந்த காலத்தை ஆங்கீரச வருடம் வைகாசி மாதம் பதினெட்டாந் தேதி புதன்கிழமை காலை அவிட்ட நட்சத்திரக் கடைக்கூறு நாலாம்பாதம் எனத் தமிழ்ப்பஞ்சாங்கக் கணக்கின்படி ஒருவாறு ஊகித்துக் கணக்கிட்டிருக்கின்றனர். (இது ஆங்கிலேயர் கணக்கின்படி 1872 ஆம் ஆண்டு மே மாதம் 29ம் தேதிக்குச் சரியாகும்.) இக்குறிப்பின்படி சந்நியாச யோகமே விசேட பலனாகும். எனவே அம்பலவாணருக்கும் சின்னாச்சிப்பிள்ளை அம்மையாருக்கும் அருந்தவக் குழந்தையாக 1872ம் ஆண்டு யோகநாதன் அவதரித்தார் எனநாம் நிச்சயம் செய்யலாம்.

 1.2. கல்வி

சுவாமிகள் கல்விகற்ற பாடசாலை கொழும்புத்துறையில் அந்நாளில் இருந்த கத்தோலிக்கப் பாதிரிமாரின் ஒரு நிறுவனமாகும். அக்காலத்தில் கிறித்தவப் பாடசாலைகளில் சேர்க்கும் சைவப்பிள்ளைகளுக்கும் ஒரு கிறித்தவப் பெயரை முன்வைத்தே பாடசாலைப் பதிவேடுகளில் பதியும் வழக்கம் இருந்தது. அதற்கியையப் பாடசாலையில்  ஜோன் என்னும் நாமம் இடப்பட்டதாக அறிகிறோம். அதற்குமுன் அவர்களின் பிள்ளைத்திருநாமம் எது என்பதை அறிவார் எவரும் ஈண்டிங்கில்லை. பாடசாலையில் படிக்கும்போது மிகுந்த துடிப்பும் வீரமும் விளங்கிய ஒரு பாலகனாகவே காணப்பட்டார். ஆரம்பப் பாடசாலைப் படிப்பின் பின் சிறியதந்தையார் உதவியுடன் யாழ்ப்பாணம் சம்பத்திரிசியார் கலாசாலையில் (St. Patricks College) சேர்ந்து ஆங்கிலமும் தமிழும் படித்தார். இத்துடன் அவரது பாடசாலை வாழ்வு நிறைவுற்றது.

1.3. இயற்கையழகும் இறை நினைவும்

பாடசாலைப் படிப்பு முடிந்ததும் தந்தையார் மைந்தனை அழைத்துக்கொண்டு தாம் தொழில் செய்யும் இடமான மஸ்கேலியாவுக்குச் சென்றனர். அங்கே மைந்தன் தம்மோடிருந்து தொழில் பயில வேண்டுமென்பதே தந்தையின் விருப்பமாயிருந்தது. ஆனால் மைந்தரோ பசுமையும், குளிர்மையும் நிறைந்த மலைப்பிரதேச அழகிலே மனம் பறிகொடுப்பவராயிருந்தார். நுண்துமி சிந்தும் வேளைகளில் சட்டையும் அணியாமல் பிடித்தமான ஓரிடத்து அமர்ந்து வெறித்த பார்வையினராயிருப்பார். பவளநிறமான பாக்குக்குலைகளுடன் நீண்டு வளர்ந்து நிற்கும் கமுகு மரங்களில் அவர் நெடுமாலைக்கண்டனரோ? பட்சிகளின் தீங்குரலினிமையில் கண்ணனின் புல்லாங்குழலிசை நினைவு வந்ததோ? மலைச்சாரலில் கிளைத்தோங்கி நிற்கும் தனிமரம், ஆடும்மயிலையும் அம்மயிலிலேறிவரும் குன்றுதோறாடும் குமரனையும் ஞாபகமூட்டியதோ? இருந்தபடியே இருக்கும் மலைகளும், அம் மலைகளில் தவழ்ந்து விளையாடும் மேகமும் பேசும் மௌன மொழியின் சுகம் புரிந்ததோ! எழிலார்ந்த இயற்கைக் கோலங்களாய்ப் பொலிந்து தோன்றுவது இறைவனின் இன்னருளேயென்பதை நுணுக்கமாய்க் கண்டனரோ? இவ்வாறு தனிமையில் இட்டகால் இட்டகையனாக அமர்ந்து பேயே போன்றிருக்கும் இயல்பு, இலாபத்திற் கண்ணாயிருக்கும் வியாபாரத் தொழிலுக்கு ஏற்றதல்ல என்பதைத் தந்தையாரறிவார். ஆதலால் மைந்தனை மஸ்கெலியாவிலிருந்து கொழும்புத்துறைக்கு அனுப்பி வைத்தார்.

1.4. வணக்கம் மணக்கும் வேலை

கொழும்புத்துறையைச் சேர்ந்த சிறிது காலத்தில் கிளிநொச்சியில் இரணைமடுக்குளத் திட்டத்தில் வேலைக்கருவிக் களஞ்சியப் பாதுகாவலர் எனும் உத்தியோகம் அவருக்குக் கிடைத்தது. இவ்வுத்தியோகம் அவருக்கு மிகவும் உவப்பாய் அமைந்தது. காலையில் வேலைத் தலத்திற்குச் செல்வோர்க்கு வேண்டிய கருவிகளை எடுத்துக் கொடுப்பதும் மாலையில் அவற்றைப் பெற்றுப் பக்குவமாக வைப்பதும் ஆய இவையே அத்தொழிலின் வேலைகள். எனவே இது ஒரு சோலியற்ற ஆறுதலான தொழில். குடிமனைகள் குறைந்ததும், மயிலாடுஞ் சோலைகளையுடையதுமான ஆரணியச் சூழலிலே வாய்த்த இந்த ஆறுதலான தொழில் அவர் எண்ணிய வண்ணம் வாழ ஏற்றதாயமைந்தது. அவர் தமது கடமையைக் கவனமாகச் செய்தார். தம்முடைய உத்தியோகக் கடமைக்கு மேலாக அலுவலகச் சூழலிலே கனிதரும் மரங்களை நட்டுக் கவனமாகப் பராமரித்து வந்தார். அவ்வாறு அவர் பாராமரித்து வளர்த்த மாமரம் ஒன்று இன்றும் ‘சாமியார் மரம்’ எனும் பெயருடன் கிளிநொச்சியிலுள்ளது. (இதன் வித்துக்களின் முளைத்த கன்றுகளில் ஒன்று வளர்ந்து, கிழக்கே செங்கலடி சிவதொண்டன் நிலையத்தில் நின்று கனி உதவுகின்றது. கிளிநொச்சியில் அந்த மாமரம் இருக்கும் காணியும் சிவதொண்டன் சபையாரின் உபயோகத்துக்கென உறுதி முடிக்கப்பட்டுள்ளது.) அவர் தம்மோடு பணிபுரிபவர்களுடன் அன்பார்ந்த உள்ளத்தினராய்ச் சந்தோஷமாகப் பழகினர். பண்போடு வார்த்தையாடினர். பணப்பற்றுச் சிறிதும் இல்லாதவராயிருந்தனர். தாம் பெறும் அந்த அந்த மாதச் சம்பளத்தை அந்த அந்த மாதத்திலேயே செலவழித்துவிட்டு அடுத்த மாதத்துக்கென எதுவும் சேகரியாதிருக்கும் பழக்கத்தைப் பேணி வந்ததாகப் பின்னர் தம் அன்பர்களிடம் கூறினர். தமக்கு வேண்டியது போக மீதியைக் கோயிற்கருமங்களுக்கும், உற்றார் உறவினர்களுக்கும், ஏழை எளியவர்க்கும் கொடுத்து வந்தனர். அவரது சொல்லும் செயலும் அவருள்ளே நிறைந்து கிடக்கும் அதிமானுடத்தைப் பறை சாற்றி நின்றமையை அவரோடு பழகியோர் பலரும் அறிந்தனர். அவர்கள் இயல்பாகவே சுவாமிகளை உயர் நிலையில் வைத்து மிகுந்த மரியாதையோடு பழகினர். பின்னாளில் துறவு மனப்பான்மை முதிர்ந்து உத்தியோகத்தினின்றும் விலகும் எண்ணத்தைத் தெரிவித்த பொழுது மேலதிகாரியாக இருந்த ஆங்கிலத் துரை (BROWNY) சிறந்த ஊழியரொருவரை இழப்பதற்கு விரும்பாமையால் அவ்வெண்ணத்தை மாற்றிக்கொள்ளுமாறு மீண்டும் மீண்டும் சுவாமிகளிடம் வேண்டினார். சுவாமிகள் தம்முடிவில் நிலையாய் நிற்பதைக் கண்டதும் “நீங்கள் வேலையைவிட்டு விலகுவதானால் உங்களுக்கு விருப்பமான ஒருவரை இவ்வேலையில் சேர்த்துவிட்டாதல் செல்லுங்கள்” எனச் சுவாமிகளிடம் வேண்டிக் கொண்டார். இத்தகவலை இவ்வேற்பாட்டின்படி வேலையிற் சேர்ந்துகொண்ட சுவாமிகளை வளர்த்த மாமியாரின் மகனான வைத்திலிங்கம் என்பார் எமக்குக் கூறினர்.

1.5. ஞானியர் நாட்டம்

சுவாமிகள் கிளிநொச்சியில் தொழில் புரியும் காலத்திலேயே சுவாமி விவேகானந்தரின் இலங்கை விஜயம் நிகழ்ந்தது (1897). அப்பெரியாருக்கு யாழ்ப்பாணத்தில் அளிக்கப்பட்ட வரவேற்பில் சுவாமிகளும் உற்சாகத்துடன் பங்குபற்றினர். கோட்டையிலிருந்து இந்துக்கல்லூரி வரை சென்ற ஊர்வலத்திலும், பின்னர் கல்லூரியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்திலும் சுவாமிகள் கலந்து கொண்டனர். பின்னாட்களில் அவர் தம் அன்பர்களிடத்து “விவேகானந்தர் மேடையின் இருபக்கங்களிடையேயும் சிங்கக் குட்டி போல் உலாவிக் கொண்டு பேசினார்” எனவும், “அவர் பேசினார் என்பதிலும் சிங்கம் போல் கர்ச்சித்தார் என்பதே சரி” எனவும் கூறி மகிழ்ந்தார். அவர் பேசிய முதல் வசனத்தைப் பல தடவைகளில் அன்பர்களுக்குக் கூறியிருக்கிறார். “விடயம் பெரிது நேரமோ குறுகியது” (The Subject is large but the time is short) என்பதே அவ்வாசகமாகும். விவேகானந்தருடைய வருகை தொடர்பாகச் சுவாமிகள் உற்சாகமாகக் கூறியவிடயங்கள் இளமைக் காலத்திலே அவரிடத்தில் மண்டிக் கிடந்த ஞானியர் நாட்டத்தை ஒருவாறு உணர்த்துவனவாயிருந்தன.

1.6. கோயில் வழிபாடு

அன்னையின் கையைப்பிடித்துக் கொண்டு நல்லூருக்குச் சென்ற பிள்ளைப் பராயந் தொட்டு நல்லூரான் அவர் சிந்தையிற் குடி கொண்டிருந்தான். நல்லூர் வீதியை வலம் வருவதும், வீதியில் விழுந்து கும்பிடுவதும் அவருக்கு உருக்கமான அனுபவங்களாய் அமைந்தன. சண்பக மரத்தடியில் நிற்கும் சாதுக்கள் கூட்டத்தை அவதானித்து நிற்பதில் அவர் மகிழ்ச்சி கண்டார். வகைவகையான பச்சையரிசி, வாழைக்குலை, தேங்காய் முதலிய பூசனைப் பொருள்களை உவகையுடன் கொண்டு வந்து உதவும் அன்பர்களைக்கண்டு ஐம்புலன் அடங்கி நிற்கும் அனுபவங்கள் அவருக்கு ஏற்பட்டன. அவர் அந்தணர்கள் அஞ்சடுக்குத்தீபம்முதல் அடுக்கடுக்காய் தீபங்காட்டத் தரிசனந்தந்து நிற்கும் சோதிப்பிரகாச வேலனைத் தரிசித்துக் கண்கள் பனியரும்புதிர நின்றனர். ஆகையால் நல்லூர்த் திருவிழாக் காலத்தில் விடுமுறை எடுத்துக்கொண்டு வந்து எந்நாளும் நல்லூரை வலம்வந்து வணங்கினார். திருவிழாக்காலங்களில் அங்கப்பிரதட்டனம் செய்து நல்லூர் வீதியை வலம் வருவது அவரது நியமமாயிருந்தது. ஒரு முறை கொழும்புத்துறையிலிருந்து நல்லூருக்கு அங்கப்பிரதட்டனம் செய்தனரென முன்னர் குற்ப்பிட்ட வைத்திலிங்கம் என்பவர் கூறினார்.

1.7. ஞான நூற்பயிற்சி

வைத்திவிங்கம் என்பார் கூறிய இன்னொரு முக்கிய விடயம், சுவாமிகள் அந்நாட்களில் நீண்ட நேரத்தைச் சமயநூல்களை வாங்கிப் பாடமாக்குவதில் போக்கினார் என்பதாகும். ஆறுதலும், ஓய்வும் நிறைந்த அவர்பார்த்த உத்தியோகம் நூல்களைப்படிப்பதற்கு வாய்ப்பானதொன்றே. அவர் பெரும்பாலான சமயத் திருநூல்களைக் கற்றனர். தமிழிலும், வடமொழியிலும், ஆங்கிலத்திலும் உள்ள ஞானநூல்கள் பலவற்றையும் கற்றனர். அவையெல்லாம் சிரமப்பாடெதுவுமின்றி அவருக்கு மனனமாயின. அவருடைய உள்ளம் பளிங்குபோல் தூயதாயிருந்தமையால் இவ்வாறு இலகுவில் மனனமாவது இயல்பாயிற்று. சைவத்திருமுறையையும் தமிழ் மறையாம் திருக்குறளையும் ஆர்வத்தோடு படித்தார். இப்பொழுது சிவதொண்டன் நிலையத்தினர் தொகுத்து வெளியிட்டிருக்கும் சைவத்திருமுறைத் திரட்டு என்னும் நூலிலுள்ள பாடல்கள் யாவும் சுவாமிகள் அவ்வப்போது தம் நினைவிலிருந்து சொன்னபாடல்களே என்பது பலருக்கு வியப்பாக இருக்கும். பெரும்பாலான திருக்குறளும், ஔவை மொழியும் அவருக்கு மனனமாயிருந்தன. தாயுமானார் பாடல்களையும், பட்டினத்தடிகளின் திருநூல்களையும், சித்தர் பாடலையும் கற்றனர். அக்காலத்தில் திருவிழாக்காலங்களிலே ஏராளமான சிறுநூல்கள் விற்பனையாவது வழக்கமாயிருந்தது. அவற்றுள் சிறந்த ஞானநூல்களாய் உள்ளவற்றை ஆர்வத்தோடு வாங்கிப் படித்தனர். அவ்வாறான நூல்களுள் குருநமசிவாயர் என்பார் பாடிய நமசிவாய மாலையும் ஒன்று என்பதையும், அந்நூல் முழுவதும் சுவாமிகளுக்கு மனனமாயிருந்தது என்பதையும் நாம் அறிவோம். பின்னர் சுவாமிகளின் பணிப்பின்படி அந்நூலை தட்டச்சுச் செய்து பலரும் படித்துப் பயனடையுமாறு வெளியிட்டோம். சுவாமிகள் தாமும் குருநமசிவாயர் பாடியதைப்போன்று ஒரு நமசிவாயமாலை பாடினர். அந்நாட்களில் பிரபலமாயிருந்த ஒரு ஞானநூல் தத்துவராய சுவாமிகள் பாடிய ‘பாடுதுறை’ என்னும் நூலாகும். அந்நூல் குருநெறிச் சென்று பெற்ற அனுபூதி ஞானத்தைப் பயிலுந்தமிழிலும் எளிமையான மெட்டிலும் இனிமையாகக் கூறுவது. பரந்த தமிழ் நூற்பரப்பிலே சுவாமிகள் பாடியது போன்ற ஒரு ‘பல்லிப்பாட்டு’ ‘பாடுதுறையில்’ மட்டுமேயுள்ளது. சிறந்த தத்துவநூற்புலவரான தத்துவராயரது ‘பாடுதுறை’ யைச் சுவாமிகள் நன்றாக மனதிற்பதித்துக் கொண்டனர். பகவற்கீதை, முதன்மையான உபநிடதங்கள், சங்கராச்சாரியாரது பிரமசூத்திரபாஷ்யம் முதலிய வடமொழியிலுள்ள ஞானநூல்களையும் கற்றுத் தேர்ந்தனர். விவிலியவேதத்திலுள்ள திருவசனங்கள் பல அவருக்கு மனனமாயிருந்தன. பிற்காலத்தில் சுவாமிகளை அண்டிவாழ்ந்தவரான சந்தசுவாமி விவிலியவசனங்கள் பலவற்றின் உட்பொருளைச் சுவாமிகளின் வாய்மொழிகளிலிருந்தே தெளிவாக விளங்கிக் கொண்டதாகக் கூறினர். குணங்குடி மஸ்தான் சாகிபு பாடல்களும், இஸ்லாமியத் திருமறையான குர்ஆனின் வசனங்கள் பலவும் அவருக்கு மனனமாயின. பின்னாட்களில் தன்னையண்டி வந்த நூலறிவாளர் பலரையும் தன் காலடியில் மண்டியிட்டுக் கிடக்கச்செய்யும் கலை ஞானத்தை இந்நாட்களில் சுவாமிகள் ஈட்டிக் கொண்டனர்.

கிளிநொச்சியில் பணிபுரியும் காலத்திலே பிரமசரிய விரதம் பூண்டிருந்த சுவாமிகள் ஒழுக்கத்தால் வைரித்த வாழ்வு, வணக்கம் மணக்கும் வேலை, கடவுட்பக்தி, ஞானியர்நாட்டம், ஞானநூற்பயிற்சி என்னும் இயல்புகள் முதிர்ந்து “இறைகளோடிசைந்த இன்பம், இன்பத்தோடிசைந்த வாழ்வு” வாழ்வதற்குத் தகைமையான ஒருவராய் மலர்ச்சி பெற்றிருந்தார். இவற்றையெல்லாம் சுவாமிகளின் அலுவலகத் தலைவராகப் பதவிவகித்த பிறௌனி எனும் ஆங்கிலேயர் கூறிய வசனம் திரட்டித்தருகிறது. அவர் “நீர் ஒரு தெய்வீக மனிதர் (You are a God-fearing man)” எனத் தம்மை நோக்கிக் கூறியதாகக் கதையோடு கதையாகச் சுவாமிகள் எமக்குக் கூறினர்.