குருவும் சீடரும்

செல்லப்பரின் பூர்வாச்சிரமம்

“ரிஷிமூலம், நதிமூலம் பாராதே” என்பார்கள். யோக முனிவருடைய குருபரனின் பூர்வாச்சிரமத்தைப் பற்றியும் நாம் அதிகம் பொருட்படுத்தத் தேவையில்லை. அவர் நல்லூர்ப் பதியில் தோன்றினார். நாட்டிலே அவருக்கு வழங்கிய நாமம் செல்லப்பன் என்பது ஆகும். அவருடைய மூதாதையர் வட்டுக்கோட்டைப் பகுதியிலிருந்து விவசாயம் செய்தற்பொருட்டு நீர்வளம் நிலவளம் குறையாத நல்லூர்ப் பகுதியில் வந்து குடியேறினர். அவருடைய தந்தையார் பெயர் வல்லிபுரம். அவரை ஈன்று வளர்த்த பேற்றினாலே ‘தொல்லையின்பத்திறுதி’ கண்ட அன்னை, பொன்னம்மா எனும் அம்மையாராவார். செல்லப்பர் சிறிதுகாலம் யாழ்ப்பாணம் கச்சேரியில் ஆராச்சியாகப் பணிபுரிந்தனர் எனவும் கூறுவர். ஆனால் அவர் வெகுவிரைவிலே இந்த ஊர், பேர், தந்தை, தாய், உத்தியோகம் முதலிய உலகியலான அமிசங்களெல்லாவற்றையும் தாம் பூண்ட விசர்க்கோலத்தால் பொருளற்றதாக்கிவிட்டார். உலகோர் பார்வையில் அவரோர் உன்மத்தராகத் திரிந்தார்.

2.2. செல்லப்பதேசிகரின் குருபரம்பரை

செல்லப்பதேசிகரின் ஞானத்தந்தையாராகக் கடையிற் சுவாமியைக் கூறுவோரும் உளர். “கடையிற்சுவாமி ஒரு கடலைக்காரியிடமிருந்து ஒரு ரூபா பெற்று அதை ஒரு வெற்றிலையில் வைத்து மடித்துச் செல்லப்பாச்சாமியிடம் கொடுத்து அவரின் தலையிலே தம் குடையை வைத்து அசைத்துவிட்டு ஓடும்படி விரட்டினார். இதுவே செல்லப்பா சுவாமிகளுக்குத் தீக்கையாக அமைந்து ஞானோதயம் ஏற்படுவதற்குக்  காரணமாயிற்று” என அவர்கள் கூறுவர். கடையிற்சுவாமி பெரியமகான். சிவயோகசுவாமிகள் கடையிற்சுவாமிகளைப் பற்றிக் கூற வேண்டி ஏற்பட்ட சந்தர்ப்பங்களிலே “அவர் தெருவிலே செல்லும் பெண்ணைத் தாய்மையால் முலைசுரக்கச் செய்து குழந்தையாய்ப் பால் அருந்த வல்லவர்; இது புத்தர், இயேசு என்போருக்கும் கிடையாத பேறு” எனப்புகழ்வார். கடையிற்சுவாமிகள் ஒருமுறை நல்லூர் வீதியிற் சென்றபோது விசரரென விலங்கில் போடப்பட்டிருந்த செல்லப்பருக்குக் கிட்டச் சென்று உற்று நோக்கிப் பின் அங்கு நின்றவர்களைப் பார்த்து “முற்றிவிட்டது; அவிழ்த்து விடுங்கள்” எனக் கூறினார். செல்லப்பரிடம் முதிர்ந்திருந்த தெய்வீகப் பித்தைத் தெளிவாகக் கண்டபின்னரே அவர் அவ்வாறு கூறினார். செல்லப்பரும் கடையிற்சுவாமிகள் பெரிய மகான் என நினைந்து அவர் மீது மிகுந்த மரியாதையுடையவராய் இருந்தனர். ஒரு நாள் செல்லப்பர் தாந்திரிக ஒழுக்கத்தினரான கடையிற்சுவாமிகளைக் கண்ணியப்படுத்துவதற்காக ஒரு மதுபானப்போத்தல் வாங்கி மறைவிடத்தில் வைத்து அவர்வரும் தருணத்தை எதிர்பார்த்து நின்றனர். அவரைக் கண்டதும் மதுபானப்போத்தலை எடுக்க ஆர்வத்தோடு சென்றனர். அங்கே போத்தல் வெறுமையாயிருப்பதைக் கண்டு திகைத்து நிற்கும்போது “அதுஎப்போதோ முடிந்துவிட்டது” என ஒலித்த கடையிற் சுவாமிகளின் குரலைக்கேட்டுத் தெளிவடைந்தார். தமது காணிக்கையை அன்போடு ஏற்றுக்கொண்ட கடையிற் சுவாமிகளின் சித்தினை எண்ணி மகிழ்ந்தார். இவை தெய்வீகப் பித்துக்கொண்ட இளைஞனான செல்லப்பரிடம் கடையிற்சுவாமி அன்புடையராயிருந்தார் என்பதையும் செல்லப்பர் கடையிற்சுவாமிகளிடம் மிகுந்த மரியாதையுடையவராயிருந்தார் என்பதையும் விளக்குவதற்குப் போதியன. ஆனால் பெரியார் ஒருவரை மரியாதை செய்வது வேறு, குருவின் “செம்பொற்பாதம் சிரமிசைச் சுமந்து” திரிவது வேறு அதுபோலவே பெரியாரொருவர் ஞானநாட்டம் கொண்ட அன்பரொருவரிடத்து விருப்பமாயிருப்பது வேறு. குருமணியொருவர் தன் கண்மணியான சீடனைத் தானாகச் செய்யும் ஞானவித்தை புகட்டுதல் வேறு. செல்லப்பர் தனியானவர். கடையிற்சுவாமிகளில் நின்றும் வேறுபட்டு நிற்கும் சிறப்பியல்புகள் அவரிடம் விளங்கின. இதனை சிவயோகசுவாமிகள் ஒரு சமயம் தெளிவாகக் குறிப்பிட்டார். அது

“மற்றவர்களை வசியம் பண்ணுவதும் ஒரு மயக்கம்; கடையிற்

சுவாமியும் அகப்பட்டுக் கொண்டார். ஆனால் செல்லப்பர் பெரிய

மகான். இப்படி மயக்கவில்லை ‘ஆரறிவார்’, ‘எப்பவோ

முடிந்த காரியம்’ என்று சொல்லிக் கொண்டு திரிவார். யாராவது

அவரை விழுந்து கும்பிடுவதற்கு வந்தால் உடனே விரைந்து

சென்று சலங்கழிக்கும் இடங்களில் நிற்பார்” என்பதாகும்.

கடையிற் சுவாமிகளிடம் சித்து வல்லபம் இருந்தது. அவ்வல்வபத்தாலே இரும்பைத் தங்கமாக்குதல் போன்ற காரியங்களை அவர் செய்து வந்தார். இக்காரியங்களால் வசிகரிக்கப்பட்ட மக்கள் அவரைப் போற்றுதல் செய்தனர்.செல்லப்பதேசிகரோவெனின் “நாமறியோம்” எனும் நல்லறிவு வாய்த்த மெய்ஞ்ஞானமான மோனபண்பாயிருந்தார். அவர் காரியங்கள் எப்பவோ முடிந்துவிட்டன எனக் கூறியவராய் மாயவித்தை காட்டும் மயக்கத்தினின்றும் விடுபட்டிருந்தார்.வையகமும் வானகமும் வந்து பணிந்தாலும் ஆட்சிசெய்யக்கருதாது சாட்சி மாத்திரமாய் இருந்தார். இவ்வியல்புகள் செல்லப்பதேசிகரைக் கடையிற் சுவாமிகளிடமிருந்து வேறுபடுத்தும் இயல்புகளாயிருந்தன. இன்னும் கடையிற் சுவாமிகளிடத்துத் தாந்திரீக நெறியினருக்குரிய ஆசாரங்கள் தெளிவாய்த் தெரிந்தன. செல்லப்பதேசிகரோ எந்த நெறியிலும் அகப்படாதவர்; நெறியில்லாதவர்; எதிலும் தட்டாது முட்டாது நின்றவர். மேலும் கடையிற் சுவாமிகளின் திருக்கூட்டம் ஒன்று யாழ்ப்பாணத்தில் நின்று நிலவுகிறது. இத்திருக்கூட்டத்துடன் செல்லப்பதேசிகரோ அன்றி அவரது ஞானப் புதல்வாரன சிவயோக சுவாமிகளோ ஒட்டி உறவாடித் திரிந்ததாக நாம் அறியோம்.

கடையிற் சுவாமிகளின் சமாதிக் கோயில் நல்லூருக்கும், சிவதொண்டன் நிலையத்திற்கும் கிட்டிய தூரத்திலேயே உள்ளது.ஆயினும் மட்டுவில் பன்றித்தலைச்சியம்மன் கோவிலுக்குப் பொங்கலிடுவதற்காகச் சென்ற செல்லப்ப தேசிகரும்,யோகசுவாமிகளும் கடையிற் சுவாமிகளின் கோயிலுக்குப் பொங்கல், பூசையேதும் செய்யவில்லை.

செல்லப்பதேசிகர் சமாதிவைக்கும் முறையிலும் அகப்படாதவராயிருந்தார். அவர்தம் திருவுளம் அக்கினிப் பிரவேசமாயிருந்தது. கடையிற் சுவாமிகளும் அவர்தம் மரபினரும் சமாதி முறையைப் பேணுபவர் என்பது நம்மனோர் நன்கு அறிந்ததே.

யோகசுவாமிகள் கடையிற் சுவாமிகளின் திருக்கூட்டத்துடன் ஒருறவும் இல்லாதிருந்ததுடன் அக்கூட்டத்தினரிடமிருந்து விலகியிருப்பதையே நன்று எனக் கருதினார் என்பதற்கான ஒரு குறிப்புள்ளது. ஒருமுறை அந்நாட்களில் பிரபலமாயிருந்த தவமூதாட்டியான சுண்ணாகம் செல்லாச்சியம்மையாரைத் தம் கூட்டத்தில் சேர்த்துக் கொள்ளும் எண்ணத்துடன் கடையிற் சுவாமிகளின் கூட்டத்தினர் வந்தனர். அப்பொழுது யோகசுவாமிகள் செல்லாச்சியம்மையாரது தவச்சாலையில் இருந்தனர்.வாமாசாரத்தைப் பேணும் அக்கூட்டத்தாருடன் செல்லாச்சியம்மையார் சேருவதைச் சிவயோகசுவாமிகள் விரும்பவில்லை.ஆதலால் செல்லாச்சியம்மையாரைத் தியானத்தில் மூழ்கியிருக்குமாறு செய்தார். செல்லாச்சியம்மையார் தியானங் கலைந்து எழுவாரென்று வெகுநேரம்வரை காத்துக்கிடந்த கடையிற்சுவாமிகளின் கூட்டத்தினர் தமது எண்ணம் நிறைவேறாமலேயே திரும்பிச்செல்லவேண்டியதாயிற்று. இக்குறிப்பு செல்லப்பதேசிகரின் ஞானபரம்பரை கடையிற் சுவாமிகளின் மரபினின்றும் பிரிந்து நிற்குமொன்று என்பதற்கான ஒரு சிறுகுறிப்பாகும்.

மேலும் எமக்கு எல்லாம் சொன்ன எழில்சேர்குரு ‘செல்லப்பதேசிகரின் குரு கடையிற் சுவாமி’ என ஓரிடத்தும் கூறவில்லை.மாறாகச் ‘செல்லப்பர் எவரையும் கும்பிட்டு நில்லாதவர்’ எனக் கூறியிருக்கிறார்.

அவர்க்கோர் குருபரனைக் கூறுவதெனின் எல்லார்க்கும் குருவானவரெவரோ அச்சிவகுருவே அவருக்கும் குருவாயமைந்தரெனக் கூறுதலே அழகிது. இரமண பகவானுக்கு அண்ணாமலையண்ணல் குருவாயமைந்தனரல்லவா?அவ்வாறே செல்லப்ப மூர்த்திக்கு நல்லூராட்டக்காரன் குருவாயமைந்தனர் எனக் கூறி அமையலாம்.

2.3. செல்லப்பரின் விசர்க் கோலம்

செல்லப்ப மூர்த்தம் தினமும் நல்லூர்த் தேர்முட்டிப் படியிலே வீற்றிருந்தது. ஆயினும் வெறித்த பார்வையும், கறுத்த மேனியுமாயிருந்த செல்லப்ப மூர்த்தியிடத்தில் மூர்த்திகரம் எதுவும் தெரியவில்லை. அவரது முகத்தில் மூர்த்திகரத்திற்குப் பதிலாக முட்டாள்தனமே தெரிந்தது. அவர் மண்போட்டால் மண்விழாதபடி மனிதர்கள் கூடிநிற்கும் திருவிழாக் காலங்களிலும், பஞ்சாக்கரப்படியிலமர்ந்து தன்னிலே முகமலர்ந்து சிரித்தவராய் இருப்பார். சிலவேளைகளில் தேர்முட்டிப் படியிலே சிங்காரமாய்க் கிடப்பார். சிலவேளைகளில் வீதியிற் செல்லும் வீணர்களைச் சின்னத்தனமான வார்த்தைகளால் ஏசுவார். அவர்களும் இவரைப் பலவாறாக இகழ்ந்து விசரரென ஏசிச் செல்வர். இவரோ இவ்விகழுரைகளால் சிறிதும் சித்தம் கலங்காதவராய் அவர்கள் தம்முடன் மாறுபட்டு ஏசவேண்டும் என்பதற்காகத் தொடர்ந்தும் வேண்டுமென்றே ஏசிக்கொண்டிருப்பார். கந்தன் திருமுன்றிலினின்று வருவார் போவாரை வாயில் வந்தபடி ஏசுவார். சிலநாட்களில் கந்தைத் துணி அணிந்தவராய் திருநெல்வேலி, கொழும்புத்துறை என்று ஊர் ஊராய்த்திரிவார்.ஊர்தோறும் அலைந்துதிரியும் இவரைக் கண்டோர் உன்மத்தனென்று இகழ்வார். இல்லங்களுக்குச் சென்று பிச்சை கேட்டு நிற்பார்.கொடுத்ததை வாங்கி உண்பார். சில நாட்களில் ஒருசோறும் ஒருகறியும் ஆக்கி உண்பார். அவர் கண்துயில்வது குறைவு; பாதிச்சாமத்தின்பின் கையைத் தலையணையாக வைத்துத் தரைமீது கண்ணுறக்கம் கொள்வார்.

பாரறிந்த இந்தப் பைத்தியகாரரிடம் பனையோலை, தென்னையோலை என்பவற்றைக் கொண்டு நூதனமாகப் பொருட்களை இழைக்கும் கைவண்ணம் ஒன்றே அவர் விசரனல்லர் எனும் உண்மையை உணர்த்தும் அடையாளமாக இருந்தது.
ஆனால் பித்த உலகினர் உண்மையைப் புரிந்து கொள்வதற்கு இச்சிறு குறிப்பொன்று போதுமோ? இவ்விசரரிடம் பரமாசாரியரொருவருக்குரிய வேடமெதுவுமிருக்கவில்லை. அவர் காவிபுனையவில்லை; அக்குமணி அணியவில்லை;நீறணியவில்லை; நெற்றியில் பொட்டிடவில்லை; சாதியாசாரம், சமயாசாரம் எதனையும் அவர் பேணவில்லை. நாய்போல் திரிவார்; நரிபோலுழல்வார். எனவே ஆசாரசீலர்களான சைவர் பலர் அவரை ஏளனஞசெய்திருப்பர் என்பதில் ஐயமில்லை.அக்காலத்து மக்கள் பயபக்தியுடன் போற்றிவந்த தாந்திரீகக் கூட்டத்தினர்க்குரிய அடையாளங்களும் அவரிடம் தெரியவில்லை. அவர் வேதாந்த வாதம் புரியவுமில்லை, யோகத்தமரவுமில்லை. ஆதலால் மார்க்க நெறிச்செல்லும் எவரும் அவரை மதிக்கும் மதியற்றவராயினர். யாரேனும் ஒருவர் அறிவறியும் நாட்டங்கொண்டவராய் அவரையண்டி வந்தால் அவர் “நாமறியோம்” என்று நகை செய்வார். “ஆரறிவார்” என்று அதட்டுவார். இந்த நல்லறிவு வாசகங்களின் பொருளை யாரே அறியவல்லார்? இவையெல்லாம் செல்லப்பரின் பலருமறிந்த பைத்தியக் கோலங்கள். இக்கோலங்களாலே“இன்னான் இவன்” என ஒருவருமறியாதவண்ணம் தன்னை மறைத்துக் கொண்டு அவர் ஓடி உலாவித்திரிந்தார்.அக்காலத்திலிருந்த வேதாந்த சித்தாந்தம் கற்ற பண்டிதரும், பாவலரும், நாவலரும், செல்லப்பருடன் பல நாட்பழக்கம் பூண்டோரும் அவரின் அந்தரங்கத்தை அறியமுடியவில்லை. செல்லப்பர் தாம்பூண்ட விசர்க்கோலத்தைச் செம்மையாய் நடித்தனர். இதனைச் சுவாமிகள்

“நாற்பது வருடகாலமாகத் தாம் எடுத்த கோலத்தை எவரும்

சந்தேகப்படாமல் நடித்துக்காட்டி விட்டுப் போனார்”

எனக் கூறினார்.
2.4. செல்லப்ப தேசிகரிடம் அமைந்திருந்த சற்குரு இலக்கணம்

பாரோர் பைத்தியகாரனின் பண்புகள் எனக்கண்டவை, ஞான நிட்டையாளரின் பண்புகளுமேயாம். ஞானநிட்டையாளர் பாலர், உன்மத்தர், பசாசர் என்போரின் பண்புடையவராய்த் திரிவர் எனச் சமயசாத்திர நூல்கள் கூறுகின்றன.

“ஞாலமதில் ஞானநிட்டை யுடையோருக்கு

நன்மையொடு தீமையில்லை நாடுவதொன் றில்லைச்

சீலமிலைத் தவமில்லை விரதமொ டாச்சிரமச்

செயலில்லைத் தியானமில்லைச் சித்தமல மில்லைக்

கோலமிலைப் புலனில்லைக் கரண மில்லைக்

குணமில்லைக் குறியுமில்லைக் குலமுமில்லைப்

பாலருட னுன்மத்தர் பசாசர் குணமருவிப்

பாடலினோ டாடலிவை பயின்றிடினும் பயில்வர்”

-சிவஞானசித்தியார்-

பைத்தியகாரருக்கும், ஞானநிட்டையாளருக்கும் பொதுவான கோலத்திலே செல்லப்பதேசிகர் நடமாடினார்.உலகமாயையில் மயக்குண்ட மாறாட்டக்காரர்கள் அவரைப் பைத்தியகாரனெனக்கண்டனர். சத்தியத்தைக் காண்பதில் தாகங்கொண்டவர்கள் அவரைப் பேரறிவாளனாகக் கண்டனர். சிவயோகசுவாமிகள் தன்னைக் காத்தாட்கொள்ளும் தவராசக் குருவடிவமாகக் கண்டார்.

சித்தாந்த நூல்களிலே ஞானநிட்டையாளரியல்பு பற்றிக் கூறியுள்ளவை செல்லப்பதேசிகரிடம் பொருந்தியிருந்ததுபோவே ஆதிசங்கராச்சாரியார் அருளிய விவேகசூடாமணி என்னும் நூலிற் கூறிய குரு இலக்கணங்களும் அவரிடம் அமைந்திருந்தன.

 

“ஞானநூல்களைக் கற்றவனாய் பாவசிந்தனையில்லாதவனாய், ஆசையாகிய

சூறையாலலைக்கப்படாதவனாய், தன்னைப்பரம்பொருளிடத்தே

கையடையாகவீந்தவனாய், சாந்தனாய், நீறுபூத்த நெருப்புப்போல்

உலகப்பற்றறுத்தவனாய், எல்லை காணாக் கருணையங்கடலாய்,

மெய்யன்புடன் தன்னடிகளை வணங்குமடியார்க்குத் தண்ணளிகாட்டும்

தந்தையாய் உள்ள” (விவேக சூடாமணி சுலோகம் 33)

இச் சுலோகத்திலே குரு இலக்கணம் பற்றிக் கூறப்படும் வாசகங்களுக்கு இணையானவற்றைச் சிவயோகசுவாமிகள் அருளிய நற்சிந்தனைத் திருநூலிலே, செல்லப்ப தேசிகரை விசேடித்துக் கூறும் பகுதிகளிற் காணலாகும். அவை மேல்வருமாறு:

வேதம் உணர்ந்த குருநாதன்; நிருமலன், காமன்னுரோத மோகம்

கடந்தவன்; திருவடிமறவாச் சீருடையாளன்; மாறாத மௌனத்தியானப்

பிரவேசன்; விரும்பு வெறுப்பை வேரறப்பறித்தோன்; மாறாக்

கருணையன்; வந்த பேருக்கு வாழ்வையளிப்பவன்.

பலபடக் கூறுவானேன்? செல்லப்பதேசிகர் ‘ஈனப்பிறவி நீக்கும் எழிலை’ அறிந்தவர். ஒரு சற்குரவனிடம் அமைய வேண்டிய இதனினும் சிறந்த இயல்பு வேறுளதோ?

 

2.5. யோகமுனிவரின் சற்குருதரிசனம்

செல்லப்பருடன் பலநாட் பழக்கம் கொண்ட சிலர், அவர் ஒரு பெரிய மனிதர் என்பதை உணர்ந்து அவரைத் தரிசித்து வரும் நியமம் பூண்டிருந்தனர். அவர்கள் பெரும்பாலும் கொழும்புத்துறையைச் சேர்ந்தவர்களாக இருந்தனர். இதனால் செல்லப்பரைக் ‘கொழும்புத் துறையாரின் சுவாமி’ எனவும் சிலர் கூறினர். அவ்வாறான கொழும்புத்துறை வாசிகளுள்விதானையார் திருஞானசம்பந்தர், துரையப்பா என்போர் சிலர். ஒரு நாள் செல்லப்பரைத் தரிசிக்கச் சென்ற இப்பெரியவர்களுடன் இளைஞனான யோக முனியும் சென்றனர். செல்லப்பதேசிகர் தம்மைத் தரிசித்து நின்ற யோக முனியை நோக்கி இடி போன்ற குரலில் ‘யாரடா நீ’ என்று அதட்டினார். இக்கர்ச்சனையைக் கேட்டோர் இளைஞனான அந்தப் புதிய அடியவரைப் பார்த்துச் சிரித்திருத்தல் கூடும். கொழும்புத்துறைவிதானையார் முதலியோர் தாம் அழைத்து வந்த புதியவருக்காக இரங்கியிருப்பர். ஆனால் தேகமே மெய்யென்று பழகிப்போன ஒருவரின் தேகம் முதலிய திரைகளையெல்லாம் விலக்கி ‘ஆத்மாவேநாம்’ என்பதை உணர்த்தும் நாதஒலியே அந்த ஞான மொழியாகும். அன்பரின் ஆத்மாவை மறைத்து மூடிக் கிடக்கும் களிம்புகளையெல்லாம் ஒழிக்கும் இரத குளிகையே அந்த வாக்கு. அன்பனைக் கண்ட மகிழ்ச்சியிலும், அவசரத்திலும் அப்பொழுதே பொழிந்த மறக்கருணையமுதே அம்மந்திர மொழி. நாளாக நாளாக உணர்ந்த இவ்வுண்மையைப் பின்னர்

“யாரடாநீ யென்று அதட்டினான்

அன்றேயான் பெற்றேன் அருள்”

எனப்பாடிவைத்தனர். இந்த நன் மருந்து அன்பரின் நெஞ்சிலூறியதும், செல்லப்பதேசிகர் தமக்கியல்பான மாறாக்கருணை பூத்த திருமுகத்தால் நோக்கி “நல்லதப்பா வா, உன்னைப் போன்ற ஆளைத்தான் பார்த்துக் கொண்டிருக்கிறேன்” என வாக்கியப் பிரசாதம் ஈந்தார். செல்லப்ப மூர்த்தியின் இந்த மங்களகரமான வரவேற்பு, புத்தடியார் ஒருவருக்குக் கிடைக்கக்கூடிய பெரும்பேறேயாம். அந்த நல்வாக்கு அவ்வடியவர் அடையவிருக்கும் நற்கதிக்கு ஓர் அறிகுறியாகவும் அமைந்தது. இவ்வாறு சிவபுரத்திலே தான் ஊட்ட உண்டு களித்திருந்த பசு, ஏதோவொரு மருளினால் வெருண்டு,சிவபுரத்தை விட்டு நீங்கி உலகக்கானகத்தைச் சென்று உழன்று திரிந்தபொழுது, தன் கண்மணியான அப்பசுவைத் தேடிக் கொண்டுவந்து தேர்முட்டிப்படியிலே காத்திருந்த கருணைப்பித்தன் அதனைக் கண்டுகொண்டான். இனிச் சற்று பசுவின் போக்கில் செல்லவிட்டுப் பின் மருட்சி நீக்கித் தன்னுடன் அழைத்துக் கொண்டு சிவபுரம் சென்றுவிடுவான்.தேர்முட்டிப்படியிலே ‘தூண்டில்’ போட்டுக்கொண்டிருந்த தேசிகர் உறுமீனான சீடரைக் கண்டு விட்டார். இனி இரையைச் சிறிது கொத்தவிட்டு இழுத்தெடுத்து விடுவார். சற்குரவனின் அருட்கண்ணியிலே சீடர் அகப்பட்டுக் கொண்டார். இனி இவர் அதினின்றும் நழுவுதற்கில்லை.

 

2.7. தாகத்தையாக்கிவிட்டான் எங்கள் குருநாதன்

சற்குரு தரிசனத்தாற் பெற்ற சகல பாக்கிய சுகங்களுடனும் யோகமுனிவர் கிளிநொச்சியைச் சென்றடைந்தார்.அலுவலகத்தில் ஆறுதலாயிருக்கும் போதெல்லாம் தேரடியனுபவம் நினைவுவரலாயிற்று. அவ்வனுபவம் நினைக்க நினைக்க இன்பந்தேக்கும் சுகானுபவமாக இருந்த்து. தனக்கும் அத்தவராசசிங்கத்துக்கும் உள்ள உறவு ‘இன்று நேற்று வந்த உறவல்ல’ என்பதும், அது ‘அன்று’ தொட்டேயுள்ள உறவு என்பதும் நுணுக்கமாகப் புலப்படலாயிற்று. தாம் கற்றுவந்த ஞானநூல்களின் மறைபொருள்கள் மெல்ல மெல்ல வெளியாகத் தொடங்கின. அப்பேரறிவாளனை அண்டித் தானறிந்து கொள்வதற்கு இன்னும் எத்தனையோ விடயங்கள் உள்ளன என்பது தெளிவாகியது. ஆகையால் செல்லப்பதேசிகரை அடிக்கடி தரிசிக்கவேண்டுமென்ற தாகம் அன்பரிடம் பெருகலாயிற்று, வாய்ப்பு வரும்போதெல்லாம் கொழும்புத்துறை செல்வதும், அங்கிருந்து நீராடித் தோய்த்துலர்ந்த ஆடையணிந்து ஆசாரசீலராய்த் தேரடியிற் சென்று தேசிகனைத் தரிசிப்பதும் அவரது பழக்கமாயின.

 

2.8. செல்லப்பரின் சாலம்

ஆனால் செல்லப்பரோ மருமத்தில் மருமமாய் இருந்தார். அவர் கும்பிட்டு நிற்கும் அன்பரை ஏறெடுத்தும் பார்க்க மாட்டார்.சால அன்புடன் வழிபடச் செல்லும் யோகமுனியைக் காலனென்னக் கறுத்துச் சீறுவார். இவ்வாறான சீற்றத்துக்காளாகிச் சற்று விலகிச் சென்று யோசனையோடு நிற்கும் போது, வீதியிற் செல்லும் வீணர்களோடு சிரித்துப் பேசிமகிழ்வார். ‘வேடிக்கையாக ஏதோ பேசுகிறார்’ என்று எண்ணிய மாத்திரத்திலே அரியமந்திரவாசகங்கள் வெளிவரும். அண்மையிற் சென்றிடின் தாக்கறமில்லாது தாக்குவார்; அகன்று சென்றிடிலோ ஈர்த்தெடுத்து விடுவார். “அகாலாது அணுகாது தீக்காய்வார் போல” அவருடன் பழகவேண்டியதாயிற்று. பிற்காலத்தில் தன்னை அண்டி வாழ்ந்த அன்பர்களைப் பார்த்து:“நீங்களானால் செல்லப்பருடன் ஒரு நாளைக்கும் நின்று பிடிக்கமாட்டீர்கள்” என யோகசுவாமிகள் கூறினார். குருவின் பாதத்தை அண்டி நின்று அவரின் அருட்பணியாற்றுவது சீடனுக்கு ஆறுதலளிக்கும். ஆனால் செல்லப்பரோ சேவனையொன்று செய்யவும் விட்டிலர். சிறிது காலத்துக்குச் சீடரை அண்டியிருக்கவும் அனுமதிக்கவில்லை. கீதை நூல்களிலே, சீடன் குருவினை நெருங்கி நின்று தனக்கெழுந்த ஐயம் யாவையும் தொடர்பாய் வினவுவதும், குரு சீடனின் விவேகம் நிறைந்த வினாக்களை மெச்சிக்கொண்டே அறிவுரை வழங்குவதுமான ஒழுங்குமுறை பேணப்படும். இவ்வாறு செல்லப்பதேசிகரிடம் கேட்டறிந்து கொள்ள முடியவில்லை. அறியாமையுடைய சீடன் தான் வினவும் வினாக்களையும் அறியான். வீட்டின்பவேட்கையாலே அவன் வினவும் வினாக்கள் பருவச்சிறுபேதையின் துடுக்கு மிக்க வார்த்தைகளை ஒத்து நாணத்தக்கனவாயும் இருக்கும். தன்னையறிந்த தேசிகரே தன் சீடனையும் அறிவார். சீடன் அறிய வேண்டிய அறிவையும் அறியும் முறையையும் அவன் கொள்ளக்கூடிய அறிவின் அளவையும் அத்தேசிகரே அறிவார். ஆதலால் செல்லப்பர் சொல்லும் மணியனைய வாக்குகளை யோகமுனிவர் மிகவிழிப்புடன் இருந்து கேட்டறிந்து அவற்றைப் பக்குவமாகப் பேணிவந்தார். யோகமுனிவர் செல்லப்பரின் திருமுன்னிலையில் அமைதியாக அமர்ந்திருந்தல்லாமல் அவரின் பின்பக்கத்தில் நின்றே அரிய உபதேசங்கள் பலவற்றைப் பெற்றனர். இதனைப் பின்னொருபோது “செல்லப்பா சுவாமிகளிடத்திலே கேட்டறிந்தாரில்லை. நான் மௌனமாகப் பின்பக்கத்திலே நிற்பேன். பிதற்றல்களோடு இடையிடையே அரிய மந்திரங்கள் கலந்து வரும்” என சிவயோகசுவாமிகள் மொழிந்தனர். இம்மந்திர மொழிகளும் பெரும்பாலும் சங்கேத மொழிகளாகவே வரும். இப்பரிபாசைகளின் பொருளறியாது பாவலரும் நாவலரும் திகைத்துப்போவர். குருவின் குறிப்பறியும் உண்மையன்பனே அப்பரிபாசைகளின் நுண்பொருளறிவான். நுண்பொருளை உணர்ந்து மகிழும் யோகமுனிவருக்குச் செல்லப்ப தேசிகர் செந்தமிழ் நாவலரானார்.

 

2.9. செல்லப்பர் போதித்த முத்தி நெறிகள் 

செல்லப்பதேசிகர் எனும் நறுமலரை சுற்றிச் சுற்றி வந்து யோகமுனிவர் சேகரித்த ‘தேன்துளிகளைத்’ தொகுத்தும் வகுத்தும் மேல்வருமாறு கூறலாம். முதலில் செல்லப்பதேசிகர் ஞானநெறியைப் போதித்தனர். முதன்முதலில் “யாரடா நீ” எனும் அரியமந்திரத்தை மொழிந்ததை முன்னர் கூறினோம். பின்னர் அவ்வரியமந்திரப் பொருளின் விளக்கத்தை அகமுகமாகி உள்ளே உள்ளே சென்று அறியும் நெறியைத் “தேரடா உள்” என உபதேசித்து வழிகாட்டினார். உள்ளே செல்வதற்குத் தடையாக இருக்கும் உலகப்பற்றை ஒழித்தற்காகத் ‘தீரடா பற்று’ என மொழிந்தார்.

ஞானநெறியுடன் யோகநெறியையும் புகட்டினர். கல்லாமலே யாவுங் கற்ற செல்லப்பதேசிகர், ‘வாசியோகந்தேர்’‘இருவழியைஅடை’ ;கருவழியைக்கட’ ‘நாசிநுனிநோக்கு’ ‘காசிதேசம்போ’ ‘பச்சைப் புரவியிலே பாங்காக ஏறு’ ‘தச்சன்கட்டா வீட்டிலே தாவு பரிகட்டு’ எனப்பலவாறாக யோகமுறையின் நுட்பங்களை யோகநெறிக்குரிய பரிபாஷைகளிலே போதித்தனர். ஒருவர் யோக சாதனைபயின்று படிப்படியாக வளர்ந்து செல்லும்போது அவரிடத்துத்தோன்றும் அறிகுறிகளையும், மலர்ச்சியினையும் தெளிவுபடுத்தினார். கருவழியைக் கடந்தால் மனம்கட்டுப்படுமெனவும்,நாசிநுனிநோக்கு விழித்துக் கொண்டதும் நடனந்தெரியுமெனவும், மற்றொரு படியில் மாசிலோசை கேட்குமெனவும் தெளிவுபட விளக்கினர். யோகமுனிவர் முன்னரே பழகியிருந்த பத்திநெறியை விட்டிடாது கைக்கொண்டு வரும்படி“அக்குமணிஅணி” ‘அஞ்செழுத்தை ஓது’ “நெக்கு நெக்குருகு” என்றவாறு கூறி ஊக்கப்படுத்தி வந்தனர். பிற்காலத்தில் சிவதொண்டனாய் மலர்ந்து உலகோருக்கு உய்யும் நெறிகாட்டவிருக்கும் தமது ஞானப்புதல்வன், சாதனைமுறைகள் பலவற்றையும் நுட்பமாக அறிந்திருக்க வேண்டும் என்பதற்காக, வேண்டிய எல்லாவற்றையும் ஒன்றும் ஒழியாமல் புகட்டினார்.

 

2.10.நற்றவ யோகரின் சாதனை

செல்லப்பரிடம் கேட்டறிந்தவற்றை அமைதியாயிருந்து அசைபோடுவதற்கும், அவற்றைச் சாதனை செய்வதற்கும் ஏற்றதோர் ஆச்சிரமமாகக் கிளிநொச்சி ஆரணியம் அமைந்தது. நீளநினைந்தும், நிட்டைகூடியும், தியானத்திருந்தும், யோகத்தமர்ந்தும் குருமணியிடம் கேட்டவற்றைச் சாதனை பயின்றனர் நற்றவயோகர். இப்பொழுது தன்னையறிதலே அவரது முதன்மையான வேலையாக அமைந்தது. ‘தன்னுள்ளே விரிந்துகிடந்த புத்தகத்தையே விழிப்புடன் படித்து வந்தார்.தம்மிடமிருந்த சமயத்திருநூல்களை ஓரொருவேளை  மாத்திரம் பொழுதுபோக்காகவே பார்க்க முடிந்தது. சாதனை முதிரமுதிர யோகத்தமரும் இன்பமும், தியானசுகமும் அனுபவமாகத் தொடங்கின. வையமெல்லாம் துயிலில் மூழ்கி மோனத்திருக்கும் நள்ளிரவுப் போதிலே அவர் தியானத்தில் மூழ்கிப் போதைமிகுந்து ‘அம்மோ.அம்மா’ எனப் புலம்புவார்.அவ்வேளையில் அவருடன் துயிலும் சரசாலை வெற்றிவேல் விதானையார் திடுக்கிட்டெழுந்து விசாரிப்பார். அப்பொழுது“நான் என் அலுவலைப் பார்க்கிறேன், நீங்கள் அமைதியாக நித்திரை செய்யுங்கள்” எனக் கூறி மழுப்பி விடுவார்.இறைகளோடிசைந்த இன்பத்தை அனுபவிப்பதற்குரிய பயிற்சிக்கூடம் போன்றமைந்த காரணத்தால் கிளிநொச்சிப்பகுதியைச் சுவாமிகள் என்றும் நன்றியுடன் நினைவு கூர்ந்தார். பிற்காலத்தில் தமது அன்பர்களுடன் அப்பகுதிக்கூடாகப் பிரயாணம் செய்யும் வேளைகளில், தாம் தியானசாதனை செய்த இடத்தை(முறிகண்டி)ச் சுட்டிக்காட்டி ‘இந்த இடம் தியானம் செய்வதற்குச் சிறந்த இடம்’ எனக்கூறுவர். தியானஞ் செய்வதற்குக் காலம் இடம் போன்ற பொருத்தங்கள் எதுவும் வேண்டியதில்லை என்பதை உணர்ந்திருந்த பிற்காலத்திலே, சுவாமிகள் இப்படிக் கூறியதன் காரணம், முதலில் தாம் தியானசுகத்தில் திளைத்த இடம் அது என்பதனாலேயாகும்.

2.11.யோகமுனிவரின் துறவு

காணாத காட்சிகளையெல்லாம் தமக்குக் காட்டிவைக்கத் திருவுளம் பற்றிநிற்கும் கருணைவள்ளலான செல்லப்பதேசிகரிடத்து யோகமுனிக்குப் பேரன்பு பெருகுவதாயிற்று. தமக்கு ஞானநெறி முதலியவற்றை உபதேசித்த தமது குருமணி “ஓதாதே வேதம் உணர்ந்த பேரறிவாளன்” என்பதை எண்ணி வியக்கலானார். அவருடைய நாமம் சொல்லச்சொல்ல சுவைபயந்தது. செல்லப்ப மூர்த்தமே அவரது தியான மூலமாயிற்று; அவரது திருவடிகளே பூஜாமூலமாயின. அவரது அமுதமொழிகளே மந்திரமூலமுமாயின. வடதிசைகாட்டும் திசையறிகருவி போன்று எத்தொழிலைச் செய்தாலும், ஏதவத்தைப்பட்டாலும் தேர்முட்டிப் படிக்கே அவர்தம் சிந்தனை சென்றது. ஒளியையும் இருளையும் ஒரேநேரத்தில் நாடுவது பொருந்தாதென்பதைத் தெளிந்த யோகமுனிவர் உத்தியோகம் முதலிய உலக கருமங்களைத் துறக்கும் திடசித்த முடையவரானார். ‘உற்றார், பெற்றார், உடன்பிறந்தாரிலும் நற்றவத்தாரே நம் துணையாவார்’ எனும் உண்மையை உணர்ந்து சுற்றந்துறக்கவும் துணிந்தார். ஆகையால் உத்தியோகம், உற்றார் உறவினர் அனைத்தையுந் துறந்து செல்லப்பரின் சீரடியானாக நல்லூர்த் தேரடிக்குச் சென்று அவர்தம் திருவடியே சரணெனக் கிடந்தார்.

2.12.செல்லப்ப தேசிகரின் மறக்கருணையும்,யோகமுனிவர் பட்டபாடும்

தம்மைத் தஞ்சமென நாடிவந்த அடியவனைக் காத்தாட் கொள்ளத் தவஞானக் குருவடிவம் திருவுளம் பற்றியது. தேகமே மெய்யென வாழ்ந்து பழகிப் போன அடியவனை ஆத்மாவே நாமென அறிந்து வாழ்வதற்குப் பழக்குதல் வேண்டும்; (பழக்கம் தவிரப்பழகுதல்) ஐம்பொறிவழியே பொய்ந்நெறிச் சென்ற அன்பனை அருள்வழியே மெய்ந்நெறிச் செல்லப் பய்ற்றுதல் வேண்டும்; ‘பலபலவாக விரிந்து செல்லும் பாழ் மனத்தை’ மெல்ல மெல்லவாக அகமுகமாக்கி ஒருமுகமாகச் செல்லச் செய்தல் வேண்டும். இந்த ஞானவைத்தியத்தின் போக்கிலே எதிர்ப்பட்ட துன்பங்களையெல்லாம் அன்பர் பொறுத்துக்கொள்ள வேண்டியதாயிற்று; சோதனைகளையெல்லாம் வெற்றிகொள்ள வேண்டியதாயிற்று.

அன்பரை மேனிலைக்குக் கொண்டுவரச் சதுர்வித உபாயங்களையும் குருமணி கையாண்டனர். சீடர் தன்னைத் தன்னாலேயறிவதற்குப் பலபல சாலங்களைச் செய்தனர் ஞானதேசிகர். நன்கு ஊட்டி வளர்த்த உடலுறுதிபடைத்த அவ்விளந் துறவியைப் பசியால் வாட்டிவதக்கிவிட்டார் செல்லப்பர். அவர் “சரி வா ஐயனிடம் போய் சாதம் வாங்கி உண்போம்.” எனக்கூறித் தேர்முட்டிப்படியிலிருந்து நல்லூரான் வாசலுக்குச் சீடரையும் அழைத்துக் கொண்டு செல்வார்.தற்போது போல நேரந்தவறாது அக்காலத்தில் பூசை நடைபெறுவதில்லை. ஐயரின் நேரவசதிக்கேற்பவே பூசை நடைபெறும். பூசையாகாமையால் தேரடிக்குத் திரும்புவர். இவ்வாறாய்த் தேரடிக்கும், கோயில் வாசலுக்குமிடையே நடந்து நடந்து அலுத்துப் போய் பொறுக்கமுடியாத வயிற்று நெருப்பால் வருந்தும் சாய்பொழுதில் சீடரிடம் ஒரு சதத்தினைக் கொடுத்து “ஏதேனும் வாங்கி உண்” எனப் பணிப்பார் செல்லப்பர். ஒரு முறை சாவகச்சேரிச் சந்தையில் ஒரு கத்தரிக்காய் வாங்கி வந்து குருவும் சீடரும் ஒரு சோறும் ஒரு கறியும் சுவையாகச் சமைத்தனர். பசியாறுவதற்கு ஆயத்தமாகும் சீடர் பார்திருக்கும் பொழுதே செல்லப்பர் சாதமும் கறியமுதும் நிறைந்த பானைசட்டிகளை உடைத்துக் கொட்டிவிட்டு“இப்பொழுது இதற்குச் சாப்பாடு எதற்கு?” எனக் கூறிய வண்ணம் தேர்முட்டிப்படிக்குச் சென்று மாறாத மௌனத்தியானத்தில் ஆழ்ந்தனர். பசியாறுவதற்கு வேறுவழியின்றி வெம்பசியினாலே வாடிவதங்கிச் சோர்ந்து போய்க் கிடக்கும் நிலையிலே அந்தப்பலவீனத்தையே பலமாகக் கொண்டு யோகமுனி சிந்திப்பார்: “சாப்பாடு இந்தத் தேகத்திற்குத்தானே! நான் தேகமா? நான் தேகமன்று; நான் ஆத்மாவே; ஆத்மாவுக்கு உணவெதற்கு? ஆத்மாவின் உணவு மனப்பாக்கியம் என்னும் சமைக்காத சாதமே.” சீடர் இவ்வாறாய்ச் சிந்தித்துப் பசியினால் வாடும் தனது தேகத்தினின்றும் பிரிந்து தேவை எதுவுமற்ற ஆன்மசுகத்தில் பயிலமுடிந்தது. தேகத்தினின்றும் பிரிந்து துரியமுமிறந்த சுடராய் தேர்முட்டிப்படியில் வீற்றிருக்கும் செல்லப்பவேடம் இவ்வான்மசுகத்தின் கண்ணாற் காணும் சாட்சியாகக் காட்சி தந்தது.யோகமுனி அக்குருமூர்த்தத்தைத் தியான மூலமாகக் கொண்டு, ஆன்ம நிறைவில் ஆழ்ந்து, பொங்கிவரும் போனகத்தை உண்டு சுகித்தார். இவ்வாறாய்ப் பொறுமையுடன் பசித்திருந்து கற்பித்த ஆன்மபாடத்தினைப் புரிந்து கொண்ட யோகமுனிக்கு, அண்ண்ல் செல்லப்பரே உண்ண உண்ணத் தெவிட்டாத நல்லமுதாயினர்.

யோகமுனி சுடச்சுடநோற்றே சுடர்மிகுந்த அறிவுமணிகளைப் பெற்றனர். சிலவேளைகளில் ஒன்றுக்கொன்று மாறுபாடாயுள்ளது போலத்தோன்றும் அறிவுரைகளைச் செவியுறும் போது அன்பர் மிகவும் திணறிப்போவார். ஒருசமயம் செல்லப்பர் ‘காண்பதெல்லாம் வீண்பாவனை; அவற்றை விட்டொழி’ எனக் கூறுவார். இன்னொருசமயம் ‘பார்ப்பதெல்லாம் பரம்; ஆகையால் எங்கும் ஈசனைக்கண்டு இன்புறுக” எனப் புகட்டுவார். ஒருசமயம் ‘உலகமாயையினின்றும் பிரிந்து ஆறுதலாயிரு” என்பார். மற்றொரு சமயம் ‘உலகமாகிய கானகத்தில் சிங்கம் போன்று உலாவித்திரி” எனத் தூண்டுவார்.இவைபோன்று முன்னுக்குப் பின் முரண்படுவன போன்ற கூற்றுக்களின் உண்மையைப் புரியமுடியாது தடுமாறும் போது அவ்வாறு புரியவிடாமற் தடுக்கும் தடைகளை நீக்குவதற்காகச் சீடருக்கு ஏச்சு விழும். “சின்னத்தனமான வார்த்தைகளைச் செப்பி என் கன்மனசை முற்றும் கரைத்த குருநாதன்” முதலாயவரிகளை இவ்விதமான ஏச்சுவிழுந்த சந்தர்ப்பங்களை நினைந்தே சுவாமிகள் பாடினர். இவற்றைக் குறித்துக் ‘கூறியதைக் கூறான் மாறுபாடாய்ப் பேசிடுவான்’ என்றவாறு சுவாமிகள் பின்னர் பாடியது உபசாரமாகவேயாகும். அவற்றுள் ஒரு மாறுபாடுமில்லை. அந்தச்சோடி வாக்கியங்கள் ஒன்றையே கூறின. அப்பக்கம் இப்பக்கம் சரியாது வாள் முனையில் நடப்பது போல் ஒழுகுவதற்காக அவ்வாறு கூறப்பட்டன. ‘எங்கும் ஈசனைக் கண்டின்புறுவார்க்கே காண்பதெல்லாம் பொய்’ என்பதும் வெளிச்சமாகும். சும்மாவிருக்க வல்லார்க்கே உல்லாசமாகத்திரிதலும் கூடும். சில வேளைகளில் கீழ்நிலையினின்றும் மேனிலைக்கு வளர்த்தெடுப்பதற்காகச் செல்லப்பதேசிகர் முன்னர்க் கூறியதுடன் முரண்படும் உபதேசங்களைக் கூறுவார். ஒருசமயம்“காயமே கோயிலாகக் கண்டு பாவனை செய்” என நேயமுடன் கூறுவார். அப்பாவனையிற் பயின்று முதிர்ந்து வரும் தருணத்திலே “பாவனை யெல்லாம் மனதில் நிகழ்வனவே. சடமான மனத்தினால் எவ்வாறு இறைவனை உணரமுடியும்?மனமுமிறந்து நினைப்பற நிற்றல் வேண்டும்” எனக் கூறிப் பாவனையொன்று பண்ணவும்விடார். “ஒழுக்கம் ஒன்றே உயர்வைத் தரும்; பிற சாதனைகள் எதுவும் வேண்டியதில்லை” என ஒருமுறை கூறுவார். ஒழுக்கத்தில் உயர்ந்தோனாய் வளர்கையில் ஒழுக்கமும் மாயையே; ஒழுக்கமும் கட்டுப்படுத்தாத உயர்நிலையில் நிற்றல் வேண்டும்’ என்பார்.

ஒருவன் எத்தனை வித்தை கற்றபோதும் துயராக்கையின் திண்வலைக்குள் அகப்பட்டுக் கிடக்கும் வரை துயருறுதல் இயல்பே. யாக்கை என்பது யாது? மாயவிருள், பாசவினை, வஞ்சப்புலன், விலங்கும்மனம் முதலியவற்றால் யாக்கப்பட்டதே யாக்கை. யாக்கைவலையுளகப்பட்ட தவத்தினால் மேம்பட்டோரைக்கூட இந்திரியங்கள் வரம்பு கடந்து இழுத்துச் செல்வன.கலக்கமலமானது கடலலை போன்று ஒன்றன்பின் ஒன்றாய் ஓயாது வந்து மயக்கும். குரங்கு போல் கூத்தாடும் இயல்பினது மனம். தவஞானக் குருவடிவத்தை அண்டி மிகவும் விழிப்போடிருக்கும் யோகமுனி மனம் முதலியவற்றின் குறும்புகளால் சிறிது தளம்பிய வேளைகளிலும் சிறுதூசு கண்ணிற்பட்டாலும் பெரும் எரிவு ஏற்படுவதுபோலப் பெரிதும் வெதும்பினர்.ஆசாபிசாசை அகற்றமுடியவில்லையே எனவும், சித்தத்தை ‘நில்லடாநிலையில்’ என்று நிறுத்த முடியவில்லையே எனவும் மனம் நொந்தனர். வலியற்றுத் தளர்ந்து போனவராய்த் தனது தனித் துணையான குருநாதனை நினைந்து

“செல்வக் குருநாதா செல்வக் குருநாதா

சிந்தை தடுமாறுதடா திருவருளைத் தந்திடடா” என்றும்

“கூத்தாடுதே மனமென்ன கொடுமை

கும்பிட்டேன் குருநாதா நான் உன் அடிமை” என்றும்

“பாரையனே கடைக்கண்ணாற் பாரையனே” என்றும்

அழுது மன்றாடி வேண்டினர். ஆனால் தவராசக் குருவடிவமோ இவ்வாறான வேளைகளில் அன்பில்லார் போலப் பராமுகமாகவேயிருந்தது. “குப்பைகளெல்லாம் கொளுத்தி எரிக்கப்படவேண்டும், அதனால் ஆன்மாவுக்கு ஒன்றும் நேராது” என்பதைக் குருமணி அறிவார். அரிசி உலை நீருள் கொதிப்பதும், மூடிய பானைக்குள் புழுங்குவதும், பதமான சாதமாகச் சமைவதற்கேயாம்; காலில்தைத்தமுள்ளை எடுப்பதில் நோவுண்டாகும் என்பதற்காக முள்ளை எடுக்கும் முயற்சியை இடையில்விடும் மூடத்தனமான இரக்கம் உடையவரல்லர் செல்லப்பதேசிகர். ஆகையால் அவர் “வில்லங்கங்கள் வரட்டும்;வில்லங்கத்துள்ளே விளங்கும் நல்லருள்” எனக்கூறிக்கொண்டு வன்மம் சாதிக்கிறாரோ என்று எண்ணும் படியாகச் சும்மாயிருப்பார். அவரது கருணையானது கண்டிப்பான ஒழுங்கு எனுங்கோலத்திலேயே இவ்வாறான தருணங்களில் வெளிப்படலாயிற்று. இவ்வாறாய்த் தேகமாயையைவெல்லும் முயற்சியானது சோதனைகளும், வேதனைகளும் நிறைந்ததாய்- அக்கினிமண்டலத்தைத் தாண்டும் முயற்சியாய் அமைந்தது. சீடரும் நோவின்றிக் குழந்தை பெறவும்முடியாது;அப்படியாயிருக்கையில் “அவனியெல்லாம் ஆள – சகல சம்பத்தும்பெற – எவ்வளவு பாடுபடவேண்டும்!’ என்பதை உணர்ந்தவராய்த் துன்பங்களையெல்லாம் உறுதியுடன் ஏற்றார். தான்பட்ட பாடனைத்தையும் திரட்டிக்கூறும் சந்தர்ப்பமொன்று சீடருக்கு ஞானியான பின்னர் வாய்த்தது. கொழும்புத்துறை விதானையாரும், செல்லப்பரின் மற்றைய சீடர் சிலரும் யோகசுவாமிகளுடன் உரையாடியிருந்த வேளையில் விதானையார் யோகசுவாமிகளை நோக்கிச் “செல்லப்பர் எல்லாவற்றையும் உங்களிடத்திலேயே கொட்டிப்போட்டுப் போய் விட்டார்” எனக்கூறினார். அப்பொழுது சுவாமிகள் கூறியவாசகம் அவர் பட்ட பாடனைத்தையும் உணர்த்துவதாயிருந்தது. அவ்வாசகம் மேல்வருமாறு:- “சும்மாவா பெற்றேன்;மலையை வெட்டியல்லவா பெற்றேன்”
2.13. செந்தண்மை பூண்ட செல்வன்

மெய்ப்பொருளானது செல்லப்பர், மற்றும் சிவயோகர் எனும் இரு வேடங்களைத் தாங்கிக் குருவாகவும், சீடனாகவும் நல்லையில் அளித்த நாடகத்திலே, சீடனின் பாடுகளுடன் சற்குரவனின் கடலனைய கருணைப் பெருக்கும் கலந்து கிடக்கின்றன. மலையை வெட்டுவது போன்ற சீடனின் பாடுகள், சமையற் பணிக்குக் காய்பிஞ்சு வெட்டுவதையும், தேங்காய் துருவிக்கொடுப்பதையும் போன்றனவே. சுவைமிக்க அக்கறியமுதினைக் குருமணியே பாகஞ்செய்கிறார்.

“வன்மந்தானோ” எனச் சீடரெண்ணியதெல்லாம் பந்தமறுதருணம்’ பார்த்திருக்கும் குருபரனின் பொறுமையையேயாம். கருணை மேகனான குருபரன் தருணம் வாய்த்ததும், அக்கணத்திலேயே பெருகிய அன்புடன் பருவத்தில்மழை பெய்தாற்போலப் பந்தத்தை நீக்கியருளுவார். ‘பவப்பிணி’ யால் நொந்து நோக்கும் சீடரைப்பார்த்து ‘ஒழிகஉன்பவம்’ என ஆணையுரைப்பார்; மட்டுப்படா மயக்கமெல்லாம் போக்கியருளுவார். அஞ்சிமிக வழியறியாது அயர்ந்துமனந்துடித்து ஆறாக விழிபெருக அலமந்து வாடி தஞ்சமென வந்து அடியடைந்த ஏழையடியவரை “அஞ்சல் அஞ்சல்” என்று பலகாலும் அபயமளித்து இன்பவள நாட்டில் குடியிருத்துவார். நம்பிக்கைக் குறைவால் தடுமாறும் சீடரைத் தைரியத்துடன் நோக்கி “ஐயம் ஏன் காணும்” எனக்கூறி உறுதியளிப்பார். ‘ஏது நேருமோ’ எனப் பலவற்றையும் பலவாறாக எண்ணி அஞ்சி நிற்கும் அன்பனைப் பார்த்து “எல்லாம் எழுது சித்திரங்களே! சித்திரப்புலிக்காக அஞ்சுகின்றனையே? என்றவாறு கூறிச் சீடரை ஓவியம் போலவாக்கி வேகத்தைக் கெடுத்தாள்வார்.

சால அன்பொடு குருவின் பாதத்தைக் கும்பிட உந்தும் குருபக்தியை அன்பர் பெரிதாயெண்ணுவர். அவ்வன்பரது அன்பினும் கோடிமடங்கதிகமான அருள்மலையே குருபரன். செல்லப்பர் என்னுஞ் சீமான் தேர்முட்டிப் படியிலே, தமது கண்மணியான சீடனின் வரவு பார்த்திருக்கும் தம் ஆர்வத்தை உள்ளே வைத்து அடக்கமாக அமர்ந்திருப்பார். சிவயோகச் செல்வரும் அன்போடு சென்று கிடுகிடெனும் நடுக்கத்துடன் கிட்ட நெருங்கி வித்தகத்திருவடிகளை வீழ்ந்து கும்பிட்டு நிற்பார். அப்பொழுது கண்ணப்ப நாயனாரின் அன்புக்குருகிய காளத்தி அப்பரின் பேரருளைச் சிறிதேகாட்டும், செல்லப்பதேசிகரின் கருணை பொங்கும் பொன்வண்ணச் சுந்தரவதனத்தைக் கண்ணுற்றுக் கண்ணீர் துளிர்ப்பார். அன்னையிலும்சால அன்புடையவரே செல்லப்பர்.

செல்லப்பர் பங்குனி மாதத்து தலைத்திங்கள் தோறும் மட்டுவில் பன்றித்தலைச்சியம்மன் கோவிலுக்குப், பரிவோடு சீடரையும் அழைத்துக் கொண்டு செல்வார். சீடரும் திருவடியினைப் பின்தொடர்ந்து பாதயாத்திரை செய்பவராய் உருகும் உள்ளத்தோடு செல்வார். இருவரும் அம்மன் கோயிலிலுள்ள புனித தீர்த்தத்தில் நீராடி ஆர்வத்தோடு பொங்கலிடுவர். சும்மாவிருக்கும் செல்லப்பதேசிகர் சுறுசுறுப்பாய்ப் பொங்கலிடுவதை நோக்கிச் சீடர், ஆன்மிகப் பாடமொன்றைக் கற்பார். அம்மனைத் தரிசித்து வழிபட்டு நிற்கும்போது பால்நினைந்து அழுத பன்றிக் குட்டிகளுக்காகத் தாய்ப்பன்றியாகக் கிடந்து பால்சொரிந்த கருணையை நினைந்து மனம் நெகிழ்வார். அன்று காட்டிலே பன்றியாய்க் கிடந்து பாலூட்டிய அப் பரம்பொருளே இன்று நாய்போல் திரிந்தும் நரிபோலுழன்றும் தமக்கு ஞானபோனகம் சொரிகிறதெனும் குறிப்புத் தோன்ற நீராயுருகுவார். சீடன்பொருட்டாக இல்லையெனின் மந்திரமுந் தந்திரமும் வேண்டாத அந்த மகானுக்குப் பொங்கல் பூசையெல்லாம் எதற்கு?

ஒரு சித்திரை வருடப்பிறப்பன்று ‘இன்று கீரிமலைக்குச் சென்று நீராடினால் நன்றாயிருக்கும்’ எனும் எண்ணம் யோகமுனியின் உள்ளத்தில் உதித்தது. அவர் இவ்வெண்ணத்தைத் தனது அகத்துள்ளே வைத்துக்கொண்டு குருபரனைக் கும்பிட்டு நின்றார். அப்பொழுது செல்லப்பர் “சரி இன்று கீரிமலைக்குச் சென்று தீர்த்தமாடி வருவோம்” என்று மொழிந்தார். தனது சித்தத்தைப் பிரதிபலிக்கும் அச்சொற்களைக் கேட்ட யோகமுனி “நினைப்பவர் மனத்துக்கோர் வித்துமாயிருக்கும் நுணுக்கரிய நுண்ணுணர்வே செல்லப்பர்” என வியந்தார். கீரிமலைக்குச் சென்று கேணியை நெருங்கி அரசடிச் சந்தியில்நின்று தீர்த்தநீரிலே நீந்திக்குளிக்கும் ஆர்வங்கொண்ட யோகமுனிவரைப் பார்த்து ‘சரி; தீர்த்தமாடியாயிற்றுத் திரும்புவோம்’ எனத் தீர்க்கமான குரலிலே கூறினார் செல்லப்பதேசிகர். அவரால் தீர்த்தநீருள் இறங்காமலேயே தீர்த்தமாடமுடியும். செல்லப்பதேசிகர் எனும் பேரின்ப வெள்ளத்துள் மூழ்கித் திளைத்துக் குளிர்ந்த உள்ளத்தினராய்த் திரும்பிய யோகமுனிவர் தன்னையாண்ட தன்சொந்தக் குருமணி இந்தத் தேகத்தளவினரல்லர் என எண்ணலானார். நல்லூருக்கு வரும்வழியிலே மருதடி விநாயகர் தேர்த்திருவிழாவையும் பார்த்தனர். விரைந்த நடையினாலும் மிகுந்த பசியினாலும் வாடிப்போயிருந்த சீடரிடம் இருசதக்காசுகளைக் கொடுத்துப் பிட்டு வாங்கியுண்ணுமாறு செல்லப்பதேசிகர் கூறினர். சீடர் இனியபிட்டினை உண்டு தண்ணீர்ப் பந்தரில் சருக்கரை நீரும் வாங்கிக்குடித்துப் பசியாறியபின் குருநாதரையடைந்தார். மீண்டும் விரைந்தநடை தொடங்கியது. பிட்டும், நீரும் வயிற்றுள் குலங்கத் தொடங்கின. ‘இனி நடக்கமுடியாது’ என எண்ணியவராய்ச் சீடர் வீதியின் ஒரு கரையில் ஒதுங்கியிருக்க முனைந்தபோது பின்னால் திரும்பிப் பாராமலேயே செல்லப்பர் ‘சரி வா வா’ எனச்சத்தமிட்டார். நெற்றியிற் கல்வைத்தவர் போன்று விண்ணை நோக்கியவண்ணம் விரைந்து நடக்கும் செல்லப்பர் நிலத்தைப் பாராமலேயே எச்சிலிலும் எறும்பு நிரையிலும் கால்வையாமல் எட்டிக் கடந்து செல்லும் இயல்பினர். அவரால் மேலும் கீழும் முன்னும் பின்னும் பார்த்தல் இயலும், கண்ணுக்குக் கண்ணால் பார்ப்பவராதலால் அவரால் இவ்வாறு செய்தல் இயல்பாகிறது என எண்ணமிட்டவராய்ச் சீடர் குருபரனைப் பின் தொடர்ந்து சென்றார்.

2.14. இறைவனும் குருவும் ஒருவரே

செல்லப்பர் தம்மை “இன்னான் இவன்” என உளவறிந்து கொள்ள வல்லவனாய் வளர்ந்துள்ள யோகமுனிக்குத் தமது உண்மையை  மறைக்காமல் உணர்த்தத் திருவுளம் பற்றினார். அப்போதைக்கப்போது தமது அருள் வேடங்காட்டலானார். செல்லப்ப மூர்த்தம் தேர்முட்டிப்படியில் மாறாத மௌனத் தியானத்திலிருந்த வேளைகளில் அம் மூர்த்தத்தை கண்குளிரக்கண்டு உளம் உருகிநின்ற யோகமுனிவர் அக்குருமூர்த்தத்தை மௌன மொழியாலே அறம் உரைக்கும் தட்சணாமூர்த்தமாகவே உணர்ந்தார். தன்னோடு மாறுபட்டோரை உதைப்பதற்காகக் காலைத்தூக்கி ஓடும் செல்லப்பரின் சாலத்தில் நடராச வள்ளலின் நளின பொற்பாதம் தெரிந்தது. நல்லூர்க்கருவறையிலும், தேரடியிலும் எழுந்தருளியிருப்பவர் ஒருவரே எனுந் தெளிவு சீடரிடம் நிலைத்தது. “இறைவனே குருவாக வந்துள்ளார்.” எனும் உண்மையை உணர்ந்து கொண்ட யோகமுனியின் சித்தத்தைக் காட்ட யோகமுனிவரின் மணிவாசகங்களிலும் சிறந்த சொற்கள் வேறில்லை.

“தேகமே மெய்யென்று சிதடனாய்த் திரிவேனை

மோக மறுத்தாண்ட முழுமுதலை மொய்குழலாள்

பாகம் மறைத்துப் பரிந்துவந்த பாக்கியத்தை

நாகமலர் சொரியும் நல்லைநகர் கண்டேனே”

 

“இருவினையால் மதிமயங்கி இடர்பட்டுக் கிடப்பேனைக்

கருனையினால் ஆண்டு கொள்ளக் கடவுள் திருவுளங் கொண்டு

அருள்மேனி தாங்கி அவனியிலே வந்தானைத்

திருவாரும் நல்லைநகர்த் தேரடியிற் கண்டேனே”

அருந்தவ யோகர் தெய்வம் வேறேயுண்டு எனும் சிந்தையிறந்தவரானார். அவருக்குச் செல்லப்பதேசிகரே கடவுளாவார். செல்லப்பன் என்னும் சீமான் வீற்றிருத்தற்கேற்ற சீரிய சிம்மாசனமாகச் சிவயோகச் செல்வர்தம் இதயமாமலரை மலரச் செய்தார். தமது நெஞ்சகமலரில் செல்லப்பதேசிகரை வீற்றிருக்கச்செய்து “கண்ணே உறங்குறங்கு கார்வண்ணா நீயுறங்கு, எண்ணேன் பிறதெய்வம் என்னிதயத்தே உறங்கு” என்றவாறு சீராட்டித் தாலாட்டிப் போற்றுதல் செய்தார். செல்லப்பதேசிகரும் தேர்முட்டிப்படியிற் சிங்காரமாய்க் கிடந்தது போல அன்பரின் சித்தத்திலும் சிங்காரமாய்க் கிடந்து பஞ்சாமிர்தம் போலத் தித்தித்திருந்தார். அன்பர், தன்னை உருத்தெரியாக் காலத்திலிருந்து அன்னையாய், தந்தையாய், ஆசிரியனாய், ஊனாய், உயிராய், உள்ளும்புறம்புமாய், அனைத்துமாய்க் கலந்து நின்று பேதித்து வளர்த்தெடுத்தஅப்பொருளே இப்பொழுது கண்களாற் காணுமாறு மண்மேல் மனிதனாக நடமாடுகிறது என்பதை அணுவும் ஐயத்துக்கிடமின்றித் தெளிந்து கொண்டார். இவ்வாறாய் மருளகன்று தெளிவுபெற்ற ‘சிவயோகப்பசு’ தேர்முட்டிப்படியில் வீற்றிருந்த செல்லப்பதேசிகனான தனது மேய்ப்போனின் தீங்குரலிசையைப் புரிந்து கொண்டது. அவ்விசை முன்னர் சிவபுரத்தில் கேட்டுச் சுகித்த அமுத கீதமேயாகும். ஆதலால் “சிவயோகப்பசு” தேசிகனின் திருவடிக்கீழ்க் கிடந்து செவியாட்டாது, வாயசைக்காது அவ்வினிய இசைக்குக் காதுகொடுத்துக் கிடந்தது. எட்டும் இரண்டும் அறியாத ஏழையடியவனுக்குப் பட்டமளிப்பதற்காக, ஏகமாகிய அப்பரம் பொருள் தியாகமாகி, இப்படியோர் கந்தைத்துணியணிந்த பித்தனாய்த் தேர்முட்டிப் படியிலிருக்கும் கருணைக்குச் செய்யும் கைமாறுயாதோ? யோகமுனிவர் உடல் பொருளாவியெல்லாம் உன்னதே எனத் தேசிகமூர்த்தியிடம் தன்னை முற்றாக ஒப்புக் கொடுத்து “ஐயனே நான் உன் அடிமை உடைமை” எனக் கூறியவராய்த் திருவடிக்கீழ்க் கிடந்தார்.

2.15. விண்போல் வியாபகம்

செல்லப்பதேசிகர் தமது கண்மணியான ஞானப்புதல்வனுக்கு “அது நீ ஆவாய்” (தத்துவமஸி) எனும் பட்டத்தைச் சூட்டுவதற்காகவே தேரடி நாடகம் ஆடுகின்றார். அவ்வாடலின் ஓரங்கமாக (“நாமதுவெடி நாமதுவெடி” எனும் மோனசுகத்திலே பொருந்துவதற்கு முன்னால்) “எல்லாம் நாமடி எங்கும் நாமடி” எனும் விண் போன்ற வியாபகத்தை அறிந்து சீடர் ஆனந்தக்களிப்பில் செம்மாந்து திரியவேண்டும் எனச் செல்லப்பர் திருவுளம் பற்றினார். அவர் சீடரிடம் “அயலுனக்கில்லை அனைத்தும் உனக்கு உறவே” எனவும் “முன்னிலையில்லை முழுவதும் உன்னுள்ளே உள்ளன.” எனவும் உபதேசித்தனர். சீடரும் எல்லாரிடத்தும், மரம், செடி, கொடி முதலிய எல்லாவற்றிலும் தம்மை வளர்க்கும் பயிற்சியிலீடுபட்டார். இவ்வாறு அன்னியமில்லாமல் பார்க்கும் ஆன்மசாதனை காட்டை வெட்டியழிக்கும் ஆரம்பகால சாதனைகள் போன்று தகிக்கும் அனுபவங்களாக இல்லாமல் வழிநெடுக நந்தவனத்துக்கூடாகச் செல்வது போன்ற மகிழ்ச்சி நிரம்பிய சாதனையாக இருந்தது. எல்லாரது பலத்தையும், எல்லாரது நலத்தையும் தன்பலமாகவும், தன்நலமாகவும் காண்பது எத்துணைச் சிறப்பானது! ‘அவன், அவள், அது எனும் அவையொரு மூன்றும்’ சிவனார் விளையாட்டெனத்தேறி அவற்றோடு தன்னை ஐக்கியப்படுத்திக் கொள்வது எத்துணை ஆனந்தமானது! இயற்கையை இறைவனின் சிறப்பியல்பாகக் கண்டு அதனுடன் அளவளாவி வாழ்வது எத்தனை இன்பமானது! ஆதலால் சீடர் அங்கும், இங்கும், எங்கும் நான், அதை அறியும் விசரன் நான், என ஆனந்தக் களிப்பினால் ஆடிப்பாடிக் கொண்டு உலகில் ஆன்மசாதனை பயின்றார். இந்தப் பயிற்சியாம் ஆன்ம சாதனை திக்குத்தெரியாத காட்டிலே, மருண்டுபோய் பொய்ந் நெறிகளிற் சென்ற பசுவை மடக்கி வழிக்குக் கொண்டு வருவது போன்றதாக அல்லாமல், தனது சொந்த இடத்தை மோப்பம் பிடித்துக் கொண்டு நேர்வழியே விரைந்து செல்லும் பசுவின் பின்னே ஆனந்தமாய் வருவதை ஒத்திருந்தது. ஆன்மீகப் பயணத்தின் ஆரம்ப வழியே சிரமம் மிக்கது போலும்; குறிப்பிட்ட தூரத்துக்கப்பால் ‘அது இழுத்து எடுத்துவிடும் போலும்’. சிவயோகச்செல்வர்

“எல்லார் உருவமும் என்னுரு வாகும்

எல்லார் நலன்களும் என்நல னாகும்

எல்லார் பலன்களும் என்பல மாகும்

நல்லோர் என்னுரை நயந்துகொள் வாரே”

என்றவாறு தன்னில் எல்லாவற்றையும், எல்லாரிலும் தன்னையும், காணும் சாதனையிலே உயர்ந்து சென்றார்.

2.16. சித்து மயக்கம் நீங்கல்

உலகெல்லாம் தனக்கு உறவாகியிருப்பதை உணர்ந்து கொண்ட சிவயோகச் செல்வருக்கு மூவர்களும் (பிரமா, விட்டுணு, உருத்திரன்) ஏவல்செய்யக் காத்திருக்கும் நிலை வாய்த்தது. எசமான் வீட்டுச் சின்னத்துரைக்குப் பணிந்து ஏவலாளர் நடப்பது போலச் செல்லப்பரின் ஞானப்புதல்வனுக்கும் மண்ணும் விண்ணும் ஏவல்செய்யத் தொடங்கின. ஒருநாள் இரவு, எல்லாம் தன்வசமாச்சே என்னும் ஆநந்தக்களிப்புடன் சிவயோகர் நல்லூர் வீதியில் நின்றுகொண்டிருந்தார். அன்று ஒரு திருவிழா நாளாகும். சுவாமி வீதிவலம் வந்துகொண்டிருந்தது. சனக்கூட்டத்துள் நின்ற சிவயோகச் செல்வர் “இன்று சுவாமி நன்றாக நனையப் போகின்றார்” எனக்கூறினார். சிவயோகர் இதனைச் சொல்லி முடிப்பதற்குள், இன்னும் தன்னால் முற்றும் உணரமுடியாதவாறு  மருமத்தில் மருமமாயிருக்கும் மகத்துக்களாலும் அறியவொண்ணாத மாதவரான செல்லப்பர் தன்பின்னால் நின்று “இந்த நல்லூர்வீதியில் இப்படிச்சொன்னவர் கனபேர்” என்று உறுமுவதைக் கேட்டார். அவ்வுறுமலைக்கேட்ட சிவயோகர் வெட்கித்துப்போனார். அன்று நிருமலமாயிருந்த வானம் சற்றுநேரத்தில் கறுத்திருண்டு பெருமழை பெய்து வீதிவலம் வந்த சுவாமியை நனைத்தது. ஆனால் செல்லப்பர் சிவயோகரிடம் தளிர்விட்ட சித்துக் காட்டும் மயக்கத்தை அப்பொழுதே அகற்றிவிட்டார். சித்துக்களில் மயக்குவதற்கு அவற்றில் என்ன விசேடம் உள்ளது? உலகமே செப்படி வித்தை; அந்தச் செப்படி வித்தைக்குள் செய்யும் மற்றொரு செப்படி வித்தையே சித்து. அறிவாளிகள் அரிதிற் பெற்ற ஞானப்பொக்கிஷத்தை இப்படியும் வீணாகச் செலவு செய்வரோ? இவற்றினின்று விடுபட்டு நிற்பதே ஞானியரியல்பாகும். ஞானதேசிகர் உலகமாயையினின்று முற்றாய்விடுபட்டுத் ‘தானேதானாய்’ நிற்குமாறு சீடருக்கு உணர்த்தினர்.

2.17. தவம்

செல்லப்பர் சித்துமயக்கத்தின் நீங்கிய சீடரை, முத்திப்பதத்தில் இருத்துதற்கு முன், நல்லூர் தேர்முட்டித் தூணடியிலிருந்து தவமியற்றுமாறு பணித்தார். தமது இன்னொரு சீடரான கதிரவேலு எனும் அடியாரையும் மற்றொரு தூணடியிலிருந்து தவமியற்றுமாறு பணித்தார். இரு தவசியரும் அவசிய கருமங்களுக்கு எழுந்து செல்லும் நேரம் தவிர மற்றைய நேரமெல்லாம் தூணடியிலே இருந்தபடியே இருந்தனர். செல்லப்பரின் பழைய அடியவரான கொழும்புத்துறை விதானையார் தவசியருக்கு வேண்டிய சேவைகளைச் செய்து வந்தார். நற்றவ யோகப் பசுவை நல்லூர் மேய்ப்பன் நல்லதோர் ஞானப் பசும்புற்றரையில் நன்றாக மேயச் செய்தனன். இப்பொழுது அப்பசு மேய்ப்பன் முன்னிலையில் அமைதியாகப் படுத்து அசைபோடத் தொடங்கியது. தேசிகர் அருளிய மகா வாக்கியங்கள், அவற்றின் சார்பு வாக்கியங்கள் இன்னும் எத்தனையோ சின்மொழிகள் என்றிவையெல்லாம் அவரின் சித்தத்துள் நன்கு பதிந்திருந்தன. இவற்றையெல்லாம் செல்லப்பர் உரைத்த அருள் வண்ணம் அவர் சிந்தனையை வந்துருக்கின. அப்படியே உள்ளதென அந்தரங்கமாகச் செப்பிக் கொண்டிருக்கும் திறம், முடிந்த முடிபுஎன்று இடிபோல் உரைத்ததிறம், நாமறியோம் என நகைத்து நோக்கிய திறம், ஒரு பொல்லாப்புமில்லை என உளங்குளிரச் சொன்ன இரக்கம், நீயென நானென வேறில்லை என நேர்நேராகச் சொன்ன வண்ணம் என்றிவையெல்லாம் அவர் சிந்தனையைத் தெளிவித்தன. இன்னும் பாடாமற் பாடு, தேடாமல் தேடு, நாடாமல் நாடு, சுட்டிறந்து நில், பார்ப்பதெல்லாம் நீ, அயலுனக்கில்லை, ஏதுமொன்றறநில், இருந்துபார், சங்கற்பமில்லை என்ற மொழிகளெல்லாம் அவரை அகமுகமாக்கி நிருமலமாயிருக்கச் செய்யும் அருளைப் பொழிந்து கொண்டிருந்தன. தேசிகரின் நாமம், அவர்தம் நாவில் பதிந்திருந்தது. தேசிகரின் அருள்மேனி அவர்தம் மனதில் உறைந்தது. இவையெல்லாம் மௌன நிலையில் பயிற்றுவனவே. மௌனநிலையில் மனத்தை நிறுத்தும் தவத்தைச் சீடர் புரிந்தனர். இவ்வாறு இருவரும் நாற்பது நாட்கள் தவமிருந்தனரென்பர். சிலர் அதிலும் குறைந்த நாட்கள் என்பர். மேய்ந்தவற்றையெல்லாம் மீட்குமளவும் இம்மோனதவம் நிகழ்ந்ததென்பதே முறை.
2.18. கதிர்காம யாத்திரை

தவம் நிறைவுற்றதும் செல்லப்பர் “இருயானைகளை ஒரு தறியிற் கட்டமுடியாது” என்று கூறி அவர்களைக் கலைத்து விட்டனர்.கலைந்து சென்ற கதிரவேலுச் சுவாமியைப் பற்றி ஒருவரும் ஒன்றும் அறிந்திலர். சிவயோகர் அப்போது பல் துலக்கும் குச்சியுடன் நின்றிருந்தார். அவர் தமது சொந்தக் குருமணியைப் பஞ்சபூதத்தாலாய தேக அளவினராகக் கொள்ளமாட்டார். அங்கும், இங்கும் எங்கும் உள்ளவரே தமது குருபரன் என்பதை அவர் நன்கு அறிவார். தான் எங்கிருப்பாரோ அங்கு குருபரனும் கூடவேயிருப்பார் என்பதில் அவருக்கு ஐயமில்லை. தமது உள்ளும், புறமும் இருந்து தம்மை ஆள்பவர் அவர். ஆனால் புல்லனாயிருந்த தனது புன்மை தவிர்த்து, சகல சம்பத்தும் தந்தது செல்லப்பர் எனும் அருட்கோலமே என்பதை அவர் முழுமனதோடு நம்பினார். மூலையிலிருந்த தன்னை முற்றத்தில் விட்ட அந்த மாறாக் கருணையரைப் பிரியலாகுமோ? உன்னைப் பிரிவேனோ உயிர் நான் தரிப்பேனோ என்றவாறு உருகிய உள்ளத்தினராய்க் கால்போன போக்கில் போயினர். அவர் செல்லப்பதேசிகரின் நினைவேயல்லாது வேறோரு நினைவுமில்லாதவராய்ச் சென்றனர் என்பதற்குச் சான்றாயமைந்தது, ஆனையிறவுவரை அவர் பல்லிடை இருந்த பல்துலக்கும் குச்சியாகும். அவர்ஆனையிறவிலே உலகியல் உணர்வு தோன்றத் தம்முடைய இந்தப் போக்கின் பொருளை நினைத்துப் பார்த்தார். அப்பொழுது தமது கால்கள் கதிர்காம யாத்திரையை மேற்கொண்டுள்ளன என்பது புரியலாயிற்று. இவ்வாறுதான் நாளைக்கென்ற எவ்வித சிந்தனையுமில்லாத பூரணதுறவொழுக்கத்தையுடைய அவரது கதிர்காம யாத்திரையமைந்தது. உலககானகத்தில் உலவுமிடத்தும் சும்மா இருக்கும் நிலையில் நிலையாய் நிற்கும் சாதனையாயிருத்தற்பொருட்டுச் செல்லப்பர் இச்சாலம் நிகழ்த்தினர். யோகநாதனைச் சிலநாட்களாகக் காணாத உறவினர் செல்லப்பரிடம் சென்று விசாரித்தனர். அப்பொழுது ஈனப்பிறவி நீக்கவல்ல செல்லப்ப தேசிகர் “அவன் செத்துவிட்டடான் எனக்கூறினர்.

ஈழத்தின் கிழக்குக் கரையோரமாக யாத்திரை செய்த யோகமுனி கிடைத்ததை உண்டார். பொருந்திய இடத்தில் கண்துயின்றார். தமது திருவடிப்பரிசத்தாலே எதிர்ப்பபட்ட தலங்களையெல்லாம் மகிமையுறச் செய்தார். கதிரை செல்லும் வழியில் சித்தாண்டிப்பதியில் சிலநாள் தங்கியிருந்தனர். இதுபற்றிப் பின்னர் “நான் சித்தாண்டியில், வேலுப்பிள்ளை வீட்டில் மூன்று நாட்கள் தங்கினேன்” எனத் தம் அன்பரிடம் கூறினர்.

கதிர்காமத்தை நோக்கிப் புனித யாத்திரையை மேற்கொண்டிருந்த வேளையில் ஒரு நாள் மட்டக்களப்புப் பகுதியிலுள்ள முஸ்லிம் கிராமமொன்றினூடாகச் சென்று கொண்டிருந்தார். அப்போது சிவயோகச் செல்வரின் அந்தரங்கத்தை அறிந்து கொண்ட இஸ்லாமியச் சித்தர் ஒருவர், இவருக்குச் சங்கை செய்ய விரும்பினர். ‘தகரன்’ எனப்பலராலும் அழைக்கப்பட்ட அவ்விஸ்லாமியச் சித்தர் சிவயோகச் செல்வரை விருந்துண்பதற்கு அழைத்தார். சிறிது தயங்கி நின்ற சிவயோகரிடம் ‘உங்களுக்கும் இஸ்லாம் என்று வேறுபாடுளதோ’ எனக் கேட்டனர். சிவயோகரும், சாதிசமயம் எனும் சங்கடத்துக்குள்ளாகாத தமது சற்குரவனை நினைந்தவராய் விருந்தயரச் சென்றார். அங்கே இஸ்லாமிய மரபுக்கு மாறாக இஸ்லாமியப் பெண்களும் ஆண்களுடன் சேர்ந்து தம்மை உபசரித்ததாகப் பின்னர் கூறினர். அவ்விஸ்லாமியச் சித்தர் சிவயோகச் செல்வரிடம் ஒரு காப்பினைக் கொடுத்து ‘இதைக் கையிற் போட்டுக் கொண்டு செல்லுங்கள் ஒரு குறையும் வராது’ எனக் கூறினர். பிற்காலத்தில் அதுபற்றிச் சுவாமிகள் மேல்வருமாறு மொழிந்தனர் “அக்காப்புக் கையிலுள்ளவரை இஸ்லாமியர் மிகுந்த மரியாதை செய்தனர். ஆனால் அன்றிரவு தங்கிய மடத்திலே அந்தக் காப்பைக் கழற்றிவிட்டுச் சென்றேன், எமக்கென்ன தேவை” கதிர்காமயாத்திரையின் போது காட்டு வழியாகச் சென்றுகொண்டிருக்கும் வேளையில் அவருடன் ஒரு முஸ்லிம் மந்திரவாதியும் சென்றார். அப்போது காட்டெருமையொண்று வெருண்டு அவர்களை நோக்கி வெறியுடன் பாய்ந்து வந்தது. மந்திரமொழிகளைக் கூறிநின்ற அம்மந்திரவாதி அவ்வெருமை கிட்டநெருங்கிவிட்டதைக் கண்டதும் தன்னைத் தாக்கிக் கொன்றுவிடுமோ எனப்பயந்து பக்கத்திலிருந்த மரத்திலேறினார். சிவயோகச் செல்வரோ அவ்விடத்தில் நிலையாக நின்றனர். அவருடைய வீரசாந்தத்தின் முன் காட்டெருமை வேகமடங்கி அமைதியாய்த் திரும்பிச் சென்றது. யோகமுனிவர் தனிவழியே நடந்து சென்ற ஒருநாள் பெருக்கெடுத்தோடும் ஆற்றங்கரையொன்றையடைந்தனர். அந்த ஆற்றங்கரையிலே ஈரமணலை அகற்றிப் பள்ளமாக்கி மூன்று நாட்கள் கிடந்தனர். அன்னாகாரமின்றிக் கிடந்த அந்நாட்கள் தேகத்தை மறந்து துரியாதீதத்தில் தூங்கும் நாட்களாயமைந்தன. மூன்றாம் நாள் முடிவில் மூங்கிற் கட்டுமரத்திலேறி ஆற்றைக் கடந்துவந்த வேடர் சிலர், அவரிடத்திலே தெரிந்த தெய்வீகத்தன்மையைக் கண்டு பயபக்தி பூண்டனர். அவரை “உபாசக்காரமாத்தயா” எனும் தமக்கறிந்த சொல்லால் அழைத்துத் துயிலெழுப்பினர். பக்குவமாய்ச் சமையல் செய்து உணவளித்தபின்னர் கட்டுமரத்திலேற்றி அக்கரையில் விட்டனர். கதிர்காமத் திருப்பதியில் சில நாட்கள் உறைந்தனர். நண்பகலின் பின்னர் சிறிதுநேரம் மாணிக்ககங்கை மணலிலே சாய்ந்து ஓய்வு கொள்வதைத் தவிர மற்றைய நேரமெல்லாம் கதிரைமலையிலும், கோயிலிலுமாகக் காலங்கழித்தனர். இரவுமுழுவதும் கதிரைமலை உச்சியிலமர்ந்து தியானசுகத்தில் மூழ்கினர். பகல் வேளையில் கோயில் மண்டபத்திலமர்ந்து சும்மாயிருந்து சுகித்தனர். கதிர்காமத்திலுறைந்து மோனசுகத்தைச் சுகித்த பின்னர் மேற்குக் கரையோரமாகக் கொழும்பை நோக்கிச் சென்றனர். கொழும்பிலே வீதி சுத்தம் செய்பவர்களுடன் சேர்ந்து வீதியோரங்களிலே தங்கினர். அவர் வீதிசுத்தம் செய்பவரிடத்தும், வேடரிடத்தும், சித்தரிடத்தும் ஒரு பொருளையே கண்டனர். அவர் பெரியவர் சிறியவர் எனும் பேதைமையைக் கடந்து நின்றனர். சாதிசமயம் என்பன அவரைச் சங்கடப்படுத்தவில்லை. இயற்கை அவர் சொற்கேட்டு நடந்தது. காட்சியை விட்டுச் சூட்சியைத் தொட்டு நிற்கும் சாதனையாக அவருக்குக் கதிர்காமப் பாதயாத்திரை அமைந்தது. செல்லப்பர் தம்மை அருகில் வைத்துப் பய்ற்றுவித்த உண்மைகளையெல்லாம் இந்நீண்ட பாதயாத்திரையிலே சிவயோகர் தனது சொந்த அனுபவமாக்கிக் கொண்டார். சிலநாட்களின் பின் அவரது பயணம் மலைநாட்டை நோக்கியது. கொழும்பிலிருந்து மாத்தளைக்கு வந்தபொழுது திருவருட்செயல் ஓர் அற்புதம் நிகழ்த்தியது. மாத்தளையில் ‘ஒவசியராகப் பணிபுரிந்த சரவணமுத்து (திரு தில்லையம்பலம் ஓவசியரின் மாமனார்) என்பவரின் கனவிலே ஒரு பெரியார் தோன்றி “அடியாரொருவர் பசியோடும், கந்தைத் துணியோடும் வருகிறார். அவரை எதிர்கொண்டு உபசரி” எனக் கூறிமறைந்தார். மறுநாட் காலை கனவிற் கண்டபடியே அடியவர் ஒருவரைச் சந்தித்து அவர் இன்னாரென அறிந்ததும் மிகவும் மகிழ்ச்சியடைந்தவராய் இல்லத்துக்கழைத்துச் சென்றார். இல்லத்திலே நீராடச் செய்து புதுவேட்டி சால்வை அணிவித்து, அமுதளித்து உபசாரம் செய்து பின் வழியனுப்பி வைத்தார். சிவயோகச் செல்வரும் புகையிரதச் சீட்டுக்குரிய பணத்தை மாத்திரம் பெற்றுக்கொண்டு திரும்பவும் நல்லூருக்கு மீளச் சித்தம் வைத்தனர். இவ்வாறாய் ஆண்டியாகக் கதிர்காம யாத்திரை தொடங்கிய சிவயோகர், புதுவேட்டி சால்வை புனைந்து புகையிரதத்திலேறி யாழ்ப்பாணம் வந்தார். யோகநாதனைக் கண்ட உறவினர் மகிழ்ச்சியும், ஆச்சரியமுமடைந்தனர். அவர்கள் “செத்துப்போனான்” என்ற செல்லப்பர் சொல்லை நம்பிக் கருமாதிகளை யெல்லாம் முடித்திருந்தனர். ஆதலால் செய்வதறியாது திகைத்தனர். அவர்கள் செல்லப்பரிடம் சென்று முறையிட்டனர். செல்லப்பர் “நாங்கள் பொய்சொல்வதில்லை, அவன் செத்துவிட்டான்” என மீண்டும் சொன்னார்.

2.19. தீக்கை
உலகக்கானகத்தில் ‘திக்குவிசயத்தை’ முடித்து, வெற்றியோடு மாவீரனாய்த் திரும்பிவந்த சிவயோகச்செல்வர் தான் பண்டுதொட்டு உறவுபூண்டுள்ள பரமசிவமான செல்லப்பரைத் தரிசித்து அவர் திருவடிகளில் வீழ்ந்து நீராடயுருகிக் கிடந்தனர். தேசிகர் ஞானவித்தையை நன்கு பயின்று கொண்ட நற்றவயோகருக்குப் பட்டமளித்துச் சிறப்புச் செய்ய நாடினர். – சோதனையாவிலும் தேறிய சிவயோகரைச் சும்மா இருக்கும் சூட்சத்தில் மாட்டத் திருவுளம் பற்றினர். – ஞானதீக்கையளித்துத் தானாகச் செய்யத் தருணம் பார்த்திருந்தனர். அத்தருணம் வந்த ஒரு நாள் சிவயோகச் செல்வரைக் கிட்டிச் சென்றனர். உவகை பூத்த முகத்தினராய் உற்று நோக்கினர். அது நோக்கமொன்றறச் செய்யும் நோக்கு; நயன தீக்கை. அவர்தம் செந்நா ஒரு பொல்லாப்புமில்லை எனும் ஓசையை ஏழுப்பியது; அது உளங்குளிரச் செய்யும் வாசக தீக்கை. அவர்தம் திருக்கரத்தில் ஒன்று யோகமுனியைத் தொட்டது; அது வெட்டவெளியில் நிறுத்தும் பரிச தீக்கை. அவர்தம் அடுத்த அருட்கரம் அற்புதமான ஓர் சைகையால் அருவம், உருவம், அப்பாற்கப்பாலாம் அருள்நிலை, அந்தமாதியில்லாச் சொரூபம் என்பவற்றையெல்லாம் அக்கணத்திலே காட்டிவைத்தது; அனைத்துமானதும், அனைத்துக்கும் மூலமானதுமான தலைத் தலத்தைக் காட்டிவைத்த அக்கைக்காட்டு திருவடித் தீக்கையேயாம். அது காண்பதெல்லாம் பொய்யென்று காட்டி வீண்பாவனையெல்லாம் விட்டிருக்கச் செய்தது. ‘சோதிசோதி சிவசோதி’ என்று சிவயோகத்திற் பொருந்தியிருக்கச் செய்தது. சும்மா இருக்கும் சூட்சத்தில் மாட்டி வைத்தது.

ஒரேநிலையில் நின்ற ஒருநோக்கு, ஓர் ஓசை, ஒருதொடுகை, ஒருகைகாட்டு என்பவற்றால் ஒரு நொடிக்குள் இத்தீக்கையைச் செய்தனர் செல்லப்பர். அவர் மண்ணையும் விண்ணையும் எண்ணுமுன்னே ஆக்க வல்லவர். வித்தின்றி நாறு செய்யவல்லவர். கிரியைகளுமின்றித் தினையளவு போதினில் தானாகச் செய்தனர். சிவயோகச் செல்வர் அன்று பெற்ற அநுபூதி அவரை ஒருபோதும் விட்டு நீங்கியதில்லை. இவ்வண்ணம் நல்லூரில் தேரடியில் அவர் கண்ட சிவயோக அனுபவம் பக்குவமாகப் பேணப்படுவதற்குரிய பரமரகசிய அனுபவமே ஆயினும் அதுவே அகம் நிறைந்த பாக்கியமாயிருந்தால் அது அவர்தம் திருவாய் மொழிகளுக்கெல்லாம் ஊற்றாக அமைந்துவிட்டது. அது சில வேளைகளில் தடையதவற்றையும் தகர்த்தெறிந்துவிட்டு வெட்ட வெளியாகவும் பெருகியது.

ஆசான் அருளால் ஆசானாயினார்

செல்லப்பர் அநுபூதிச் செல்வராய்விட்ட சிவயோகச் செல்வரைப் பார்த்து “எங்காவது வேரை விராயைப் பார்” என மொழிந்தனர். வேரை விராயைப் பார்ப்பதற்குப் புறப்படுமுன் குருமணியின் அடையாளமான எதையேனும் கூட வைத்திருக்கும் ஆசையினாலே செல்லப்பதேசிகரின் அருகிலிருந்த பாத்திரமொன்றை ஆர்வத்தோடு பார்த்தார் சிவயோகர். அப்பொழுது செல்லப்பர் “இது உனக்குப் பந்தமோடா” எனும் இடிக்குரலில் அப்பாத்திரத்தைத் தரையிலெறிந்து உடைத்தார். குருவை வேறாகப் பார்த்துப் பத்திசெய்யும் துவைத பாவனைக்கு எழுந்த முதலடியாக அச்செயல் அமைந்தது. சிவயோகர் குருவாக்கை அவ்வாறே தலைமேற் கொண்டு கொழும்புத்துறைச் சந்தியிலிருந்த இலுப்பைமரவேரிற் போயமர்ந்தனர். அவ்வேரிலேயே மழையையும், வெய்யிலையும் பாராது அமர்ந்திருந்தார். இரவிற்பகலில் எந்நேரம் சென்றாலும் அவர் நித்திரையை நீக்கி நினைவாயிருந்தமையைக் கண்டோர் கூறுவர். அவரை வெய்யில் சுடாது; மழை நனைக்காது; அவருக்குத் தூக்கமில்லை. தூங்காமல் தூங்குபவர்அவர். இடையிடையே செல்லப்பர் வந்து சீடனைக் கண்ணுற்றுச் செல்வார். இவ்வாறு தேசிகர் தன்னை நாடி வந்த ஒரு சமயம் சிவயோகர் எழுந்து கும்பிடச் சென்றார்.

யோகசுவாமிகள் ஆரம்பத்தில் உறைந்த இலுப்பைமரம்

குருமணியோ கும்பிட எழுந்த ஞானப்புதல்வனை இடைமறித்து “என்ன இரண்டாகப் பார்க்கிறாய்? ஒன்றாகப்பார்” என்று கூறினார். சிவயோகர் தேசிகமூர்த்தியின் வார்த்தையில் கட்டுண்டு எழுந்தபடியே நின்றார். அவர் இறைவனையும், குருவையும் இரண்டாகப் பார்க்கும் அறியாமையினின்றும் விடுபட்டிருக்கிறார். சிவபெருமானும் தனது சொந்தக் குருமணியும் ஒருவரே என்பதைக் கையில் நெல்லிக்கனியெனக் கண்டுகொண்டிருக்கிறார்.
ஆனால் மாதிருக்கும் பாதியை மறைத்து மனிதர் போலுலாவும் தேசிகமூர்த்தியும் சீடனும் ஒருவராதல் சாலுமோ? மேனிலையடைவதற்குக் குருபதத்தைக் கும்பிட்டுக் கிடக்கும் பாக்கியத்தையும் கடந்து அப்பால் செல்ல வேண்டுமோ? காண்பதெல்லாம் பொய்யென்றும், அவ்வீண்பாவனையெல்லாம் விட்டொழியென்றும் பயிற்றிய ஆசான். இப்பொழுது ஆசானாகிய தன்னையும் காணாதிருக்குமாறு கூறுகின்றனரே! தன் சீடனை ஞானப்பெருவெளியில் குடியிருத்தி வைப்பதற்காகக் குருசீட முறையையும் கடக்குமாறு கூறும் இக் குருபரன் எத்துணைத் தியாகவிநோதராக உள்ளார்; இவ்வாறு சிந்தித்து நின்ற சிவயோகச்செல்வர், தியாகேசரரான செல்லப்ப தேசிகரைப் பனியரும் புதிரும் கண்களுடாகப் பார்த்தார். தேசிக மூர்த்தியும் கருணை பூத்த திருமுகத்தால் நேர் நேராய் நோக்கினார்: புன்னகையோடு “நீயென நானென வேறில்லை: நீயே நான்” எனக் கூறினார். குருபரனின் நோக்கும், வாக்கும் சிவயோகரின் கண்ணின் நீரை மாற்றின: ஆசான் அருளால் ஆசானையும் காணாதவராயினார். அவருக்கு நீ நான் இல்லாத நீங்காத நின்மல நிட்டை பலித்தது. தானான தன்நிலையில் தனியே இருந்தார்.

2.21. சககஸ்திதி
ஞான நிட்டையில் நிலைத்த சிவயோகச் செல்வரிடம் தேசிக வேடம் மீண்டும் ஒரு முறை வந்தது. சிவயோகர் வேறொரு பொருளும் இல்லாத வெட்ட வெளியிலே ஒன்றையும் காணாதவராய் சும்மா இருந்தார். அப்பொழுது செல்லப்ப மூர்த்தம் “பார், நான் ஒரு குரு வந்து நிற்கிறேன்; பேசாதிருக்கின்றாயே” என மொழிந்தது. இந்த நாதம் நற்றவயோகரை அருட்டலாயிற்று. அவர் எழுந்து சென்று தேசிக மூர்த்தியின் திருவடிகளிலே கும்பிட்டுக் கிடந்தார். சிவதொண்டனாய் மலர்ந்து சமூகத்தில் வாழவேண்டிய தமது ஞானப் புதல்வன், தம்மைப்போல பித்தனாகத் திரியாது, உலக ஆசாரங்களைக் கவனமாகப் பேணும் பாடறிந்தொழுகும் பண்பாளனாகத் திகழ வேண்டும் என்பதற்காகச் செல்லப்ப மூர்த்தம் இவ்வழகிய ஆடலை நிகழ்த்தியது. இப்பொழுது சிவயோக சுவாமி ஞானவரம்பான மோனசுகத்தில் கணமும் பிரியாது நிலைத்து நிற்பார். அதேவேளையில் உலகத்தையும் கண்டுகொண்டு உலகாசாரங்களுக்கு இணங்கவும் ஒழுகுவார். அவர் தன்னை மறவாமல் உலக நியமங்களைப் பேணும் சகசஸ்திதியினரான ஞானியாயினார்.

2.22. ஞானவித்தையின் முதலும் முடிவுமான மொழிகள்
மெய்ப்பொருளானது செல்லப்பர், சிவயோகர் எனும் இருவேடங்கள் தாங்கி நல்லையில் அளித்த ஞான நாடகத்திலே செல்லப்பரின் ஆடல் நிறைவுறும் தருணத்தை நெருங்கிக்கொண்டிருந்தது. செல்லப்பர் தமது கொட்டிலிலே சுகவீனமாகக் கிடந்தார். சிவயோகர் உலகாசாரத்துக்கமைய அவரைப் பார்த்து வரச்சென்றார். படலயைை நெருங்கியதும் “யாரடா படலையிலே” எனும் சிம்மகர்ச்சனை கொட்டிலினின்றும் ஒலித்தது. முதன்முதலில் தேரடியிலே கேட்ட “யாரடா நீ” என்பது போன்ற அந்த ஞான வாசகத்தைத் தொடர்ந்து செல்லப்ப மூர்த்தியின் வேதம் நவின்ற நா, “பாரடா வெளியில் நின்று” எனும் முடிந்த முடிபான திருவாய் மொழியை மொழிந்தது. முதலாம் உலக மகாயுத்தம் நடந்து கொண்டிருந்த அக்காலத்திலே ‘இங்கு எத்தனையோ இராசாக்கள் மாண்டு போகிறார்கள்’ என எண்ணியவராய்ச் சிவயோக சுவாமி கொழும்புத்துறை சென்று இலுப்பை மர வேரில் அமர்ந்தார்.

2.23. செல்லப்பா சுவாமிகளின் திருவடிக்கலப்பு
மெய்ப்பொருளானது செல்லப்ப வேடம் தாங்கி, ஏறக்குறைய 55வது வயதுவரை உலகிலே நடமாடி வெம்பந்தம் நீக்கும் வேதாந்த விளக்கை ஏற்றி வைத்த பின்னர். தனது வேடத்தை கலைத்துக் கொள்ளத் தீர்மானித்தது. செல்லப்ப தேசிகர் தன்னுடன் இரவிலே உறங்கவரும் அயலவரொருவரிடம் “இன்று இரவு இங்கு பெரும் புதினம் நடக்கும்: நீ வருவாயோ?” எனக் கேட்டனர். அந்த அயலவருக்கு அன்றிரவு செல்லமுடியவில்லை. அவர் அடுத்த நாட் காலையில் சென்று பார்த்த பொழுது செல்லப்ப வேடமானது சிறு குழந்தையைப் போன்று விரலொன்றை வாயில் வைத்தவண்ணம் காலொன்று மடித்து நடராச பாவத்தில் இருக்க விறைத்துக் கிடந்தது.

சிவயோகசுவாமிகள் செல்லப்பா சுவாமிகளின் ஈமக்கிரியைகளுக்குச் செல்லவில்லை. சுட்டிறந்து நிற்கும் செல்லப்ப சுவாமிகளின் சோதி மயமான நிச சொரூபத்தைக் கையில் நெல்லிக்கனியெனக் கண்டு கொண்டிருந்ததால் அவர் செல்ல வேண்டியிருக்கவில்லை. அறிவுக் கறிவாய் அப்பாலுக்கப்பாலாய் குறிகுணம் அற்றிருக்கும் குருபரனைக் காணக் கண் படைத்து விட்ட சிவயோக சுவாமிகளுக்குச் செல்லப்ப வேடம் கலைந்து போனதால் குறையேதும் உண்டோ?

செல்லப்பா சுவாமிகளது ஈமக்கிரியைகளுக்குச் சிவயோகசுவாமிகள் செல்லாதது குறித்து விதானையார் அவர்கள் சினம் கொண்டார். அவர் ஓர் வெகுளிநினைவுடன் வந்தபொழுது. அவர் புகைத்து எறிந்த சுருட்டுக் குறளினின்றும் மூண்ட நெருப்பால் வைக்கோற் போரொன்று எரிந்தது. வைக்கோலுக்குரியவர்கள் வெகுண்டு விதானையாரையே அடிக்கும்படி ஆயிற்று. அவர் செல்லப்பரின் நினைவாகப் ‘பல்’ ஒன்றைப் பேணிவந்தாரெனவும். அதனையும் ஒருபொழுது காகமென்று தூக்கிச்சென்றுவிட்டதாயும் கூறுவர்.


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home/sivathon/public_html/wp-includes/functions.php on line 4556