உதயம்

சிவயோகசுவாமிகளது சிந்தையிற் குடிகொண்டிருந்த சிவதொண்டன் நிலையம் யாழ் நகரிலே வைத்தீஸ்வரப்பெருமான் தையல்நாயகித்தாயாருடன் அமர்ந்திருக்கும் வண்ணைப்பதியில் 1953 ஆம் ஆண்டு உதயமானது.

வடபால் அமைந்த இச்சிவநிலையம் போன்று இலங்கையின் கீழ் பால் இன்னோர் சிவதொண்டன் நிலையம் சீராரும் சித்தாண்டிப் பதியையடுத்து (செங்கலடியில்) யோகசுவாமிகள் திருவடிக்கலப்புற்ற அதே ஆண்டு அதே திங்களிற் கால்கொண்டது.

சிவதொண்டன் சபை

“சிவதொண்டன் நிலையத்தில் ஆணையாளர்கள் எவருமில்லை”என்பது சுவாமி வாக்கு. அவ்வாறான ஆணையர் ஒருவர் இருப்பரேல் அவர் ‘திருவடி’யாய் வீற்றிருக்கும் சுவாமிகளே என்பது சிவதொண்டன் பணிசெய்யும் தொழும்பர்களின் திடமான நம்பிக்கையாகும். ஆயினும் இந்நிலையங்களை உலக ஒழுங்கின்படி நிருவகிப்பதற்கு ஒரு நிருவாகக் கட்டமைப்பு வேண்டற்பாலதே. உலக ஒழுங்கில் சற்றும் பிசகாத சுவாமிகள் சிவதொண்டன் நிலையங்களை நிருவகிக்கும் பொருட்டுச் சிவதொண்டன் சபையை நிறுவினர்.

சிவதொண்டன் சபையானது இலங்கைச் சனனாயகச் சோசலிசக் குடியரசின் சபைகளுக்கான சட்டத்தின் (Socities Ordinance), சரத்து 3b இன் கீழ்ப் பதிவுசெய்யப்பட்ட மட்டுப்படுத்தப்பட்ட சபையாகும்.