ஆயிலிய நாள் பிரார்த்தனை 13-05-2016

ஆயிலிய நாள் பிரார்த்தனை 13-05-2016

ஐயனே சற்குருநாதா

பல்லவி
ஐயனே சற்குருநாதா – உனை
அண்டிவந் தேனருள் தாதா
துய்யனே சொற்பிர போதா – உனைத்
தோத்திரஞ் செய்தேன் பொற்பாதா (ஐயனே)

சரணங்கள்
ஈயாத புல்லரைக் கூடி – நானும்
இடர்பட் டேன்வெகு கோடி
ஓயாம லுன்புகழ் பாடி – நானும்
ஓடிவந் தேனுனைத் தேடி (ஐயனே)

ஆதார மாறையுந் தாண்டி – அருள்
அம்பலத் தேநின்று வேண்டி
சூதான மனந்தினந் தூண்டி – நானும்
தொடர்ந்துவந் தேனினைந் தாண்டி (ஐயனே)

கூடாத கூட்டத்தைக் கூடி கோடா கோடி துன்பத்துக்கு இரையாகி நொந்து கிடக்கின்றோம். இந்த நோதலின் நீங்குதற்குரிய ஒளிநெறி சற்குருவின் பிரபோத மொழிகளில் தெரிகிறது. அம்மொழிகளைச் சிந்தித்து சற்குருவை ஓயாமல் துதித்து அவரைத் தஞ்சம் புக நாடுகிறோம். அவரை அண்டிச் செல்லும் இடம் யாது? அவரது தரிசனம் எத்தகையதாயிருக்கும்? அவரிடம் செல்லும் போது வெறுங்கையுடன் செல்லலாமா? இவற்றுக்கான விடை இக்கீதத்தின் இறுதிச் சரணத்தில் உளது.

மூலாதாரம் முதல் சகஸ்சாரம் ஈறாகிய ஆறாதாரத்தலங்களையும் தாண்டிச் சென்று சேரும் அருள் வெளியிலேதான் அவரை அண்டி நிற்கலாம். அவர் ஆங்கே அனைத்திற்கும் மூலமுதலான பொற்பாத சொரூபமாகவே தரிசனமளிப்பார். அவரிடம் செல்லும் போது யாதொன்றுமில்லாத ஆண்டியாகவே செல்ல வேண்டும். சூதான மனத்தை அந்த சூதானதற்ற வெளியில் நாசஞ் செய்து சும்மா செல்ல வேண்டும். அத்தகையதான அம்பலத்தில் நின்றே அருள் தாதா என்ற வேண்டுதலைச் செய்ய முடியும்.

சுவாமிகளது இக்கீதத்தின் மூலவடிவம் நாதாந்த வெளியில் நின்று மாசிலோசையாகவே இசைக்கப்பட்டது. அவ் வெளியினின்று நாததத்துவத்துக்கு இறங்கி வந்து சுவாமிகள் இக்கீதத்தை இசைத்திருக்கிறார். இக்கீதத்தை துணையாகக் கொண்டு மூல கீதத்து அநுபவத்தை உணரமுடியுமாயின் அதுவே நன்மோன நிறைவு. இந்த ஆயிலிய நாளின் குறி இதுவேயாகட்டும்.